Home செய்திகள் அனைத்துலக வறுமை ஒழிப்புத் தினத்தில் ஈழத்தமிழர் வறுமை ஒழிப்புக்கான சில சிந்தனைகள் – சூ.யோ.பற்றிமாகரன்

அனைத்துலக வறுமை ஒழிப்புத் தினத்தில் ஈழத்தமிழர் வறுமை ஒழிப்புக்கான சில சிந்தனைகள் – சூ.யோ.பற்றிமாகரன்

ஈழத்தமிழர் வறுமை ஒழிப்புக்கான சில சிந்தனைகள்

– சூ.யோ.பற்றிமாகரன்

அனைத்துலக வறுமை ஒழிப்புத் தினத்தில் ஈழத்தமிழர் வறுமை ஒழிப்புக்கான சில சிந்தனைகள்: வாய்ப்புக்கள் மறுக்கப்படுதல், வளர்ச்சிகள் தடுக்கப்படுதல் வறுமை அதனை அரசாங்கமே திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளல் மனிதகுல அழிப்பு இதை மாற்றிடப் புலம்பதிந்த தமிழர் குடைநிழல் அமைப்பு நிறுவப்படல் அவசியம்.

உலக வறுமை ஒழிப்பு தினம்

அக்டோபர் 17ஆம் திகதியை உலக வறுமை ஒழிப்பு தினமாக ஐக்கிய நாடுகள் சபை கொண்டாடி வருகிறது. வறுமை என்றதுமே உடனடியாக நாளாந்த வாழ்வுக்கான நிதிவளப் பற்றாக்குறை அல்லது நிதியின்மை என்றே கருதப்படுவது வழமை. உண்மையில் வறுமை என்பது, ஒரு மனிதன் தன்னுடைய திறமைகளைக் கொண்டு தனக்கான வாழ்வை அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுதல் என்பதாக அமைகிறது.

விளக்கமாகச் சொல்வதனால், மனிதனுடைய இயல்பு வளர்ச்சிகள் அகப் புறக்காரணிகளால் தடுக்கப்படுதல், அவனை வறுமையடையச் செய்கிறது. குடும்ப –  சமுதாய வழமைகளாக்கப்பட்டுவிட்ட  சாதி, மத, மொழி, நிற, இன வேறுபாடுகளும், உள்ளவர் இல்லாதவர், படித்தவர் படியாதவர் நகரத்தவர் கிராமத்தவர் என்னும் பாகுபாடுகளும், பொருளாதாரச் சமபகிர்வு இன்மைகளும், ஆசாரம், தீட்டு, துடக்கு என்னும் ஆன்மிக அடக்குமுறைகளும் என்பனவும் ஒரு மனிதனின் சிந்தனையை அடிமைப்படுத்தும், தனிமைப்படுத்தும் முயற்சிகள் ஆகின்றன. இவற்றின் வழி  தோன்றுகிற மனித சமத்துவமின்மை மூலவளப் பகிர்வின்மை வறுமைக்கான மூல காரணிகளாகின்றன. சுருக்கமாகச் சொன்னால், மனித சுதந்திரம் மறுக்கப்படுதல் அல்லது தடுக்கப்படுதல் வறுமை நிலைக்கு ஒரு மனிதனைத் தள்ளுகிறது. இதனைப் பண்பாகக் கொண்ட சமுதாயம் அடிமைச் சமுதாயமாகிறது.

ஒரு மனிதனின் மேல் தனது மேலாதிக்கத்தைச் செலுத்தி, அவனை ஒடுக்கி, அவனுடைய உழைப்பை, உரிமைகளை, உணர்வைச் சுரண்டுகிற சமூக, பொருளாதார, அரசியல், ஆன்மிக வேறுபாடுகளை உருவாக்குபவர்களே வறுமையைத் தோற்றுவிக்கும் உற்பத்தியாளர்கள். மனிதன் பலவிதமான புறக்கணிப்புக்களால் தனிமைப்படுத்தப்பட்டு, அவனுடைய மனதில் வாழ்வதற்கான நம்பிக்கை திட்டமிட்ட முறையில் பலவீனப்படுத்தப்படும் பொழுது, அம்மனிதன் வறுமை என்னும் வெறுமைக்குள் சிக்குப்படுவான்.

