Home செய்திகள் ஜோசப் ஆண்டகை பெயரில் புதிய சதுக்கம் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கருத்து

ஜோசப் ஆண்டகை பெயரில் புதிய சதுக்கம் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கருத்து

தமிழர்தாயகத்தில் ஒரு புனிதமான சதுக்கம் உருவாக்கி  பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பெயரிடப்பட வேண்டும் என வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

IMG 0872 ஜோசப் ஆண்டகை பெயரில் புதிய சதுக்கம் - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கருத்து

வவுனியாவில் கடந்த 1505 நாட்களாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போனவர்களின் உறவினர்களால் உயிரிழந்த பேராயர் இராயப்பு ஜோசப்பிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், “பேராயரின் மறைவு, தமிழர்களுக்கும், மனிதநேய செயற்பாட்டாளர்களுக்கும் .பேரிழப்பாகும். அவர் கத்தோலிக்க தெய்வமாக(saint) செயின்ட் ஆக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

போரில்  40,000 தமிழர்கள் கொல்லப்படவில்லை என்று,ஐ.நா குழுவின் அறிக்கையை மறுத்த பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை,  சிறீலங்கா அரசாங்கத்தால் 146,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக உலகுக்கு தெரிவித்தார். “பாதுகாப்பு வலையம்” உள்ளே  சென்ற  தமிழர்களின் எண்ணிக்கைக்கும்,  இறுதியில் “பாதுகாப்பு வலையத்திற்கு”  வெளியேசென்ற தமிழர்களின்  எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தின் உண்மையான கணிதத்தை அவர் வழங்கினார்.

இனப்படுகொலையின்போது 90,000 தமிழ் விதவைகள் மற்றும் 50,000 தமிழ் அனாதைகள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதை பேராயர்  உலகுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் இலங்கை இன போரின் போது மடு மாதாவை அழிவிலிருந்து காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு  சென்றார், தமிழ் தாயகத்தில் நடந்த இனப்படுகொலைப் போரினால் பாதிக்கப்பட்ட ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் ஆற்றிய பணி மதிக்கப்பட வேண்டும்.

எனவே  அன்னை தெரேசாபோல் பேராயர் ஜோசப் இராயப்புவை வத்திகானில் கத்தோலிக்க செயின்ட் தெய்வமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று பாப்பாண்டவரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

கடவுளின் அன்பிற்கு அவர் ஒரு சாட்சி. கடவுளின் நித்திய நீதி மற்றும் அன்பின் ராஜ்யத்தில் இருப்பதை நாங்கள் அறிவோம். அவர் கடவுளின் மகிமையில் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்.தமிழ் தாயகத்தில் ஒரு புனிதமான  சதுக்கம் உருவாக்கி  பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பெயரிடப்பட வேண்டும்”என்றனர்.

நிகழ்வில் அன்னாரது திருவுருவ படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Exit mobile version