Home ஆய்வுகள் அழுத்தங்கள் இல்லையெனில் யாரும் போராட்டங்களை கவனத்தில் எடுப்பதில்லை – மட்டு.நகரான்

அழுத்தங்கள் இல்லையெனில் யாரும் போராட்டங்களை கவனத்தில் எடுப்பதில்லை – மட்டு.நகரான்

வடகிழக்கு மாகாணம் தமிழ் தேசியம் சார்ந்து செயற்படுவதன் ஊடாக மட்டுமே தமது இருப்பினை பாதுகாத்துக்கொள்ளமுடியும்.தமிழர்கள் தமிழர்களாக தமது இருப்பினை பாதுகாத்து முன்கொண்டுசெல்வதற்கு தமிழ் தேசியம் என்ற கவசம் மிகவும் இன்றியமையாத விடயம் என்பதை இன்று கிழக்கு மாகாண மக்கள் புரிந்துகொண்டுவரும் நிலைமையினை காணமுடிகின்றது.

mailaththamadu2 அழுத்தங்கள் இல்லையெனில் யாரும் போராட்டங்களை கவனத்தில் எடுப்பதில்லை - மட்டு.நகரான்ஒன்றுபட்ட தமிழ் தேசிய கொள்கையுடன் பயணிக்கும்போதே கிழக்கின் இருப்பு என்பது பாதுகாக்கப்படும் என்பதை நாங்கள் கடந்த காலத்தில் பல தடைவ வலியுறுத்திவருகின்றோம்.அதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தியே வந்திருக்கின்றோம்.அவ்வாறான ஒரு கட்டமைப்பின் தேவை என்பதை அனைவரும் உணர்ந்திருக்கின்றபோதிலும் கிழக்கில் அதற்கான முன்னெடுப்புகளை முன்னெடுப்பதற்கு கழுத்தில் யார் மணி கட்டுவது என்ற நிலையே காணப்படுகின்றது.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நூறாவது நாளையும் தாண்டிய நிலையில் கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் நடைபெற்றுவருகின்றது.இந்த போராட்டத்தினை வெறுமனே பண்ணையாளர்கள் மட்டுமே நகர்த்திச்செல்லும் நிலைமை காணப்படுகின்றது.இந்த நிலைமை கிழக்கினைப்பொறுத்த வரையில் மிகவும் பலவீனமான விடயமாகவே காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் தொடர்ச்சியாக தமிழர்களின் இருப்பு என்பது கேள்விக்குறியாகவேயிருந்துவருகின்றது.

கிழக்கில் தமிழர்கள் சிறுபான்மையினராக மாற்றமடையும் நிலைமை வேகமாக ஏற்பட்டுவருகின்றன.அண்மைக்காலமாக வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் நிலைமை அதிகளவில் தமிழ் மக்கள் மத்தியிலேயே காணப்படுகின்றது.சராசாரியாக மாதம் ஒன்று நூறு பேராவது கிழக்கிலிருந்து புலம்பெயரும் நிலைமையானது தமிழர்களின் இருப்பினை இன்னும் கேள்விக்குட்படுத்தும் நிலைமையே காணப்படுகின்றது.

இந்த நிலைமை கிழக்கினைப்பொறுத்த வரையில் தமிழ் தேசிய அரசியலும் தமிழர் அரசியலிலும் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும்.கிழக்கில் தமிழ் தேசிய அரசியலை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கடைப்பிடித்துவந்தார்கள்.எனினும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய அரசியல் கிழக்கில் சரிவு நிலையினைக்கண்டது.காரணம் தமிழ் தேசிய அரசியலில் பயணித்துள்ள அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் விரக்தி நிலைமையினை ஏற்படுத்தியிருந்தது.

இதன் காரணமாகவே பிள்ளையான் போன்றவர்கள் வெற்றிபெறும் நிலைமையினை ஏற்படுத்தியிருந்தது.அபிவிருத்தி அரசியலை நோக்கி கிழக்கு தமிழர்கள் நகரும் நிலைமையினை ஏற்படுத்தியிருந்தது.கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவேண்டும்,அது தமிழ்; தேசிய அரசியலில் கிடைக்காத நிலையிலேயே மாற்று அரசியலை தேர்வுசெய்யும் நிலைமை தமிழர்களுக்கு ஏற்பட்டது.

எனினும் இன்றைய நிலைமையில் தமிழ் தேசிய அரசியலில் அதிர்ப்தியிருந்தாலும் அபிவிருத்தி அரசியல் என்பது தமிழர்களின் இருப்பினை ஒருபோதும் உறுதிப்படுத்தாது என்பதை இன்று கிழக்கு மாகாண தமிழர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள்.இன்று அபிவிருத்தி அரசியல்,கிழக்கு மீட்பு என்ற கோசங்களுடன் தமிழர்களின் வாக்குகளை கபளீகரம் செய்தவர்கள் இன்று சிங்கள பௌத்த இனவாதிகளுக்கு சாமரம் வீசுவதிலும் தமது பொக்கட்டுகளை நிரப்புவதிலும் கண்ணும் கருத்துமாகயிருக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியம் சார்ந்த செயற்பாடுகளை சிதைப்பதற்கும் தமிழர்களின் போராட்ட உணர்வுகளை சிதைத்து இளம் சமூகத்தின் மத்தியில் தமிழ் தேசியத்திற்கு எதிரான உணர்வுகளை விதைப்பதற்குமான தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.அதற்காக பிள்ளையானுக்கு முழுமையான வேலைத்திட்டங்கள் வழங்கப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

