Home ஆய்வுகள் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் தொடரும் நவகாலனீய அடக்குமுறைகள்

தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் தொடரும் நவகாலனீய அடக்குமுறைகள்

காலனீயக் குடியேற்றங்களை நிறுவும் நோக்குடன் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் இஸ்ரேல் யூத தேசிய நிதியம் மேற்குக் கரையிலுள்ள பாலஸ்தீன நிலங்களை வாங்கி, அவ்வாறு நிலங்களைக் கையகப்படுத்துவதைச் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயற்பாடு எனப் பெயரிட்டு அழைக்கிறது.

தீவிர வலதுசாரிகளான இந்துத்துவ தேசிய அமைப்புகள் பாசிசத் தன்மையுள்ள தங்கள் கொள்கைகளை உலகம் பூராவும் பரப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன் அதனைக் காலனீயத்திலிருந்து மீளுதல் என்றும் இனவாதத்துக்கு எதிரானதென்றும் அழைக்கிறார்கள். அதேவேளை மியன்மாரில் இனவழிப்பை நியாயப்படுத்துகின்ற பௌத்த துறவிகள் ‘அமைதிக்கான சமயம்’ – பௌத்தம் என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்காக அமெரிக்காவில் பல இடங்களில் வரி விலக்களிக்கப்பட்ட பல நிலையங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவமனைகளுக்கும், முற்று முழுதாக வன்முறை ஏதுமற்ற ஏனைய செயற்பாடுகளுக்கும் நிதி அளித்ததற்காக அமெரிக்காவிலுள்ள முஸ்லிம் மற்றும் பாலஸ்தீனத்தைச் சார்ந்த தொண்டு நிறுவனங்கள் பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டு, அவற்றுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்ட அதே வேளை, முஸ்லிம் மக்களுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் எதிராக வன்முறைகளைத் தூண்டுபவர்கள் அரசிடமிருந்து வரிவிலக்குகளைப் பெற்றுக்கொண்டு வருகிறார்கள்.

WhatsApp Image 2021 03 20 at 11.03.50 PM தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் தொடரும் நவகாலனீய அடக்குமுறைகள்

தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்குகின்ற செயற்பாட்டு வலையமைப்பை அப்படிப்பட்ட அபத்தங்கள் வெளிக்கொணர்கின்றன. இவை இராணுவ இயந்திரங்கள், மற்றும் சிறைச்சாலைத் தொகுதிகளைப் போன்று ஆழமாக வேரூன்றியிருக்கும் அடக்குமுறைக்கான கட்டமைப்புகளை உறுதிப்படுத்துகின்றன. இதிலே உள்ள மாறுபாடு என்னவென்றால் தொண்டு நிறுவனங்களைப் பொறுத்தவரையில் அவை நன்மை செய்தல் அல்லது அன்பு செய்தல் என்ற பெயரில் முன்னெடுக்கப்படுகிறது. இங்கே அன்பு (பிறரன்பு) என்பது இலத்தீன் மொழிச் சொல்லான caritas என்ற சொல்லின் நேரடி மொழியாக்கம் ஆகும்.

அமெரிக்காவில் கறுப்பின மக்களின் அடிமைத்தளையை ஒழிக்கப் போராடிய ஆர்வலர்களில் பலராலும் நன்கு மதிக்கப்பட்ட ஒருவரான ரூத் வில்சன் கில்மோர் (Ruth Wilson Gilmore) கூறியது போன்று  பேருபகாரம் (philanthropy) என்பது சமூகத்தில் களவாடப்பட்ட வேதனங்களைத் தனித்தனியாகக் கொடுப்பதாகும். உண்மையில் ரூத் குறிப்பிடுவது போன்று பரோபகாரத்தின் மூலம் பகிர்ந்தளிக்கப்படும் செல்வம் ‘இருமுறை களவாடப்பட்டதாகும்’. இவை அறவிடப்பட்ட வரிகளினால் பெறப்பட்ட இலாபத்தைக் குறிக்கும். பூர்வீகக் குடிகளின் நிலங்களைக் களவாடி உருவாக்கப்பட்ட அமெரிக்க அரசைப் பார்க்கும் போது, அமெரிக்காவில் தொண்டு நிறுவன ஏகாதிபத்தியத்தைப் பொறுத்த வரையில் இது மும்முறை களவாடப்பட்டதாகும். உண்மையில் இது இனவழிப்பை ஒத்த ஒரு செயலாகும்.

