Home ஆய்வுகள் மோசமடையும் நெருக்கடிகள்: தீர்வைத் தராத கோட்டா அரசு! – அகிலன்

மோசமடையும் நெருக்கடிகள்: தீர்வைத் தராத கோட்டா அரசு! – அகிலன்

 

தீர்வைத் தராத கோட்டா அரசு!

மோசமடையும் நெருக்கடிகள்: தீர்வைத் தராத கோட்டா அரசு!

அகிலன்

நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்து செல்லும் நிலையில், அரசாங்கத்தின் அணுகுமுறை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டுவருவதற்குப் பதிலாக, நிலைமைகளை மேலும் மோசமடையச் செய்வதாகவே அமைந்திருக்கின்றது. நாட்டின் தன்மைக்கு ஏற்றவாறு திட்டமிடப்படாத – அரசியல் நலன்களை மட்டுமே இலக்காகக் கொண்ட பொருளாதாரக் கொள்கை எந்தவளவுக்கு மோசமான விளைவுகளைக் கொண்டு வரும் என்பதற்கு இலங்கை இப்போது உதாரணமாகியிருக்கின்றது.

பின்கதவால் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டு நிதி அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்ட பஸில் ராஜபக்‌சவினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும் இவ்வாறான ஒன்றாகத்தான் காணப்படுகின்றது. எதிர்காலப் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பதையோ அல்லது, மக்களுடைய சுமைகளைக் குறைப்பதையோ இலக்காகக் கொண்டதாக இந்த வரவு செலவுத் திட்டம் அமைந்திருக்கவில்லை. பதிலாக சில அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே அது அமைந்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு மேலும் சுமைகளை அதிகரிப்பதாகவே இந்த வரவு செலவுத் திட்டம் வந்திருக்கின்றது. நிவாரணங்களை எதிர்பார்த்த மக்களுக்கு, சுமைகளே அதிகரித்திருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பில் நடத்தப்பட்ட எதிர்ப்புப் பேரணியில் பெருந்தொகையான மக்கள் தடைகளையும் தாண்டி கலந்து கொண்டமைக்கு அரசின் மீதான அவர்களின் அதிருப்தியே காரணம். ஆனால், இந்த அதிருப்தியை அறுவடை செய்யக் கூடியளவுக்கு ஆளுமையுள்ளவராக சஜித் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த வரவு செலவுத் திட்டம் இவ்வாறுதான் அமையும் என்பது பொருளாதார நிபுணர்களால் ஏற்கனவே எதிர்வு கூறப்பட்டிருந்தது. ஆனால், பஸில் ராஜபக்‌ச மக்களின் சுமையைக் குறைப்பார் என்ற நம்பிக்கை ஆளுந் தரப்பினரால் முன்வைக்கப் பட்டிருந்தது. இது மக்களுக்கு ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அந்த எதிர்பார்பப்புக்கள் அனைத்தையும் புஸ்வாண மாக்கியுள்ளது பஸிலின் வரவு செலவுத் திட்டம். கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் விலைவாசி உயர்வு, அத்தியவசியப் பொருட்களுக்குத் தொடரும் தட்டுப்பாடு என்பவற்றுடன் அதிகரித்துள்ள அரசின் கெடுபிடிகள் என்பன அரசின் மீதான அதிருப்தியை அதிகரித்திருக்கின்றன.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் அனைத்துக்கும் கொரோனா பெரும் தொற்றுதான் காரணம் எனக் கூறிக்கொள்ள முனைகின்றது. இந்த நிலைமைக்கு கொரோனா ஒரளவுக்குக் காரணமாக இருந்தாலும், அதனை மட்டும் சொல்லிவிட முடியாது என்பதே உண்மை! அதேவேளையில், அவசரம் அவசரமாக எம்.பி.யாக்கப்பட்டு, நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட பஸில் ராஜபக்‌சவினால் இந்த நிலைமைகளைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாது என்ற யதார்த்தத்தை மக்கள் இப்போது புரிந்து கொண்டிருக் கின்றார்கள்.

இலங்கையின் பொருளாதாரம் பெரும் தொற்று ஏற்படுவதற்கு முன்னரே மந்த நிலையில்தான் இருந்தது. குறிப்பாக 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த நிலைமை காணப்பட்டது. அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் இதற்குக் காரணம். வருமானம் தராத துறைகளில் அரசாங்கம் பெருமளவு முதலீடுகளை நீண்ட காலமாகவே செய்துகொண்டிருந்தது. பாரிய நட்டத்தில் செயற்படும் பல அரச நிறுவனங்கள் இருக்கின்றன. இலங்கை மின்சார சபை, போக்குவரத்துச் சபை, சிறிலங்கன் எயார் லைன்ஸ் என்பவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லமுடியும். இந்த நிறுவனங்கள் மூலமாக வருடாந்தம் வரும் கோடிக்கணக்கான நட்டம் மக்களின் தலைகளிலேயே சுமத்தப்படுகின்றது.

