Home செய்திகள் இனப்பரம்பலை மாற்றியமைக்கவா உலக வங்கி உதவி? பாராளுமன்றத்தில் கஜேந்திரன் கேள்வி

இனப்பரம்பலை மாற்றியமைக்கவா உலக வங்கி உதவி? பாராளுமன்றத்தில் கஜேந்திரன் கேள்வி

இனப்பரம்பலை மாற்றியமைக்கவா உலக வங்கி உதவி
தமிழர்களின் இனப்பரம்பலை மாற்றியமைத்து தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாமல் அழிப்பதற்கான வேலைத்திட்டங்களுக்காகவா உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட அமைப்புக்கள் இலங்கைக்கு உதவிகளை வழங்குகின்றனவென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சுற்றாடல் அமைச்சு,வன ஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு, மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு யானைவேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல், உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மீள் காடாக்கம் ,வளவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு, ஆகியவற்றின் மீதான கருத்தை முன்வைக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறுகையில்

வவுனியா வடக்கின் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெடிவைத்தகுளம் பகுதியில் 1984 ஆம் ஆண்டு காலப்பகுதி யில் இராணுவம் ,ஊர்காவல்படைகளின் அச்சுறுத்தல் காரணமாக அங்கிருந்து மக்கள் வெளியேறி இருந்தார்கள் .அந்த மக்கள் மீளவும் அங்கு மீளக்குடியமர அனுமதிக்கப்படாத நிலையில் அந்தப்பகுதியில் பெரியக் கட்டிக்குளம் ஒதுக்க காடு என அறிவிக்கப்பட்டிருந்ததுடன் அதன் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவடைந்த பின்னரும் அங்கு மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத நிலையில் அப்பகுதியில் கச்சல்சமளங்குளம் என்று சொல்லப்படுகின்ற கிராமத்தின் பெயர் “சப்புமல் தென்ன“ மாற்றம் செய்யப்பட்டு அங்கு பெரியதொரு ”சப்புமல்கஸ்கட” என்ற விகாரையும் அமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது இந்த பெரியக்கட்டிக்குளத்தையும் அதற்கு பக்கத்திலிருந்த இன்னொரு சிறிய குளத்தையும் இணைத்து காடழிக்கப்பட்டு ஒரு பாரிய குளம் அமைக்கப்பட்டு தமிழர்கள் விவசாயம் செய்து வந்த 300 ஏக்கர் வயல் நிலங்கள் உருவாக்கப்பட்டு சிங்களமக்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். அந்த விகாரைக்கு செல்வதற்காக இப்போது நெடுஞ்சலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஆதரவோடு ஒரு காபட் வீதியும் அமைக்கப்பட்டு வருகின்றது

காடுகள், ஒதுக்க காடுகள் என்ற சட்ட திட்டங்களானது வடக்கு,,கிழக்கை பொறுத்தவரையில் தமிழர்களின் நிலங்களை பறிமுதல் செய்து பெரும்பான்மை யினத்தவர்களின் தேவைகளுக்காக கொடுத்து ஒரு இனக்கரைப்பு செய்வதன் மூலம் எமது இனத்தை இல்லாமல் செய்யும் ஒரு வேலைத்திட்டமே இங்கு நடைபெறுகின்றது. இந்த விடயத்தில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். தமது பகுதிகளில் தமிழர்கள் முழுமையாக மீளக்குடியமர நீங்கள் அனுமதிக்க வேண்டும்.

காடுகளுக்குள் சிங்களவர்கள் விரும்பியதை செய்வதையும் 6 அடிக்கு மேலாக மரங்கள் வளர்ந்துள்ளதால் அவை ஒதுக்க காடுகள் என்றும் கூறுவதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது ,இது மிக மோசமான திட்டமிட்ட சிங்கள பௌத்தமய செயற்பாடு என்பதை இங்கு பதிவு செய்கிறேன். .

அடுத்ததாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் 23803ஏக்கர் ஏனைய காடுகள் என்ற பகுதிக்குள் வரும் காடுகளை ஒதுக்க காடுகளாக புதிதாக அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இது உங்களின் சுற்று நிருபங்களுக்கும் தீர்மானங்களுக்கும் முரணானது. அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் 2021/2ஆம் இலக்க சுற்று நிருபத்தின் பிரகாரம் காணி அமைச்சினால் பிரதேச செயலகங்களுக்கு ஏனைய காடுகள் என்பதனை நீங்கள் நிர்வாகம் செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சுற்று நிருபம் சொல்கிறது புதிதாக ஒதுக்க காடுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தால் அது தொடர்பாக ஒரு வரைபடம் தயாரிக்கப்பட்டு அந்த வரைபடம் பிரதேச செயலாளரால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர்தான் ஒதுக்க காடுகளை அறிவிக்க முடியுமென கூறப்படுகின்றது. ஆனால் அதனை மீறி இந்த நடைமுறைகள் எதுவும் இல்லாமல் வடக்கில் பாரிய அபிவிருத்திகளை தேவைப்படக்கூடிய, மக்கள் குடியிருப்புக்களை தேவைப்படக்கூடிய பகுதிகள் அவசர அவசரமாக ஒத்துக் காடுகளாக அறிவிக்கப்படுவது ஏன்? இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட உங்களுக்கு உதவி செய்யும் அமைப்புக்களிடம் நான் கேட்க விரும்புவது என்னவென்றால், இனப்பரம்பலை மாற்றியமைக்கவா உலக வங்கி உதவி செய்கிறது? நீங்கள் இலங்கைக்கு உதவிகளை வழங்குவது தமிழர்களின் இனப்பரம்பலை மாற்றியமைத்து தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாமல் அழிப்பதற்கான வேலைத் திட்டங்களுக்காகவா எனக்கேள்வி எழுப்பினார்.

Exit mobile version