உயிர்த்த ஞாயிறு குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்கள் வெளிவந்த நிலையில் அவற்றினை மூடிமறைப்பதற்காகவும் தமிழ் தேசியம் சார்ந்த செயற்பாடுகளை இல்லாமல் செய்வதற்கும் திட்டமிட்ட வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு பிள்ளையானுக்கு வழங்கப்பட்டு மட்டக்களப்பில் வீதி அபிவிருத்தி என்ற ரீதியில் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.வீதி அபிவிருத்தி என்ற ரீதியில் மக்களை தமது அபிவிருத்தி அரசியலுக்குள் கொண்டுவருவது,தமது சகாக்களை உழைக்கவைப்பது,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மக்கள் மனதிலிருந்து மறைய வைப்பது.இவற்றினை செய்யலாம் என்பதற்காகவே வீதி அபிவிருத்தி என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு இவர்கள் மீது கடுமையான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீதி அபிவிருத்தி என்ற ரீதியில் முன்னெடுக்கப்படும் செலவீனங்கள் என்பது நல்லாட்சிக்காலத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி கடனுதவியில் வழங்கப்பட்ட நிதியில் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கென வீதி அபிவிருத்திக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு அமைவாக ஒதுக்கப்பட்ட நிதியாகும்.ஆட்சிமாற்றத்தின் பின்னர் கோத்தபாய அரசினால் அந்த திட்டங்கள் அனைத்து நிறுத்தப்பட்டு நிதிகள் மீளபெறப்பட்ட ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி திட்டம் மற்றும் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களே இன்று பிள்ளையானால் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறான நிலையிலேயே கிழக்கில் தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்துவதற்கான சிவில் சமூக அமைப்பின் கட்டமைப்பின் அவசியம் உணரப்படுகின்றது.இன்றைய நிலையில் கிழக்கில் செயற்படும் சிவில் சமூக கட்டமைப்புகளானது ஒரு புறம் அரசின் கைக்கூலிகளாக செயற்படுகின்றன அல்லாது விட்டால் அரசசார்பற்ற நிறுவனங்களின் கைக்கூலிகளாகவும் தமது பொக்கட்டுகளை நிரப்பும் கைக்கூலிகளாகவும் செயற்படுகின்றன.

உண்மையில் கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் தற்போது செயற்படும் சிவில் சமூக அமைப்புகள் குறித்து எழுதவேண்டிய தேவையுள்ளது.காரணம் இன்று கிழக்கில் தமிழ் தேசியம் சார்ந்து தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எந்த சிவில் அமைப்பும் இல்லையென்ற நிலைமையே காணப்படுகின்றது.இங்கு காணப்படும் அமைப்புகள் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்,கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம்,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் அதன் சார்ந்த போராட்டங்களை காட்டி தமது வயிறு வளர்க்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்களே தவிர இவ்வாறான போராட்டங்களை மக்கள் மயப்படுத்தி மக்கள் ஆதரவினை திரட்டும் செயற்பாடுகளை ஒருபோதும் முன்னெடுப்பதில்லை.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டம் ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்று வரையில் இவ்வாறானவர்களின் செயற்பாடுகளே காணப்படுகின்றது.இந்த தரப்பினர் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஒருபோதும் கலந்துகொள்ளமாட்டார்கள்.அரசார்பற்ற நிறுவனங்கள் அதிலும் தமிழர்கள் போராட்டத்தினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத அரசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அதன் பிரதிநிதிகளுடன் அதிகளவான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதேநேரம் தமிழர்களின் போராட்டங்களின்போது புலம்பெயர் அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தாங்கள் தமிழ் தேசியவாதிகள் காட்டிக்கொண்டு அவர்களிடம் பணங்களைப்பெற்று ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் நின்றுகொண்டு ஊடகங்களுக்கு தலையைக்காட்டுவதை மட்டுமே செய்துவருகின்றனர்.

இவ்வாறானவர்கள் தமிழ் தேசியத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும். அதன்காரணமாகவே இன்று கிழக்கில் தமிழ் தேசியம் சார்ந்து மக்களை ஒருங்கிணைத்துசெயற்படக்கூடிய தமிழ் தேசியவாதிகளை ஒன்றிணைத்து சிவில் சமூக கட்டமைப்பினை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.இந்த பணிகளை கட்டமைப்பு செய்து அதன் மூலம் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் வலுவான கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது.

அதற்கான படிகள் தற்போது முன்னெடுக்கப்படும் நிலையில் இவற்றினை வடகிழக்கு சார்ந்த கட்டமைப்பாக உருவாக்கவேண்டிய தேவையிருக்கின்றது.

அவ்வாறான கட்டமைப்புகள் உருவாக்கப்படுமானால் இன்று பண்ணையாளர்கள் நூறு நாள் கடந்தும் தாங்கள் மட்டும் போராடும் சூழ்நிலைகள் இல்லாமல்போய் ஒன்றுபட்ட போராட்டமாக வடகிழக்கு சார்ந்த போராட்டமாக முன்னெடுக்கும் சூழ்நிலைகள் ஏற்படும்.அவ்வாறான சூழ்நிலைகள் ஏற்படும்போதே சர்வதேச சமூகமும் இலங்கைக்கு அழுத்தங்களை வழங்ககூடிய சூழ்நிலை ஏற்படும். இல்லாதுபோனால் ஆயிரம் நாட்கள் போராட்டம் நடாத்தினாலும் எந்த போராட்டத்தையும் யாரும் கணக்கில் எடுக்காத நிலைமையே ஏற்படும் என்பதே உண்மையாகும்.

Exit mobile version