எடுத்துக்காட்டாக, யூத தேசிய நிதியத்தின் அமெரிக்கக் கிளை, குஷ் எற்சியோன் (Gush Etzion) இலுள்ள குடியேற்றத் தொகுதியில் மேற்கொள்ளப்படும் கட்டட நிர்மாணத் திட்டங்களில் தாம் வகிக்கும் பங்கு தொடர்பாக வெளிப்படையாகவே விளம்பரம் செய்கிறது. அதே நேரத்தில் “குடியேற்றங்களைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டில் தாம் எவ்வித பங்கும் இப்போதோ அல்லது கடந்த காலத்திலோ வகிக்கவில்லை” என்றும் அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டிருக்கிறது.

பச்சைக் கோடு (Green Line) தொடர்பாக குறிப்பிட்ட அமைப்பு கொடுத்திருக்கும் விநோதமான வரைவிலக்கணத்திலிருந்து இந்தக் குழப்பம் உருவாகியிருக்கலாம். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களிலிருந்து இஸ்ரேலைப் பிரித்துக்காட்டும் கோட்டை இச்சொல்லாடல் குறிக்கிறது. இப் பச்சைக் கோட்டை JNF-USA என்ற அமைப்பு JNF அங்கே நட்ட மில்லியன் கணக்கிலான மரங்களைக் குறிக்கும் என்று ஒருமுறை விசித்திரமாகத் தெரிவித்திருந்தது.

 

JNF USA என்ற அமைப்பின் முன்னணிச் செயற்பாடான நெகேவ் திட்ட வரைபடம் இந்த பச்சைக் கோட்டின் இருபுறத்திலும் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் காலனீய செயற்பாடுகளின் தொடர்ச்சியைக் குறித்து நிற்கிறது. இஸ்ரேலின் 1967ம் ஆண்டுக்கு முன்னரான எல்லைக்குள் இருக்கும் நகாப் (நெகேவ்) பாலைவனத்திலிருந்து பாலஸ்தீன பெடுவின் (Bedouin) குடிகளை அப்பகுதியிலிருந்து அகற்றும் செயற்பாடு தொடர்பான வரைபடம் இதுவாகும். இந்தப் பச்சைக் கோட்டின் இருபுறமும் நடப்பட்டிருக்கின்ற பல இலட்சக் கணக்கிலான மரங்கள், இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட பூர்வீகக் குடிகளின் வாழ்விடங்களின் அழிவுகளை மறைக்கவும் அந்த நிலங்களைக் கபளீகரம் செய்யும் செயற்பாட்டைத் தொடரவும் உதவுகின்ற ஒரு காட்டுப்பகுதியாகவும் திகழ்கிறது.

உதாரணமாக, யூத தேசிய நிதியம் மற்றும் நற்செய்திக் கிறீஸ்தவ ஊடக நிறுவனமான கோட் ரிவி (GodTV) ஆகிய இரு சமய அமைப்புகளின் கூட்டு முயற்சியாக முன்னெடுக்கப்படும் ~கோட்ரிவி வனம்’ பெடுவின் பூர்வீக மக்களின் கிராமமான அல்-அராக்கிப் (Al-Araqib) என்ற கிராமத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது. இந்த கோட்ரிவி நிறுவனமும் அமெரிக்காவில் தொண்டு நிறுவனம் என்ற தரத்தைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இஸ்ரேலில் உள்ள யூத மக்களை ‘இயேசுவின் நற்செய்தி’ என்ற கிறித்தவ பிரிவுக்கு மதம் மாற்றுகிறார்கள் என்னும் குற்றச்சாட்டில் இந்த கோட்ரிவி ஊடகம் கடந்த வருடம் இஸ்ரேலின் ஊடக வலையமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தது. ஆனால் பூர்வீக நிலங்களைக் காலனீயப் பிரதேசங்களாக மாற்றுகின்ற ‘கோட்ரிவி வனத்தின்’ செயற்பாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