இவை தொடர்பில் அரசாங்கத்திடம் சரியான பொருளாதார முகாமைத்துவம் இருக்கவில்லை. ஆக்கபூர்வமான திட்டமிடல் இருக்கவில்லை. அதனைவிட ஊழல் மோசடிகளும் மலிந்திருந்தது. இது கொரோனாவுக்கு முன்னரே காணப்பட்ட நிலை. கொரோனாவுக்குப் பின்னர் இந்த நிலை இன்னும் மோசமடைந்திருக்கின்றது.

பெருந்தொற்றின் தாக்கத்தினால், வெளிநாட்டு வருமானம் பெருமளவுக்கு குறைந்தது. குறிப்பாக, மத்திய கிழக்கில் பணிபுரிந்த ஆயிரக் கணக்கானவர்கள் வேலையிழந்து நாடு திரும்பினார்கள். இலங்கைக்கு அதிகளவு அந்நியச் செலவாணியைத் தேடித் தரும் துறையாக மத்திய கிழக்கு வேலை வாய்ப்புதான் இருந்தது. மேற்கு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் அனுப்பி வைக்கும் பணம் பெருமளவுக்கு வீழ்ச்சியடைந்தது. உல்லாசப் பயணத்துறை முற்றாக ஸ்தம்பிதமடைந்தது. அதேபோல தொடர்ச்சியாக பல வாரங்கள் நாடு முடக்கப்பட்டிருந்தமையால், உள்நாட்டு வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. ஏற்றுமதி செய்யப்படும் ஆடைக் கைத் தொழில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

ஆக, ஏற்கனவே இருந்த பொருளாதார நெருக்கடிக்கு மேலாக, உள்நாட்டு, வெளி நாட்டு வருமானங்களில் பாரிய வீழ்ச்சியை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குறுகிய காலத்துக்குள் இவ்விதம் இரண்டு வகையான (அதாவது உள்நாட்டு வெளிநாட்டு) வருமானங்களையும் இழந்த ஒரு நிலையை இலங்கை கடந்த காலங்களில் எதிர் கொள்ளவில்லை. இது பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் நாட்டைக்கொண்டு சென்றது. பெருந்தொற்று – அதனால் ஏற்பட்ட முடக்கம் என்பன சர்வதேச ரீதியான நெருக்கடியாக இருந்தாலும் கூட, அதற்கு ஈடுகொடுக்கக்கூடிய விதமான உபாயங்கள் எதுவும் இலங்கையிடம் இருக்கவில்லை. வரவு செலவுத் திட்டத்தில் கூட அதனைப் புரிந்துகொள்ள முடிகின்றது.

போர் முடிவடைந்து 12 வருடங்கள் சென்றுள்ள நிலையில்கூட, பாதுகாப்புக்குத்தான் பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இது பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. கடும் பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் கூட 15 வீதமான நிதி அதாவது, 373 பில்லியன் ரூபாய் பாதுகாப்புச் செலவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 14 வீத அதிகரிப்பாகும்.

பாதுகாப்புக்கு இந்தளவு நிதி ஒதுக்கப்பட வேண்டிய தேவை என்ன என்ற கேள்வியை பிரதான சிங்களக் கட்சிகள் கூட எழுப்புவ தில்லை. காரணம், பெரும்பான்மையின மக்கள் மத்தியில் இதற்கு ஆதரவுள்ளது. நாட்டின் பாதுகாப்பு என்பது சிங்கள – பௌத்த தேசிய வாதத்துடன் தொடர்புபட்டதாகப் பார்க்கப்படும் நிலை உள்ளதால், இது குறித்த கேள்விகளை எழுப்புவது தமது அரசியலைப் பாதிக்கும் என்பதால் ஜே.வி.பி. உட்பட எந்தவொரு சிங்களக் கட்சியும் இவ்விடயத்தில் மௌனமாகவே இருக்கின்றன. மறுபுறத்தில், ஒதுக்கப்படும் இந்தளவு பாரிய தொகை எங்கே எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என்பதற்கும் கணக்குக் காட்டப்படுவதில்லை. அவை ‘தேசிய பாதுகாப்பு இரகசியங்கள்’ எனக் கருதப்படுவதால் அதனையிட்டும் யாரும் கேள்வி எழுப்புவதில்லை.

