Tamil News
Home செய்திகள் அமெரிக்கத்தலையீட்டை கேட்கிறோம் -காணாமல் போனோரின் உறவுகள்

அமெரிக்கத்தலையீட்டை கேட்கிறோம் -காணாமல் போனோரின் உறவுகள்

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக  கோருவதாக, வவுனியாவில் கடந்த 1515ஆவது நாளாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுவருடப் பிறப்பான இன்று அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

“2009 முதல் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு குழந்தையை கூட நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து,  இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதன் மூலம் எந்தவொரு தீர்வையும் காணமுடியாது என்பதை நாங்கள் நிச்சயமாக கண்டறிந்துள்ளோம்.

எந்தவொரு தீர்வையும் அடைய தமிழர்களுக்கு மூன்று தடுப்புக்கள் உள்ளன. முதலாவது புத்த மதகுருக்கள், இரண்டாவது சிங்கள அரசியல்வாதிகள்,  இறுதியாக சிங்களபொதுமக்கள் அவர்கள்  எப்போதும் இனவெறி அரசியல்வாதிகளையே பதவிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள் .

பெப்ரவரி 2017 முதல், எங்கள் போராட்டத்தில் இலங்கையில் அமெரிக்காவின் ஈடுபாட்டைக் கேட்டு வருகிறோம். இலங்கைக்கான அமெரிக்க அழைப்பை பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் சிந்தனையாளர்கள் அனைவரும் நிராகரித்தனர். இப்போது, ​​அனைத்து தமிழ் அரசியல் வாதிகளும், சிந்தனையாளர்களும் ஐநாவில் அமெரிக்காவின் தலையீடு முக்கியமானது என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

எனவே அனைத்து தமிழ் அரசியல் வாதிகளும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக உதவவும், காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் அன்புக்குரியவர்களை கண்டுபிடிப்பதற்கும் அமெரிக்க உதவியை பகிரங்கமாக கேட்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நாளில், சிங்கள இனப்படுகொலை மற்றும் ஒடுக்கு முறையிலிருந்து தமிழர்களை மீட்க அமெரிக்க உதவியை நாம் அனைவரும் கூட்டாக அழைக்கிறோம்.

இலங்கையில் அமெரிக்க தலையீட்டை கேட்டு, ஆயிரக்கணக்கான அமெரிக்க கொடிகளுடன் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மற்றொரு பெரிய ஆர்ப்பாட்டம் தேவை என்பதை தமிழ் தலைவர்கள் உணரவேண்டும்.இல்லையெனில், இந்த தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழர்களுக்கு அல்ல, மாறாக அவர்களின் சுகபோக நல்வாழ்வுக்கும் அவர்களின் அதிகாரத்துக்கும் மட்டுமே”என்றனர்.

Exit mobile version