மூன்று வாரங்களுக்கு முன்னர் அல்-அராக்கிப் என்ற இந்தக் கிராமம் 183வது தடவையாக இடித்து அழிக்கப்பட்டது. பெடுவின் நாக்பா பிரதேசத்தின் தொடர்ச்சியாக விளங்குகின்ற இக்கிராமம் அயல் வைஸ்மன் (Eyal Weizman) என்பவரின் வார்த்தையில் 90 வீதமான பெடுவின் மக்களின் வாழ்விடங்கள் பாலியல் வன்புணர்வு, படுகொலைகள், இடமாற்றங்கள் போன்ற செயற்பாடுகளின் காரணமாக ~சித்திரவதைக் கிராமங்களாக’ மாற்றப்பட்டிருக்கின்றன.

வன்முறைகள் மூலமாக மக்கள் வெளியேற்றப்பட்டு வெறுமையான நிலங்களாக மாற்றப்பட்ட இந்தப் பிரதேசம் ~சூனியப் பிரதேசம்’ என்றும் “இஸ்ரேல் அரசினால் இப்பிரதேசம் மீட்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவிருக்கிறது” என்றும் JNF USA இன் விளம்பர அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. இது பழைய காலனீயக் கட்டுக்கதையான “terra nullius” அதாவது மக்கள் குடியிருக்காத பிரதேசங்கள் என்ற சொல்லாடலை நினைவூட்டுகிறது. இப்பிரதேசம் அமெரிக்க  JNF இன் நிதியுதவியுடன் விரைவில் அனைவரினதும் கவனத்தை ஈர்க்கும்  ~புதிய உலக சீயோனிச கிராமமாக’ (new World Zionist Village) மாற்றப்படவிருக்கிறது.

இதே வேளையில்  இந்த JNF அமைப்பு தாராள குணத்துடன் வழங்கும் நன்கொடைகளின் பயனாளிகளாக பெடுவின் மக்கள் பெயரிடப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு தான் ஏனைய நாடுகளிலும் குடியேறியவர்களும் பூர்வீகக் குடிமக்களை நோய்களிலிருந்தும் ஏனைய பிரச்சினைகளிலிருந்தும் காப்பதற்கான சேவைகளை வழங்குவதாக தம்மைப் புகழ்ந்துகொண்டார்கள். இந்நோய்களுக்கும் பிரச்சினைகளுக்கும் காலனீயவாதிகளே காரணம் என்பது இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும்.

கோட்ரிவி உடன் JNF கொண்டிருக்கின்ற பிரச்சினைக்குரிய இந்த உறவு சுட்டிக்காட்டுவது போல இஸ்ரேலின் காலனீய ஆட்சிக்கு உறுதியான ஆதரவையும் பெருமளவான நிதியுதவியையும் வழங்கி வருகின்ற அமெரிக்கத் தொண்டு நிறுவனங்களின் கூட்டிணைப்பைப் பொறுத்தளவில் இது ஒரு பகுதி மட்டுமே ஆகும். அமெரிக்க உள்நாட்டு வருமான சேவைகளின் தரவுத்தளத்தை (data base) தற்போது ஒருவர் ஆய்வு செய்தால், அங்கு கிட்டத்தட்ட 30 தொண்டு நிறுவனங்கள் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களுக்கு நிதியை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன என்பதை அந்தக் குறிப்பிட்ட நிறுவனங்களின் பெயர்களிலிருந்தே அறிந்து கொள்ளலாம். குஷ் எற்சியோன் தாபனத்தையோ (Gush Etzion

Foundation) அல்லது ஏரியலின் அமெரிக்க நண்பர்கள் (American Friends of Ariel) போன்ற தாபனங்களையோ இதற்கு உதாரணங்களாகக் காட்ட முடியும்.

