Home ஆய்வுகள் சிங்கள இனவாத கோர முகத்தின் கவசமே யொகானி – ஆர்த்தீகன்

சிங்கள இனவாத கோர முகத்தின் கவசமே யொகானி – ஆர்த்தீகன்

589 Views

சிங்கள இனவாத கோர முகத்தின் கவசமே யொகானி ஆர்த்தீகன்

சிங்கள இனவாத கோர முகத்தின் கவசமே யொகானி: சிங்கள இனம் தனது இனப்படுகொலையை மறைப்பதற்காக கையில் எடுத்துள்ள மற்றுமொரு ஆயுதமாகவே யொகானி என்ற சிங்களப் பாடகி நோக்கப்பட வேண்டியவர்.

தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகளை மறைத்து, தனது படையினரைக் காப்பாற்றும் முகமாக படையினரைப் பொதுமக்களுக்கான சேவைகள் அனைத்திலும் ஈடுபடுத்திவரும் இலங்கை அரசு, தற்போது ஜோன் கொத்தலாவல இராணுவக் கல்லூரியில் பயின்று, தமிழ் மக்களை பயங்கரவாதிகள் எனப் பாடிப் புகழ் பெற்ற யொகானியை களமிறக்கியுள்ளது. இதன் மூலம் உலகின் கண்களில் இருந்து இனப்படுகொலை இராணுவத்தின் கறைகளை மறைக்க முற்பட்டுள்ளது இலங்கை அரசு. அதாவது தமிழ் மக்களுக்கான நீதியை இல்லாது செய்துவிடுவதே அரசின் நோக்கம்.

இலங்கை அரசு மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்கள் மற்றும் நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக் கூறுபவர்களை எல்லாம் பயங்கரவாதிகள் எனக் கூறுவது இலங்கை அரசின் வழக்கம்.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போரில் அப்பாவி மக்கள் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டபோது, அது தொடர்பில் குரல் கொடுத்த மியா என்ற அருள்பிரகாசம் மாதங்கி என்ற பாடகிக்குக்கூட மிரட்டலை விடுத்திருந்தார் இலங்கையின் அன்றைய வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோஹன்ன.

மாதங்கி இலங்கைக்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. போர் முடிந்த பின்னர் கூட அவர் அங்கு செல்ல முடியவில்லை. அவரும் ஒரு கலைஞர் தான்.

முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் அவர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட போது அவருடன் வந்து தனது தாயகத்தைப் பார்க்க தான் விருப்பம் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஒரு கலைஞரைக்கூட கருத்துச் சுதந்திரம் அற்றவராகவும், பயங்கரவாதியாகவுமே முத்திரை குத்தியிருந்தது இலங்கை அரசு. இவ்வாறு ஏராளமான தமிழ் மக்கள் இலங்கை அரசினாலும், அதற்கு ஆதரவாகச் செயற்படும் அனைத்துலக நாடுகளினாலும் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போதும் சித்தரிக்கப்பட்டு வருகின்றனர்.

இசைப்பிரியா என்ற கலைஞரைக்கூட காட்டுமிராண்டித்தனமாகப் படுகொலை செய்த இராணுவத்தை வழிநடத்திய தனது தந்தையைப் புகழந்து கூட யொகானி ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

அவரது தந்தை மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா இறுதிக்கட்ட போரின் போது 55 ஆவது படையணியை வழிநடத்தியவர். வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்கள், காயமடைந்தவர்களைப் படுகொலை செய்தல், சரணடைந்தவர்களைப் படுகொலை செய்தல் என ஏராளமான போர்க்குற்றங்களை மேற்கொண்ட ஒரு படையணியின் கட்டளை அதிகாரி அவர்.

2012 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட யொகானியின் தந்தைக்கு எதிராக உலகத் தமிழர் பேரவை போர்க்குற்ற வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்த நிலையில், அதில் இருந்து தப்பிப்பதற்காக இலங்கைக்கு அவர் தப்பி ஓடியிருந்தார். அதாவது உறுதிப்படுத்தப்பட்ட போர்க்குற்றவாளி அவர்.

அனைத்துலக அமைப்புக்கள் பல இலங்கைப் படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தியுள்ளதுடன், பல அதிகாரிகளை அடையாளம் கண்டும் உள்ளன. அதில் பிரசன்ன டி சில்வாவும் ஒருவர்.

சில்வாவுக்கு எதிரான சாட்சியங்கள் வலுவாக உள்ளது. இந்த நிலையில் பிரித்தானியா அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது என்பது அவர் தப்பிச் செல்ல வழிவகுக்கும் என பிரித்தானியாவின் மிச்சம் பகுதிக்கான தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சோபியன் மக் டோனா தெரிவித்திருந்தார்.

குற்றம் சாட்டப்பட்ட பிரசன்ன டி சில்வாவைப் பிரித்தானிய அரசு இராஜதந்திர அந்தஸ்து கொடுத்து நாட்டுக்குள் எவ்வாறு அனுமதித்தது என்பதை தன்னால் நம்பமுடியவில்லை என தெரிவித்திருந்தார். இலங்கையில் நீதிக்கும் சமாதானத்துக்குமான அமைப்பின் தலைவர் பிரட் கார்வர்.

இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பெருமளவான சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் கூட காணாமல் போயுள்ளதுடன், பெண்கள், இளைஞர்கள் என பல பத்தாயிரம் தமிழ் மக்கள் இலங்கைப் படையினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல்போயுள்ளனர்.

12 வருடங்கள் கடந்தும் வீதிகளில் கிடந்து தமது உறவுகளைத் தேடிப் போராடி வருகின்றனர் அப்பாவித் தமிழ் மக்கள். ஆனால் இந்த அநீதிகளை மேற்கொண்ட இராணுவத்தைப் புகழ்பாடி அதன் மூலம் பிரபலம்பெற்று, தற்போது இந்தியாவரை சென்றுள்ளார் யொகானி.

வடஇந்தியர்கள் யொகானியைக் கொண்டாடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை, ஏனெனில் அவர்கள் தமிழ் இனத்திற்கு எப்போதும் எதிரானவர்கள். ஆனால் தமிழ் மக்கள் அவரைக் கொண்டாட முற்படுவதே தமிழ் மக்களின் மனங்களை வேதனைப்படுத்தியுள்ளது.

புலம்பெயர் தேசங்களிலும், இந்தியாவிலும், தமிழர் தாகயத்திலும் எத்தனையோ சிறந்த கலைஞர்கள் இருக்கும் போது ஒரு இனப்படுகொலை அரசின் கறைகளை மறைப்பதற்காக களமிறக்கப்பட்டவரை நோக்கித் தமிழக மக்களின் தயவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களும், பாடலாசிரியர்களும் ஒடுவது என்பது அவர்களின் ஆழ் மனதில் உள்ள தமிழ் இனவிரோதத்தைத் தான் காட்டுகின்றதே தவிர, இதில் வேறு எதுவுமில்லை.

யொகானிக்கு வாய்ப்பளித்தால் இலங்கை அரசிடம் நிதியைப் பெறலாம் என்பது தான் இவர்களின் நோக்கமாக இருந்தால், பணத்திற்காகப் பணியாற்றும் இவர்களைக் கொண்டாடுவது என்பது தமிழ் மக்கள் இழைத்த தவறாகவே பார்க்கப்பட வேண்டும்.

பல பத்தாயிரம் மக்களை இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலையங்களுக்குள்ளேயே படுகொலை செய்தவர்களும், சரணடைந்தவர்களைக் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்தவர்களும் இன்றும் தண்டிக்கப்படாது தென்னிலங்கையில் உல்லாசமாக வாழ்கின்றனர். அவர்களைப் புகழ்ந்து பாடும் யொகானி போன்றவர்களை கண்ணீருடனும், இயலாமையுடனும், வேதனையுடனும் பார்த்து நிற்கின்றனர் உறவுகளை பறிகொடுத்த அப்பாவித் தமிழ் மக்கள்.

தனது அரசியல் மற்றும் இராஜதந்திர நலன்களுக்காக விளையாட்டு வீரர்களையும், கலைஞர்களையும் பயன்படுத்துவது சிங்கள அரசின் வரலாறு. ஆனால் அதனை முறியடித்து எமது போராட்டத்தைச் சரியான திசையில் நகர்த்த வேண்டியது தமிழ் இனத்தின் கடமை.

எனவே யொகானி விடயத்தை எதிர்வினையின்றி நாம் கடந்து செல்ல முடியாது. எமது கடுமையான எதிர்ப்புக்களை வெளிக்காட்டுவதுடன், ஒரு இனத்தை அழித்துக் கொண்டு இன்னொரு இனம் நிம்மதியாக வாழ முடியாது என்பதை நாம் எமது செயலில் காட்ட வேண்டும்.

இனப்படுகொலை அரசுக்கும், அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் யொகானி போன்றவர்களுக்கும் ஆதரவு தரும் தமிழக மற்றும் புலம்பெயர் அமைப்புக்களும், தனிநபர்களும் வருங்காலத்தில் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்.

இதனை ஒவ்வொரு தமிழ்க் குடிமகனும் தனது மனதில் ஆழமாக நினைவில் கொள்வானாக இருந்தால், நாம் எமது இலட்சியத்தை அடைவதில் வெற்றி காண்போம்.

அகிம்சைப் போர் ஆயுதப்போராக மலர்ந்தபோது, முதலில் குறிவைக்கப்பட்டவர்கள் எதிரிகள் அல்ல, துரோகிகளே என்பதைத் தான் எம் வரலாறு எமக்கு சொல்லித் தந்துள்ளது.

1 COMMENT

  1. […] சிங்கள இனவாத கோர முகத்தின் கவசமே யொகானி : சிங்கள இனம் தனது இனப்படுகொலையை மறைப்பதற்காக கையில் எடுத்துள்ள மற்றுமொரு ஆயுதமாகவே யொகானி என்ற சிங்களப் பாடகி நோக்கப்பட வேண்டியவர்.  […]

Leave a Reply

Exit mobile version