வெறுமை உள்ளத்தில் உருவாக்கப்பட்டாலே ஒருவருக்கு அவருடைய அருமைகளைப் பெருமைகளை இயல்பான செயற்பாட்டுத் திறமைகளை மறக்க வைக்க முடியும். இதன்வழியாக அவரைத் தங்கி வாழ்தல் நிலைக்குள் தள்ள முடியும். தங்கி வாழும் மனிதன் தன் சுதந்திரத்தை அதாவது தன்னுடைய திறமைகளைப் பயன்படுத்தி, தான் வாழ்வதற்கான கட்டற்ற அகப் புறச் சூழலை இழந்து விடுவான். இதுவே ஆள்பவர்களை ஏற்றுப் பணியும் அடிமை நிலைக்கு அல்லது, ஆள்பவர்களைத் தொழுது, மனதில் அழுது வாழும் அவல நிலைக்கு அவனை இட்டுச் செல்கிறது.  இது அந்த ஆள்பவர்கள் தனக்குச் செய்யும் அதே அடிமைப்படுத்தலைத் தான் பிறர்க்குச் செய்து, தன்னை நிலைநிறுத்த வேண்டுமென்கிற உந்துதலை அவனுக்கு அளித்து, ஒவ்வொரு நிலையிலும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை பணத்தால், அதிகாரத்தால் அடிமைப்படுத்தி வாழும் இன்றைய வாழ்வியலை உருவாக்குகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதனைச் சட்டத்தின் முன் அனைவரையும் சமமாக்கி, வாழ்வைச் சமப்படுத்தி ஆளவேண்டிய அரசுகளே சட்டத்தின் ஆட்சியை மறுத்து, வறுமையை மக்கள் வாழ்வாக்குகின்றன.  இதற்குத் தலைசிறந்த உதாரணம் சிறிலங்கா அரசு. இலங்கைத்தீவில் ஈழத்தமிழ் மக்களை இனஅழிப்பின் மூலம் அடிமைப்படுத்த கடந்த 49 ஆண்டுகளாக ஈழத்தமிழர்களுக்குச் சிங்களவர்களுடன் சட்டத்தின் முன்  அவர்கள் சமனென்ற சட்ட ஆட்சியை சிங்கள அரசுகள்  மறுத்து, ஈழத்தமிழர்களை வறுமைப்படுத்தி வருகின்றன.

22.05.1972 இல் சிங்கள பௌத்தக் குடியரசு ஆட்சிப் பிரகடனத்தால் ஈழத்தமிழர்களை ஆளும் சட்ட உரிமையை இழந்து விட்ட சிறிலங்கா அரசாங்கம், அவர்களை நாடற்ற தேச இனமாக்கியது. அரசற்ற நிலையில் உள்ள ஈழத்தமிழர்கள் தங்களின் தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தித் தங்களுக்கான நடைமுறை அரசை உருவாக்கித் தம்மைத் தாமே ஆள்கின்ற சட்ட ஆட்சியை நிறுவிய பொழுது, அதனைத் தொடர்ச்சியான இனஅழிப்பு நடவடிக்கைகளால் அழித்து ஒழித்து வந்த சிறிலங்கா,  18.05. 2009 முதல் இன்று வரை ஈழத்தமிழர்களின் வறுமை வாழ்வுக்கு – வெறுமை மனநிலைக்கு மூல காரணமாகிறது.