‘இஸ்ரேல் சமூகங்களின் கிறீத்தவ நண்பர்கள்’ (Christian Friends of Israeli Communities) என்ற அமைப்பின் உதவியுடன் அமெரிக்க மக்கள் ஒரு குடியேற்றத்தைத் தத்தெடுக்க முடியும். அல்லது ‘இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் நண்பர்கள்’ என்ற அமைப்பின் (Friends of the Israeli Defence Forces – FIDF) உதவியுடன் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் ஒரு சேனையைத் தத்தெடுக்க முடியும். வெளிநாடுகளில் உள்ள இராணுவங்களுக்கு நிதியளிப்பதில் ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் இருக்கின்ற போதிலும் இந்த FIDF என்ற அமைப்பு மட்டும் பிரபலமான நபர்களைக் கொண்டு நடத்தப்படும் கொண்டாட்ட நிகழ்வுகள் மூலம் பல மில்லியன் டொலர்களை வருடாவருடம் இஸ்ரேல் இராணுவத்துக்காகச் சேகரிக்கிறது.

காஸாவிலுள்ள மனிதாயத் திட்டங்களுக்கு அமெரிக்காவில் உள்ள தொண்டு நிறுவனங்கள் நிதி வழங்குவது ஹமாசினால் ஏற்படுத்தப்படும் சாவுகளுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. “ஹமாசுக்கு நிதியுதவி வழங்குவதும்” “ரவையேற்றப்பட்டுச் சுடுவதற்குத் தயாரான ஒரு துப்பாக்கியை ஒரு குழந்தையிடம் கொடுப்பதும் ஒன்று தான்” என வாதிடப்படுகிறது. இதே வேளையில் குடியேற்றங்களுக்கு ஆதரவை வழங்கும் தொண்டு நிறுவனங்களுக்கு எதிராகத் தொடரப்படுகின்ற வழக்குகள் அமெரிக்க நீதிமன்றுகளினால் தூக்கியெறியப்படுகின்றன.

இவ்வாறாக எந்தவிதத்திலும் தண்டிக்கப்படாமல் இருக்கின்ற இந்த இரும்புக் குவிமாடத்திலிருந்து (Iron Dome – எதிரிகளால் ஏவப்படும் ஏவுகணைகளை வானிலேயே தாக்கியழிக்கும் இஸ்ரேலின் அதி நவீன ஏவுகணை எதிர்ப்பழிப்புக் கட்டமைப்பு) தான் குடியேற்ற – காலனீய வாழ்க்கை வட்டத்தின் ஒவ்வொரு படிநிலைக்கும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்குகின்ற நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் பல மில்லியன் டொலரை வாரி இறைத்துக்கொண்டிருக்கின்றன.

பாலஸ்தீன மக்களின் வீடுகளைக் கையகப்படுத்துவதிலிருந்து குடியேறிகளின் இராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்குவதிலிருந்து (இவர்களின் துப்பாக்கிகள் உண்மையாகவே ரவையேற்றப்பட்டிருக்கும்) பாலஸ்தீன மக்களைக் கொலை செய்யும் அல்லது அவயவங்களை இழக்கச் செய்யும் குடியேறிகளை விடுவிப்பது வரை இந்த குடியேறி-காலனீய வாழ்க்கை வட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

பாலஸ்தீன மக்கள் மேல் தாக்குதலைத் தொடுக்கின்ற யூத குடியேறிகளில்  மேல் தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கென உருவாக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய சட்ட அமைப்பான ஹொனேனு (Honenu) என்ற அமைப்புக்கும் குறிப்பிட்ட நபர்களின் குடும்பங்களுக்கும் நிதிவழங்குபவர்களில் அமெரிக்கர்களும் உள்ளடங்குவர்.

குடியேறிகளுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்ளும் ‘கோலியாத்துக்களை’ எதிர்த்துப் போராடும் துணிவும் தைரியமும் நிறைந்த ‘தாவீதாக’ ஹொனேனு அமைப்பு தன்னைக் காட்சிப்படுத்துகிறது. தாவீது வெறும் கற்களை மட்டுமே நம்பியிருந்தார். ஆனால் குடியேறிகளின் இச்சமூகங்களிடம் குறிபார்த்துச் சுடும் கருவிகள், ஆயுதந் தரித்த அங்கிகள், thermal imaging என அழைக்கப்படும் இரவு நேரப்பார்வையை மேம்படுத்தும் தொழில்நுட்பம், இன்னும் கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்படும் அதிநவீன பொறிமுறைகள் என்பன வழங்கப்பட்டிருக்கின்றன. தொண்டு நிறுவனங்கள் வழங்குகின்ற நிதியிலிருந்தே இவை அனைத்தும் கிடைக்கின்றன என்பதை மறந்துவிடலாகாது.

