பெண்கள் தடையை மீறி வெளியில் வர வேண்டும்,சாதிக்க முடியாது என்று எதுவுமில்லை- கலா மாஸ்டர்

பெண்கள் தடையை மீறி வெளியில் வர வேண்டும்

“பெண்கள் தடையை மீறி வெளியில் வர வேண்டும். பெண்கள் சாதிக்க முடியாது என எதுவுமில்லை. எதையும் சாதிக்கலாம்“ என இந்திய திரைப்பட நடன இயக்குனரும், மான் ஆட மயில் ஆட நிகழ்ச்சி தொகுப்பாளருமான கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட அவர் மகளீர் தின வாழ்த்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நடன கலைஞர்களில் பெண்களுக்கு எது கடினம் எனில் குடும்ப ஆதரவு இருக்காது.  உங்களுடைய திறமை வெற்றியடையும் வரை குடும்ப ஆதரவு  கொடுக்கமாட்டார்கள். அதையும் மீறி  வெற்றியடைவது தான் பெண்களின் திறமை. ஏனெனில் நடனத்துக்கு தேவையானது.  ஒழுக்கம், நேர்மை, திறமையை வெளிப்படுத்தினாலே   நமக்கு வெற்றி நிச்சயம்.

பெண்களுக்கு நடனக்கலையில் தடையாக இருப்பது குடும்பமாய் இருக்கலாம் என நினைக்கின்றேன். பெண்கள் வீட்டுக்குள் மட்டும் தான் நடனம் ஆடுவேன் வெளியில் ஆடினால் நிறையபேர் பார்ப்பார்கள் என்று வெட்கப்படுவார்கள். இதனை மீறி வெளியில் வாருங்கள் பெண்கள் சாதிக்க முடியாது என எதுவுமில்லை. எதையும் சாதிக்கலாம்.

நடன கலைஞர்களுக்கு எனது சிறிய அறிவுரை, மன தைரியம் வேண்டும். எந்த தடையையும் தகர்த்து வெளியில் வந்து  வெற்றியடைவது தான் பெண்களின் திறமை.  எல்லா பெண்களுக்கும் நான் கூற வேண்டியது என்னவெனில், நாம் தைரியமாக இருக்க வேண்டும், எங்களால் முடியாதது எதுவுமே இல்லை.

எதையும் சாதிக்க முடியும். ஆரம்பத்தில் பெண்கள் முன் வருவது குறைவாக இருந்தது.  தற்போது ஆண்களுக்கு சரிநிகராக பெண்கள் முன்வருகின்றார்கள். எமது சினிமா துறையில் ஆரம்பத்தில் இரண்டு பேர். ஆனால் தற்போது 50 வீதம் பெண்கள் இருக்கிறார்கள். சாதிக்க வேண்டும் என நினைக்கும் பெண்கள் சாதித்து காட்டுங்கள், உங்கள் இலக்குகளில் வெற்றியடையுங்கள். வாழ்க்கை என்பது ஒருமுறைதான். அதில் நாம் வெற்றியடைந்து நிமிர்ந்து நின்று நாம் யார் என்பதை காண்பிக்க வேண்டும். அனைத்து பெண்களுக்கும் மகளீர் தின நல்வாழ்த்துக்கள்” என மேலும் தெரிவித்தார்.

Tamil News