இலங்கை அரசாங்கம் என்னும் பிரித்தானிய காலனித்துவம் உருவாக்கிய சோல்பரி அரசியலமைப்பின் வழியான ஆட்சி முறைமையிலும் 02.04.1948 முதல் 22.05. 1972 வரை கால் நூற்றாண்டு காலம் தமிழர்களின் நிலவளங்களை, கடல்வளங்களை, காட்டு வளங்களை ஆக்கிரமித்தல், தமிழர்களின் தொழில் வளங்களை, வர்த்தக முயற்சிகளை முடக்கல்,  மூளைப்பல ஆற்றல்களை கல்விக்குத் தரப்படுத்தலைக் கொண்டு வந்து சிதைத்தல், என்னும் ஆட்சி முறைமையே வெளிப்பட்டு ஈழத்தமிழர்களை வறுமைக்கும் வெறுமைக்கும் உள்ளாக்கியது.  இந்தக் காலகட்டத்தின் அரசியல் தலைவராக விளங்கிய எஸ். ஜே வி செல்வநாயகம் அவர்கள் 1975இல் பாராளுமன்றத்தில் இன்றைய சிறிலங்கா அரசாங்கம் என்பதில் இருந்து ஈழத்தமிழர்கள் வெளியேறி தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே உருவாக்கிட வேண்டுமென்ற உறுதியான முடிவை உலகுக்கு வெளிப்படுத்தினார்.

1972 முதல் 2009 வரை தேசியத் தலைவராக விளங்கிய வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், தந்தை செல்வநாயகம் உருவாக்க அழைத்த ஈழத்தமிழர்களுக்கான அரசியல் எதிர்காலத்தை உருவாக்கும் பணியைப் பெறுப்பேற்று, தமிழீழம், தமிழீழ மக்கள், என்னும் தேச இனத்துவ அடையாளப்படுத்தல்களுடன் கூடிய நடைமுறை அரசை, ஒரு அரசுக்குரிய பாதுகாப்பான அமைதியைப் பேணுவதற்கான சீருடை தாங்கிய முப்படையினர், நாட்டை முகாமைத்துவப்படுத்தும் நிர்வாகக் கட்டமைப்புக்கள், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் சட்டநீதிமன்ற அமைப்புக்கள் என்பவற்றுடன் நடத்தி, அதற்கான உலக ஆதரவை வேண்டி நின்றார்.

இந்த தமிழீழ மக்களின் அரசு நோக்கிய அரசில் தமிழர் பொருண்மிய மேம்பாட்டு மையம், தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்னும் மூன்று கட்டமைப்புக்கள் மூலமும், செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை போன்ற சிறுவர்களுக்கான ஆதரவுக் கட்டமைப்புக்கள் வழியாகவும் தமிழீழ நிதி வைப்பகம் என்னும் மக்களுக்கான வங்கி அமைப்பாலும், முழு அளவில் வறுமையை ஒழிப்பதற்கான நடைமுறை அரசின் திட்டங்களை முன்னெடுத்திருந்தார் என்பது உலகறிந்த விடயம்.

ஆயினும் மக்கள் மேலும் அவர்கள் வாழ்விடங்கள், தொழிலகங்கள், பள்ளிக்கூடங்கள், கோயில்கள், சந்தைகள் போன்ற மக்கள் வாழ்வியல் கட்டமைப்புக்கள் மேலும் எறிகணைத் தாக்குதல்கள், விமானக் குண்டு வீச்சுக்கள் என்பவற்றை ஒரு பகைநாட்டின் மேல் நடத்துவது போல தொடர்ச்சியாக நடத்தி, ஈழத்தமிழ் மக்களின் வறுமை நிலையை மீள் நிறுவி, அவர்களது வறுமையைச் சிறிலங்காவைச் சார் வறுமையாக சிறிலங்கா அரசாங்கம் மீள்நிலைப்படுத்தியது.