இதே போன்ற கோலியாத்து – தாவீது சிந்தனை இந்துத்துவ, பௌத்த அமைப்புகளாலும் வெளிப்படுத்தப்படுகின்றன. முஸ்லிம்களை எதிர்த்துப் போராடுகின்றோம் என்ற போர்வையில் அவர்களையும் ஏனைய சிறுபான்மை மக்களையும் காலால் மிதிக்கின்ற செயற்பாடுகளை இந்தியாவிலும் மியான்மாரிலும் அவதானிக்கக்கூடியதாகவிருக்கிறது.

இந்து இராச்சியத்தின் புதிய தாயகமாக அமெரிக்கா தற்போது மாறியிருக்கிறது. இந்துத்துவ கொள்கைகளைப் பறைசாற்றும் இணையத்தளங்களை அவதானிக்கும் போது, 2020ம் ஆண்டில் இந்தியாவைவிட அமெரிக்காவில் இருந்து தான் இந்த இணையத்தளங்கள் மிகவும் அதிகமாக இயக்கப்பட்டன. இந்த இணையத் தளங்களில் பல ~இந்து சுயம்சேவக சங்கம் (Hindu Swayamsevak Sangh -HSS) அமெரிக்க விஷ்வ ஹிந்து பரிஷத் (Vishwa Hindu Parishad of America -VHPA) போன்றவை அமெரிக்காவில் தொண்டு நிறுவனங்களாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

உதாரணமாக அயோத்திய விவகாரம் தொடர்பாக இந்திய உயர்நீதிமன்றத்தின் முடிவுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் எடுத்த பதில் நடவடிக்கையை உற்றுநோக்கிப் பாருங்கள். புராதன பாபர் மசூதி இடித்தழிக்கப்பட்டதை எந்தவிதத்திலும் கண்ணோக்காது சட்ட ஒழுங்கை மீறும் மிக மோசமான செயலாகச் சித்தரிக்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான இனங்கலவரங்களைத் தூண்டி, மசூதியை இடித்தழித்த செயலை ஒரு வகையில் சட்டபூர்வமாக்கியது. VHPA  அமைப்பைப் பொறுத்த வரையில் இது “ஐந்து நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த காலனீய அடக்குமுறைக்கு எதிராக அடையப்பட்ட வெற்றியாகும்.”

விமானப் பயணம், பிளாஸ்ரிக் அறுவைச்சிகிச்சை, மரபணு தொடர்பான விஞ்ஞானங்கள் போன்றவற்றைத் தாம் கண்டுபிடித்ததாக மார்தட்டுகின்ற இந்துத்துவ தேசியவாதிகள், காலனீய அடக்குமுறைக்கு இப்போது ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இங்கே இவர்கள் காலனீயவாதிகள் என்று அழைப்பவர்கள் ஏழ்மையில் வாடுகின்ற, அரசியலில் ஓரங்கட்டப்பட்டு பலவிதமான தாக்குதல்களுக்கு உள்ளாகும் சமூகங்களாகும்.

முஸ்லிம் மக்களை ஜிம் க்ரோ (Jim Crow) காலத்தில் அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு இருந்த நிலைக்கு அவர்களைக் கொண்டு போக வேண்டும் என்று சொன்னார்கள். தற்போது அமெரிக்க குடியுரிமைப் போராட்டம், தமது புனித நிலங்களை மீட்கின்ற பூர்வீகக் குடிகளின் போராட்டங்களுடன் தமது அடக்குமுறைச் செயற்பாடுகளை ஒப்பிடும் அளவுக்கு அவர்கள் துணிந்துவிட்டதைக் காணலாம். (இஸ்ரேல் குடியேறிகள் கறுப்பினச் செயற்பாட்டாளரான ரோஸா பாக்ஸ் என்பவருடன் தம்மை ஒப்பிட்டார்கள்).

