உலகத் தாய்ப்பால் ஊட்டல் ஊக்குவிப்பு வாரம் – கரன்

உலகத் தாய்ப்பால் ஊட்டல் ஊக்குவிப்பு வாரம்

உலகத் தாய்ப்பால் ஊட்டல் ஊக்குவிப்பு வாரம்ஐக்கிய நாடுகள் சபையின் உலக உடல்நல அமைப்பும் (WHO), ஐக்கிய நாடுகள் சபையின் உலக சிறுவர்கள் கல்வி நிதியமும் (UNICEF) குழந்தை ஒன்று பிறந்து ஒரு மணி நேரத்துள் அதற்குத் தாய்ப்பால் ஊட்டப்படத் தொடங்கி, அதற்கு தொற்றுக்கள் ஏற்படுவதைக் குறைத்து சிசு மரணங்களைக் குறைக்குமாறு அறிவுறுத்துகிறது. முதல் 6 மாதத்திற்கு சிறப்பான முறையில் தாய்ப்பால் ஊட்டலைத் தொடர்ந்து, குழந்தையின் உடல் சக்தியைப் பெருக்குமாறும்,  6மாதத்தில் சத்துள்ள கட்டி உணவுகளுடன் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வரும்வரை தாய்ப்பால் ஊட்டி குழந்தையை முழு உடல் ஆற்றலுள்ள குழந்தையாக ஆக்குமாறும் வலியுறுத்தி, ஆகஸ்ட் முதல் வாரத்தை உலகத் தாய்ப்பால் ஊட்டல் ஊக்குவிப்பு வாரமாகக் கொண்டாடி வருகின்றன. 2020 இல் இத்தாய்ப்பால் ஊட்டல் ஊக்குவிப்பு வாரத்தின் மையக் கருத்தாக “ஆரோக்கியமான உலகுக்கு தாய்ப்பால் ஊட்டலை ஊக்குவிப்போம்” என்பது அமைந்தது.

உலகத் தாய்ப்பால் ஊட்டல் ஊக்குவிப்பு வாரம்உலகத் தாய்ப்பால் ஊட்டல் ஊக்குவிப்பு வாரம் – கரன்
தாய்ப்பால் ஊட்டாமை

தாய்ப்பால் ஊட்டாமையின் விளைவாக உலகில் 2020ஆம் ஆண்டின் மதிப்பீட்டின் படி 5வயதுக்கு உட்பட்ட 149 மில்லியன் சிறுவர்கள் இருக்க வேண்டிய உயரத்தை விட குறைவான வளர்ச்சி பெற்றுள்ளனர். 45 மில்லியன் சிறுவர்கள் அவர்களுடைய உயரத்திற்குரிய பருமனை விட மெலிந்து காணப்பட்டுள்ளனர். 38.9 மில்லியன் சிறுவர்கள் அதிக பருமன் உள்ளவர்களாக நிறை கூடியவர்களாகி உள்ளனர்.

ஒரு வருடத்தில் ஏற்படும் சிறுவர்களின் மரணத்தில் 45 வீதமான 2.7 மில்லியன் மரணங்கள் ஊட்டச் சத்தின்மையால் ஏற்பட்டுள்ளது. 2015 – 2020 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் உலகில் பிறந்தது முதல் 06 மாதத்திற்கு இடைப்பட்ட கைக் குழந்தைகளில் 44 வீதமான குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டப்படவில்லை.

06 மாதம் முதல் 23 மாதத்திற்கு இடைப்பட்ட குழந்தைகளில் நாலில் ஒரு பகுதியினருக்கே அவர்களுடைய ஏற்ற அளவான பால் உணவு ஊட்டப்பட வேண்டிய நேரத்திற்கு கிடைத்துள்ளது. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் ஊட்டப்பட்டால், அது நோயுறும் தன்மைகள் குறைவடைந்து மரணமடைதல் தவிர்க்கப் படுவதுடன், நீடித்தகால நோய்கள் ஏற்படும் அபாயங்களும் குறைவடைந்து, குழந்தைக்கு பல நிலைகளில் ஆதரவும் அன்பும் அதிகரித்து, எல்லா வகையிலும் சிறப்பான வளர்ச்சியைக் கொடுக்கும்.

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டப்படுவதால் அவர்களுடைய நுண்ணறிவு பள்ளிக் காலத்தில் வளர்தலுக்கு உதவுவதுடன், பள்ளிக்கான வரவை அதிகரிக்கக் கூடிய பாதுகாப்புக்களை அளித்து, வளர்ந்தவர்களாக அவர்கள் வருகையில் அவர்களுக்கு உயர் ஊதியம் கிடைப்பதற்கான ஆற்றலாகவும் மாறுகிறது.

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டப்படுவதால், அது அடையும் சிறப்பான உடல் உள வளர்ச்சி உடல் நலமின்மைக்குச் செலவிடப்படும் பணத்தையும், உடல் நலமின்மையில் அவர்களைப் பராமரிப்பதில் இழக்கப்படும் வேலை நேரத்தையும் மிச்சப்படுத்தி, குடும்பத்தினதும் நாட்டினதும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது.

