Home செய்திகள் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் சிவபுரம் கிராம மக்கள். 15 வருடங்களாக குடிசை வீட்டில் வாழும் அவலம்..!...

அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் சிவபுரம் கிராம மக்கள். 15 வருடங்களாக குடிசை வீட்டில் வாழும் அவலம்..! – கோ-ரூபகாந்

தாயகத்தில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்த நிலையிலும் உறவுகளின் வாழ்க்கைக்கான போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நாட்டில் அபிவிருத்தி எனும் போர்வையில் அரசியல் இலாபங்களுக்காக திட்டமிடப்படாமல் செய்யும் வேலைத்திட்டங்களினால் தமிழ் மக்கள் மேலும் பொருளாதார ரீதியில் நசுக்கப்படுகின்றனர்.

ஸ்ரீலங்காவில் கடந்த ஆட்சிக்காலத்திலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வோ அல்லது பொருளாதார நலத்திட்டங்களோ சாத்தியப்படவில்லை தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று வரை ஓலைக் கொட்டகைகளில் அடுத்தவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் வாழ்க்கைக்காக போராடும் குடும்பங்கள், கிராமங்கள் பல உள்ளன.

இவ்வாரம் போருக்கு பின் பாரிய வளர்ச்சி கண்ட வவுனியா மாவட்டத்தின் நகர் பகுதியிலிருந்து 7 கிலோமீற்றர் தொலைவில் வாழும் குடும்பங்களின் அவல நிலையைப் பார்ப்போம்.

வவுனியா மாவட்டம் செக்கட்டிப்புலவு சிவபுரம் என்ற கிராமத்தில் வாழும் மக்களின் நிலையை இலக்கு செய்திப்பிரிவு நேரில் சென்று ஆராய்ந்தது.c6 அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் சிவபுரம் கிராம மக்கள். 15 வருடங்களாக குடிசை வீட்டில் வாழும் அவலம்..! - கோ-ரூபகாந்

சிவபுரம் கிராம மக்கள் 1990 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் இடம் பெற்ற போரினால் இடம்பெயர்ந்து வவுனியாவில் பல முகாம்களில் தங்கியிருந்து அடிப்படைவசதிகள் இல்லாமல் பல ;துன்பங்களை அனுபவித்து வந்தனர். அதன்பின் 1999 ஆண்டு பல கனவுகளுடன் சொந்த ஊரில் மீள்குடியேற்றப்பட்டனர். அன்று களிமண்னால் கட்டப்பட்ட வீட்டில் தான் இன்று வரை வாழ்ந்து வருகின்றனர்.

அடர்ந்த காடுகள் சூழ்ந்த குறித்த கிராமத்தில் வி~ப்பூச்சிகள், பாம்புகள், காட்டு யானைகளின் தொல்லை என பல சவால்களுக்கு மத்தியில் கைக் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். பூர்விக குடிகளாக இருந்த சிவபுரம் கிராம மக்களுக்கு ஸ்ரீலங்கா அரசினால் வீட்டுத்திட்டங்கள் கூட வழங்கமுடியவில்லை.

தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு கிராமத்துக்குள் வரும் அரசியல் வாதிகள் தமது வாக்கு வங்கியை நிறப்புவதற்காக வீட்டுத்திட்டம் வழங்கப்படும், வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும், அரச சலுகைகள் பலவற்றை பெற்றுத்தருவோம், வீதி செப்பனிட்டுத்தருவோம், என பல வாக்குறுதிகளை வழங்குகின்றனர். தேர்தல் காலம் முடிவடைந்து பதவிகள் கிடைத்தபின் வாக்களித்த மக்களை மறந்துவிடுவார்கள் இதன் காரணத்தினால் சிவபுரம் மக்கள் தமது வாக்குரிமைகளைக் கூட பயன்படுத்தாமல் வாழ்ந்து வருகின்றனர்.

இதே வேளை சிவபுரம் கிராமத்தின் அயல் கிராமமான சாளம்பைக்குளம் முஸ்லீம் மக்கள் வாழும் கிராமம் குறித்த கிராமத்திற்கு புத்தளத்தில் நிரந்தரமாக வாழும் மக்களை கடந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லீம் அமைச்சர் ஒருவரின் செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்களுக்கான வீட்டுத்திட்டம் மின்சார இணைப்பு, பள்ளிவாசல், பாடசாலை அனைத்தும் அரச நிதியில் கட்டிக்கொடுத்து சுகபோக மான வாழ்க்கைக்கு வழியமைத்து கொடுத்துள்ளார்.

இருப்பினும் சில மாதங்கள் வாழ்ந்த முஸ்லீம் குடும்பங்கள் காணி வீடுகளை வாடகைக்கு கொடுத்துவிட்டு மீண்டும் புத்தளத்திற்கே சென்று விட்டனர். இந்தியன் அரசின் நிதிப்பங்களிப்பில் கட்டப்பட்ட பல வீடுகளில் இன்று யாருமில்லாமல் ஆடு மாடுகள் அடையும் இடமாக மாறியிருக்கின்றது. ஆனால் அயல் கிராமத்தில் பூர்வீகமாக வாழும் தமிழ் மக்கள் இன்னமும் ஓலைக் கொட்டகைகளிலும், கரக் கூடாரங்களிலுமே வாழ்ந்து வருகின்றனர். தமிழ் அரசியல் வாதிகள் இந்த துன்பியல் சம்பவங்களைக் கண்டும் காணாத மாதிரியும் தமது அரசியலை செய்துவருகின்றமையால் மக்கள் மேலும் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

வீட்டுத்திட்டம், மின்சாரம், மலசலகூடம் குடிநீரென அடிப்படை வசதிகளில்லாமல் அன்றாடம் கூலிவேலை செய்து தற்போதைய நாட்டின் பொருளாதார நிலைக்கு ஈடுகொடுத்து அரைவயிற்று உணவுக்கே போராடும் சிவபுரம் கிராம மக்களின் வாழ்வில் நிலையான மாற்றத்தைக் கொண்டுவர அரசும் , அரசியல் வாதிகளும், மக்கள் பிரதிநிதிகளும் முன்வரவேண்டும்.

இதே வேளை புலம்பெயர் உறவுகளின் உதவிக்கரத்தினாலேயே போருக்குப் பின் தமிழர்தாயக பிரதேசங்கள் ஓரளவு வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. உங்களின் உதவிகளினாலாவது சிவபுரம் கிராம மக்களின் வாழ்வில் ஒளிபிறக்குமென்று நம்புகிறோம்.

இலக்கு வாராந்த மின்னிதழில் தாயக உறவுகளின் அவலங்களை வெளியுலகுக்கு எழுத்து மூலமும் புகைப்படவடிவிலும் வெளிப்படுத்தி உறவுகளின் விடியலுக்காக இலக்கும் உங்களுடன் பயணிக்கும். இதே வேளை மின்னிதழில் வெளியாகும் இந்தக் கட்டுரையின் சாராம்சம் அடங்கிய காணெலியை www.ilakku.org எனும் எமது உத்தியோக பூர்வ செய்தி இணையதளத்தில் பார்வையிடலாம்.

Exit mobile version