Tamil News
Home செய்திகள் அமெரிக்க சென்ற அமைச்சா் பந்துல அவசரமாக கொழும்புக்கு அழைப்பு

அமெரிக்க சென்ற அமைச்சா் பந்துல அவசரமாக கொழும்புக்கு அழைப்பு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.

அவநம்பிக்கை பிரேரணை மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று இடம்பெற்று, பிற்பகல் 4.30க்கு வாக்கெடுப்பு இடம்பெறும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு முரணாக நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஆட்சேபனையை சபாநாயகர் புறக்கணித்தாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

அத்துடன், ஆளுங்கட்சியின் தேவைக்கேற்ப குறித்த சரத்துகளை நிறைவேற்ற, சபாநாயகர் இடமளித்ததாக குற்றஞ்சாட்டி ஐக்கிய மக்கள் சக்தி இந்த அவநம்பிக்கை பிரேரணையை முன்வைத்ததுடன், அதற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

முன்னதாக குறித்த பிரேரணையை இரண்டு நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்ட போதிலும் அது மூன்று நாட்களாக நீடிக்கப்பட்டது.

இதேவேளை, சர்வதேச மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக, அமெரிக்கா சென்ற அமைச்சர் பந்துல குணவர்தன மீண்டும் அவசரமாக நாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

அவநம்பிக்கை பிரேரணையை எதிர்த்து வாக்களிப்பதற்காக ஜனாதிபதியினால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில், அமைச்சர் பந்துல குணவர்தன வொஷிங்டன் விமான நிலையத்தில் இறங்கிய நிலையில், மாநாட்டில் கலந்துகொள்ளாது மீண்டும் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சபாநாயகர் நாடாளுமன்ற மரபுகளை பாதுகாப்பதற்கு தவறியுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் தவறு செய்யும்போது அதனை சுட்டிக்காட்டி சரி செய்யவேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இருக்கின்றது. அதனை செய்ய அதிகாரிகளும் தவறியுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கிம் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version