கல்வி சுகாதாரம் என்பவற்றுடன் ஒப்பிடும் போது பாதுகாப்புக்கு பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது பொருளாதார நிபுணர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றது. வளர்ச்சியடைந்துவரும் நாடுகளைப் பொறுத்தவரையில் கல்வி, சுகாதாரம் என்பனவே அதிகளவு ஒதுக்கீட்டைப் பெறும் முறைகளாக இருக்கின்றன. ஆனால், இலங்கை அவ்வாறான அணுகுமுறையைக் கையாளாததால், மக்கள் எதிர்பார்த்த நிவாரணங்களை அரசினால் வழங்க முடியாமல் போயுள்ளது.

அதேவேளையில், வெளிநாட்டு வருமானங்களை அதிகளவுக்குப் பெற்றுக் கொள்ளத் தக்க வகையில் ஏற்றுமதிகள், உற்பத்திகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை. இலங்கையின் பாரம்பரிய ஏற்றுமதிகளான தேயிலை, தெங்கு, றபர், வாசனைத் திரவியங்கள் என்பவற்றுக்கு மேலதிகமாக அண்மைக்காலத்தில் ஆடை ஏற்றுமதிதான் வெளிநாட்டு வருமானத்தைத் தேடித் தரும் பொருளாக உள்ளது. கொரோனா அதிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இலங்கையின் செலவீனங்களுக்கு இவற்றின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை. இதனால், கடன்பட வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

வருமானம் இல்லாததால் கடன்களுக்கான வட்டியைச் செலுத்துவதிலேயே தடுமாறும் நிலை அரசுக்கு ஏற்படுகின்றது. இலங்கை அரசாங்கத்தின் செலவீனத்தில் சுமார் 50 வீதம் இவ்வாறு கடன்களையும், வட்டியையும் செலுத்துவதற்கே போய்விடுகின்றது. மிகுதியாகவுள்ள 50 வீதத்தில் 30 வீதம் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்துக்குத் தேவையாகவுள்ளது. மிகுதி 20 வீதத்தில்தான் அபிவிருத்திகளுக்கு பயன்படுத்த முடியும். இந்த நிலையில் அத்தியவசியத் தேவைகளுக்கே அரசாங்கம் கடன்பட வேண்டியது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது.

இதேவேளையில், தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த மாதம் பல பில்லியன் ரூபாய்கள் அரசாங்கத்தினால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இது உற்பத்தியைப் பெருக்காமலே வருமானத்தைப் பெற்றுக்கொள்வதற்கான அரசின் உபாயமாகும். வரிகளை அதிகரித்து வருமானத்தைப் பெறமுற்படும் போது, மக்களின் அதிருப்தி – எதிர்ப்பு வலுவடையும். ஆனால், பணத்தை அச்சிட்டு வருமானத்தைப் பெறும்போது அது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால், இது பாரியளவில் பணவீக்கததை ஏற்படுத்தும். அத்தியவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் இதனால் அதிகரிக்கும். இலங்கையில் இதனை இப்போதே உணர முடிகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங் களுக்கு நட்டஈட்டை வழங்குவதற்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காணாமலாக்கப் பட்டவர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், நட்டஈட்டைக் கொடுப்பதன் மூலமாக மட்டும் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. அவர்களுடைய உறவுகள் அதனை ஏற்கவும் போவதில்லை. தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கோரிக்கை. ஆக, வெறுமனே சர்வதேச சமூகத்துக்குக் காட்டிக் கொள்வதற்கான ஒரு உபாயமாக மட்டுமே இந்த ஒதுக்கீடு அமையப்போகின்றது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதி இறுதியில் யாரிடம் போய்ச் சேரப்போகின்றது என்பது வெளிவராத செய்தியாகவே போய்விடலாம்.

சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து கடந்த சில மாதங்களாகவே போராட்டங்களை நடத்திய அதிபர், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வை வழங்கவும் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால், இந்தளவு பொருளாதார நெருக்கடிக்குள் நாடு உள்ள நிலையில் அதனை படிப்படியாகச் செய்திருப்பதே பொருத்தமானதாக இருந்திருக்கும். அதேவேளையில், இது ஏனைய துறைகளில் உள்ளவர்களையும் போராடத் தூண்டும். ஆக, உள்நாட்டு அரசியல் பிரச்சினை ஒன்றை சமாளிக்க இதனை அரசாங்கம் செய்து புதிய பிரச்சினைக்குள் சிக்கப் போகின்றது.

பொருளாதார விற்பன்னர் என வர்ணிக்கப்பட்ட பஸில் ராஜபக்‌ச இலங்கையைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கப் போகின்றாரா அல்லது அதளபாதாளத்தில் தள்ளப்போகின்றாரா?

 

Exit mobile version