Tamil News
Home செய்திகள் வவுனியா வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து சைவ அமைப்பினர் போராட்டம்

வவுனியா வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து சைவ அமைப்பினர் போராட்டம்

வவுனியா வடக்கு எல்லைக்கிராமமான ஒலுமடு வெட்டுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் அனைத்தும் உடைத்து எறியப்பட்டுள்ளது. மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கமும் அகற்றப்பட்டு புதருக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம், வடமான பர்வத விகாரை (Waddamana Parwatha Viharaya) என பௌத்த விகாரையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் அங்கிருந்த மக்கள் வெளியேறியதால் அவ் ஆலயத்திற்குச் சென்று வழிபட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் அவ்விடத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதன் பின்னர் மக்கள் இம் மலைக்குச் சென்று சிவமூர்த்திகளை வழிபட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் அங்கு வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் பல காரணங்களை கூறி தடைவிதித்திருந்த போதும் அத்தடைகளை தாண்டி மக்கள் வழிபாடுகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் 2018இல் இலங்கை தொல்லியல் திணைக்களத்தினர் மற்றும் வனவளத் திணைக்களத்தினர் மீண்டும் மக்கள் இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட தடை விதித்தனர்.

இருந்தும் மக்களின் தொடர் எதிர்ப்பினால் தொல்லியல் திணைக்களத்தினர் தற்காலிகமாக தடையினை நீக்கி வழிபாடுகளை மட்டும் மேற்கொள்ள அனுமதித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை குறித்த ஆலயத்திற்கு மக்கள் சென்ற போது சிவலிங்கம் மற்றும் ஏனைய விக்கிரகங்கள் தூக்கியெறியப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் இருந்துள்ளன.

இந்நிலையில் குறித்த இடத்தின் பெயரும் வடமான பர்வத விகாரை என பௌத்த விகாரையின் பெயரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

 

வவுனியா வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் சைவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டன.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்துக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடிய சைவ அமைப்பின் பிரதிநிதிகள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டன.

இதன்போது, வெடுக்குநாறி எங்கள் சொத்து, வெடுக்குநாறியில் உடைத்த ஆதிலிங்கத்தை மீள பிரதிஸ்டை செய், வெடுக்குநாறியில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டிக்கிறோம் போன்ற கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டது.

Exit mobile version