மனித உரிமைகளைத் துச்சமென மதிக்கின்ற இந்தியக் கொள்கைகளை விமர்சிக்கின்ற அரச செயற்பாட்டை இல்லாமற் செய்கின்ற செயற்பாடுகளை அமெரிக்காவில் முன்னெடுத்து வரும் அதே நேரம், (அமெரிக்க பாராளுமன்ற முற்றுகையில் இந்த அமைப்பின் சில உறுப்பினர்களின் வகிபாகம் மறக்கப்பட முடியாதது) பாபர் மசூதியின் இடிபாடுகளுக்கு மேல் இராமர் கோயிலைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்கு இந்தியாவிலிருந்து உரிய அனுமதியைப் பெறும் முயற்சியில் தற்போது இவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தியாவில் நடைமுறையில் இருக்கின்ற ‘வெளிநாட்டுப் பங்களிப்புகளைக் கட்டுப்படுத்தும் சட்டத்திலிருந்து’ விதிவிலக்கைப் பெறுவதற்காகவே இந்த அனுமதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த சட்டத்தைப் பயன்படுத்தியே வெளிநாட்டு நிதியுதவியைப் பெறுவதாகக் குற்றஞ்சாட்டி பன்னாட்டு மன்னிப்புச் சபையின் இந்தியக் கிளையின் செயற்பாடுகளை மோடி அரசு கடந்த வருடம் முடிவுக்குக் கொண்டு வந்ததுடன்,  மேலும் பல்லாயிரக்கணக்கான சமூக நீதி தொடர்பான அரச சார்பற்ற நிறுவனங்களையும் இலக்கு வைத்தது.

இந்தியாவில் இந்துத்துவ அமைப்புகளுடன் தொடர்புபட்ட பல திட்டங்களுக்கு அமெரிக்காவில் உள்ள பல தொண்டு நிறுவனங்கள் பல மில்லியன் டொலர்களை அனுப்பியதாக 2014ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு சுட்டிக்காட்டியது. “இந்து தேசத்தில் உள்ளும் புறமும் காணப்படும் எதிரிகளுக்கு எதிராக ஆதிவாசிகளைப் பயிற்றுவிப்பதற்காகவே ‘ஒரு ஆசிரியரைக் கொண்ட பாடசாலைகள்’ நிறுவப்பட்டிருக்கின்றன” என்று VHP இன் தலைவர்கள் வெளிப்படையாகவே பேசியிருந்தார்கள்.

மிக அண்மைக்காலத்தில் அமெரிக்க ஏக்கல் தாபனம் ஒழுங்கு செய்த ‘மாற்றத்துக்கான மாநாட்டில்’ 110,000 பேர் லக்னோவில் பங்குபற்றியிருந்தார்கள். இந்த மாநாட்டில் முக்கிய பேச்சாளராகப் பங்கு வகித்தவர் உத்தர பிரதேசத்தின் முதல் அமைச்சரான பாரதீய ஜனதாக் கட்சியைச் சார்ந்த யோகி ஆதித்யநாத் ஆவார். மாற்றத்துக்கான அவரது அவரது திட்டங்கள் எவை என்பதை “முஸ்லிம்கள் பச்சை வைரசுக்கள்” என்ற அவரது கூற்றிலிருந்தே இனங்கண்டு கொள்ளலாம்.

ஆதித்யநாத்தின் சகாவாகத் திகழ்கின்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பவரும் மியான்மாரின் முன்னணி இனவழிப்புத் துறவியுமான சிற்றகு சயாடோ (Sitagu Sayadaw) அமெரிக்கா முழுவதும் வரிவிலக்களிக்கப்பட்ட மத நிலையங்களின் ஒரு வலையமைப்பை நடத்துகிறார். ரோகிங்கியா மக்களின் இனவழிப்புக்குப் பொறுப்பான மியான்மாரின் இராணுவத் தலைவர்களுக்கு ஒரு கையால் தடை ஏற்படுத்தியிருக்கும் அமெரிக்கா, மற்றக் கையால் இனவழிப்பு என்ற நெருப்பை மூட்டிக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய நபருக்கு நிதியுதவியை வழங்கிக் கொண்டிருக்கிறது.