புலம்பதிந்த தமிழர்களுக்கான வங்கி குடைநிழல் அமைப்பு

இந்நிலையில் ‘தமிழரின் கண்ணியமான வாழ்வு’ உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்னும் இந்தியாவும் ஈழத்தமிழர்களுடைய வறுமையை வளர்த்தல்  வழி சிறிலங்கா அரசாங்கம் தனது மேலாதிக்க ஆட்சியை ஈழத்தமிழர்கள் மேல் நிறுவிட முயல்கிறது என்பதைக் கவனத்தில் எடுக்காது, சிறிலங்காவுக்குப் பலவழிகளிலும் பக்கத் துணையாகத் தோள் கொடுத்துத் தூக்கி விடுகையில், எவ்வாறு தமிழர்களுக்கான கண்ணியமான வாழ்வை அவர்கள் பெற முடியும் என்பதைச் சிந்திக்க மறக்கிறது அல்லது மறுக்கிறது.

இத்தகைய எதார்த்த நிலையில் புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்களே அதீத வறுமை நிலையில் உள்ள தங்களின் தாயக உடன்பிறப்புகளுக்கான வறுமை ஒழிப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும். அவர்களின் நிதிப்பற்றாக்குறையை மாற்றுதல் என்பதோடு மட்டும் அமைந்து விடாது, ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரினதும் தனித்தன்மைகள், தனிச்சிறப்புக்களை அவர்கள் வெளிப்படுத்தி வாழ்வதற்கான நீண்ட கால, குறுகிய காலத் திட்டங்களை உருவாக்கி, ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் அவர்களுக்குக் கிட்டிட தம்மால் இயன்றவற்றைச் செய்திடல் வேண்டும்.

இதுவே ஈழத்தமிழர்களின் அதீத வறுமை நிலையில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கான ஒரே வழியாக இன்றுள்ளது. தமிழர்களுக்கான வங்கியை நிறுவுவதற்கான சமூக மூலதனத்தைப் பெருக்கி, தமிழர்களின் அறிவாற்றலை, தொழில்நுட்ப எழுச்சிகளை, பொருளாதார வளர்ச்சிகளை ஒருங்கிணைத்து, ஈழமக்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு உதவக் கூடிய குடைநிழல் கட்டமைப்பு புலம்பதிந்த தமிழரிடை உடன் தேவை.

இந்தக் கட்டமைப்பின் தன்மைகளையும் தான்மைகளையும் மக்கள் மயப்படுத்தக் கூடிய ஈழத்தமிழர் தேசிய ஊடகம் ஈழத்தமிழர்களால் காலதாமதமின்றி உருவாக்கப்படல் அவசியம்.  ஈழத்தமிழர்களுக்கு அவர்களது வறுமையினை ஒழித்தலுக்கான அனைத்துலக உதவிகளை ‘அதீத மனிதாய தேவைகளில்’ உள்ள மக்கள் என்ற வகையில், சிறிலங்கா அரசுக்கு ஊடாக அல்லாமல், சிறிலங்காவின் இறைமையை மீறி,  நேரடியாகக் கிடைக்கச் செய்வதற்கு அனைத்துலக சட்டங்கள் உள்ளன என்பதைத் தெளிவாக எடுத்துரைத்து, உலகை ஆற்றுப்படுத்தலுக்கான அமைப்பாகப் புலம்பதிந்த ஈழத்தமிழர்களின் இந்தக் குடைநிழல் அமைப்புப் பலம் பெறுவதற்கு, புலம்பதிந்த ஈழத்தமிழர்கள் தங்களிடையிலான அறிவாற்றல்ககைளையும், மூலவள ஒருங்கிணைப்புக்களையும், ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் செயற்படுத்துவதற்கான காலமிது. எவ்வளவு விரைவில் புலம்பதிந்த தமிழர்களுக்கான வங்கி குடைநிழல் அமைப்பு தேசிய ஊடகம் என்பன தோற்றுவிக்கப்படுகின்றதோ அவ்வளவு விரைவில் தான் ஈழமக்கள் வறுமை ஒழிப்பின் வேகம் தங்கியுள்ளது.

Exit mobile version