0 – 23 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு உரிய அளவு தாய்ப்பால் ஊட்டப்படின், ஒவ்வொரு ஆண்டும் 5வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் 820 000 உயிர்கள் பாதுகாக்கப்படலாம் எனவும், 302 பில்லியன் டொலர்கள் மேலதிக வருமானம் குடும்பங்களுக்கு உறுதி செய்யப்படும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எய்ட்ஸ் நோயால் தாக்குண்ட தாய்மாரையும் கூட நச்சுயிரிமுறி (Antiretroviral) மருந்துகளை உட்கொண்டு, அவர்களுடைய குழந்தைக்கு முதல் 06 மாதத்திற்குத் தாய்ப்பால் ஊட்டுமாறும் பின்னர் தொடர்ந்து 12 மாதங்களுக்குத் தாய்ப்பால் ஊட்டுமாறும் அறிவுறுத்தப் படுகின்றனர். இவ்வாறு செய்வது அக்குழந்தைக்கு எய்ட்ஸ் உயிரி பரவுவதைப் பெருமளவுக்குக் குறைக்கும் என்னும் தகவலானது தாய்ப்பாலின் நோய் எதிர்ப்புத் தன்மையின் அபார ஆற்றலை உணர்த்துவதாக உள்ளது.

புட்டிப் பால்மா

மேலும் 1981இல் புட்டிப் பால்மா ஊட்டல் வழியாக குழந்தைகளும், சிறுவர்களும் உடல் நோய்களும் பலவீனங்களும் மரணங்களும் அடைவதற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் கவன ஈர்ப்புத் தொடங்கப் பெற்ற நாற்பதாவது ஆண்டு இவ்வாண்டு. இவ்வாண்டில் புட்டிப் பால்மா ஊட்டலை ஊக்குவிக்கும் விளம்பரங்களை அரசாங்கங்கள் தடைசெய்ய வேண்டும் எனவும், புட்டிப் பால்மா நிறுவனங்களின் நிதியளிப்புக்களைப் பெற்று விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதையும் மற்றும் செயல் திட்டங்களை முன்னெடுப்பதையும் தடை செய்ய வேண்டும் எனவும் யுனிசெவ் செயலாண்மை இயக்குநர் கெனிரிட்டா போரும், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் திலகம் டாக்டர் டெட்ரோஸ் அவர்களும் வற்புறுத்தியுள்ளனர்.

  • அத்துடன் ஒவ்வொரு மகப்பேற்று நிலையிலும், தாய்மை நிலையிலும் உள்ள பெண்களுக்கும் தாய்ப்பால் ஊட்டல் தொடர்பான உளவளத் துணையும், ஊட்டச் சத்துக்கான உணவுப் பாதுகாப்பும் கிடைக்க நிதிகளை முதலிடக் கூடிய கொள்கைகளையும், செயற் திட்டங்களையும் உருவாக்குதலும்,
  • உடல்நல ஊழியர்களுக்கும், தாதிமாருக்கும், மருத்துவிச்சிகளுக்கும் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தைத் தாய்மாருக்கு உணர்த்தும் உளவளத் துணையாளர்களாக அவர்கள் விளங்கப் பயிற்றுவிக்க வேண்டுமெனவும்,
  • இத்தகைய உளவளத் துணைகள் சத்து உணவு உதவிகளை தாய்மார் இலகுவாகப் பெறக் கூடிய வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டுமெனவும்,
  • சமூகங்களைச் சார்ந்தவர்கள் இவை குறித்த பலமான கட்டமைப்புக்களை நிறுவனங்களை அமைக்க வேண்டுமெனவும்,
  • சிறுவர் புட்டிப் பால்மா மற்றும் உணவுகள் தயாரிப்பவர்களின் செல்வாக்கு களுக்குள் உடல்நல ஊழியர்கள் அலுவலர்கள் சிக்குண்ணாது பாதுகாக்க வேண்டுமெனவும்

ஐக்கிய நாடுகள் சபை உலகத் தாய்ப்பால் ஊட்டல் ஊக்குவிப்பு வாரத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

யூலை மாதம் 30ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை உலக நண்பர்கள் தினத்தைக் கொண்டாடிய வேளையில் “மனித உரிமை உணர்வுகளை இந்த உலக நண்பர்கள் தினத்தில் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது.

யூலை மாதம் 28ஆம் திகதி ஈரல் அழற்சியை ஏற்படுத்தும் மஞ்சள் காமாலை நோய் வீரியான கெப்படைட்டிஸ் – பி ஐ கண்டறிந்து உலகில் பல கோடி மரணங்களைத் தவிர்க்க உதவி, நோபல் பரிசைப் பெற்றவரான டாக்டர் பார்ச் புளும்பெர்க் (Dr Baruch Blumberg)  அவர்களின் பிறந்தநாளை நினைந்து ஐக்கிய நாடுகள் சபை உலக மஞ்சள் காமாலை நோய் உலக தினத்தைக் கொண்டாடி வருகிறது. இவ்வாண்டுக்கான மஞ்சள் காமாலை நோய் உலக தினத்திலும் தாய்ப்பால் ஊட்டுதல் கோவிட் பின்னரான காலத்தில் குழந்தைகளின் முக்கிய தேவைகளில் ஒன்றாகிறது என்பது வற்புறுத்தப் பட்டது.

இறுதியாக நாம் தமிழர் என்ற வகையில், வறுமையினாலும் சிறீலங்காவின் ஈழத் தமிழின அழிப்பு அரசியலாலும் பாதிக்கப்பட்டுள்ள மகப்பேற்று நிலையிலும், குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் நிலையிலும் உள்ள ஈழத் தமிழ்த் தாய்மாருக்கான உலகளாவிய அக்கறைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ளோம் என்பதை மனதிருத்தல் அவசியம்.  எமது ஈழத்துத் தாய்மாரின் தாய்ப்பால் ஊட்டலை வளர்க்க எத்தகைய திட்டங்களை – கொள்கைகளை – செயற்பாடுகளை உலகெங்கும் புலம் பதிந்து வாழும் ஈழத் தமிழர்கள் உருவாக்கியுள்ளனர் எனத்  தங்களைக் கேட்க வேண்டிய வாரமாகவும் இந்த உலகத் தாய்ப்பால் ஊட்டுதலை ஊக்குவிக்கும் வாரம் அமைந்துள்ளது.