‘பௌத்த பயங்கரத்தின் முகம்’ என்று வர்ணிக்கப்பட்ட அமைப்புக்கு விராத்து (Wirathu) என்ற துறவி கருத்தியல் தந்தையாக இருக்க, ரோகிங்கியா திருமணங்களுக்கும்  பிறப்புகளுக்கும் தடை ஏற்படுத்துகின்ற ‘இன மதப் பாதுகாப்புச் சட்டங்கள்’ என்ற முன்னெடுப்புக்கு பின்னணியாக இருக்கின்ற மபாத்தா (MaBaTha) என்ற அமைப்பின் துணைத் தலைவராக சிற்றகு சயாடோ இருக்கிறார். (இனப்பெருக்கத்தை தடைசெய்வது ஒரு இனவழிப்பு செயற்பாடாகும் என்று ஐநாவின் இனவழிப்பு சாசனமும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற சட்டமும் வரையறை செய்கிறது).

இயற்கைப் பேரிடர் நிவாரணத்துக்கு வழங்கிய பங்களிப்புகளின் மூலம் சிறந்த மனிதநேயச் செயற்பாட்டாளராக வர்ணிக்கப்படும் இந்தத் துறவி, சமகாலத்தில் துறவிகளுக்கும் இனவழிப்பை மேற்கொள்ளும் இராணுவத்துக்கும் இடையே நெருங்கிய உறவு பேணப்பட வேண்டும் என வலியுறுத்தி ரோகிங்கியாவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மனிதப் பேரிடரைத் தூண்டியிருக்கிறார். பன்றிகளையும் காளைமாடுகளையும் போன்று முஸ்லிம் மக்களை வேலிக்குள் வைத்திருப்பதற்காக இஸ்ரேலைப் பாராட்டிய அவர், ரோகிங்கியா முஸ்லிம் மக்கள் முழுமையான மனிதர்கள் அல்ல என்று சொல்லி அந்த மக்களின் படுகொலையை நியாயப்படுத்தியிருக்கிறார்.

சிலுவைப் போரிலிருந்து காலனீய காலம் வரை,  மனிதகுலம் மேல் கொண்ட பற்று என்று சொல்லி முழு மனிதத் தன்மையற்றவர்கள் எனக் கணிக்கப்பட்டவர்கள் மேல் திணிக்கப்பட்ட அடக்குமுறையை நியாயப்படுத்த இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை சிற்றகு சயாடோ வெளிப்படுத்திய கருத்துக்கள் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன.

அரசியல் மெய்யியலாளரான ஹனா அரெண்ட் (Hannah Arendt) தீமையின் வழமை பற்றிச் சொன்னார். ஆனால் இங்கே தீமை நன்மை பயப்பதாக வாதிடப்படுகிறது. வன்முறை சாதாரணமானதாக மட்டும் நியாயப்படுத்தப்படவில்லை. ஆனால் அது அறநெறி ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது எனவும் வாதிடப்படுகிறது.

இப்படிப்பட்ட காலனீய காலத்து பிறரன்புக்கு எதிராக சமூகங்களும் இயக்கங்களும் தமது காலனீயத்துக்கு எதிரான தமது பிறரன்பு வடிவங்களைக் காட்சிப்படுத்துகின்றன. மியான்மாரிலிருந்து தொடங்கி இந்தியா இஸ்ரேல் ஊடாக அமெரிக்கா வரை இனவழிப்புத் தேசியத்துக்கு எதிராகவும் பாசிசத்துக்கு எதிராகவும் இச்சமூகங்கள் சமயங்களுக்கிடையேயும்  சமூகங்களுக்கிடையேயும் உறவைக் கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.

அன்பு (பிறரன்பு) நடைமுறைப்படுத்துப்படும் போது (நல்ல அரசுகள் என்று கருதப்படுபவை அதனைத் தண்டிக்கும் போதும் கூட) அது நீதியாக வெளியில் காட்சியளிக்கின்றது என்று கோணெல் வெஸ்ட் (Cornel West) என்ற மெய்யியலாளர் கூறியிருக்கிறார்.

நன்றி: அல்ஜசீரா

Exit mobile version