மகிந்தவுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினரின் தாக்குதலுக்குள்ளான பெண் மருத்துவமனையில் அனுமதி

காவல்துறையினரின் தாக்குதலுக்குள்ளான பெண்

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாண  பயணத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை வலியுறுத்தி எதிரப்பு போராட்டத்தில் ஈடுபடச் சென்ற சமயம் காவல்துறையினரின் தாக்குதலுக்குள்ளான பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரியே காவல்துறையினர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் பாதிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச வருகைதந்திருந்த நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என கேட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று மட்டுவில் பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக முல்லைத்தீவிலிருந்து சென்றிருந்த ஈஸ்வரி உள்ளிட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சென்ற பேருந்தை மட்டுவில் அம்மன் கோவிலடியில் இடைமறித்த காவல்துறையினர் பேருந்திலிருந்து எவரையும் கீழே இறங்கவிடாது தடுத்ததுடன் பேருந்து கதவை மூடி இடையூறை ஏற்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் பேருந்திலிருந்து அனைவரையும் இறங்க அனுமதிக்குமாறு கோரியும் தமது போராட்டத்துக்கு தடை ஏற்படுத்திய காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து பேருந்தின் நடுவே வீதியில் கிடந்து முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்க இணைப்பாளர் ஈஸ்வரி போராட்டம் மேற்கொண்டதோடு காவல்துறையினரோடு வாக்குவாதப்பட்டு பேருந்தில் அடைக்கப்பட்டிருப்பவர்களை கீழே இறக்க போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதன்போது காவல்துறையினருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் இடையில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்போது பேருந்தின் வாசல் படியிலிருந்து காவல்துறையினரால் கீழே இழுத்தெறியப்பட்ட ஈஸ்வரி பலமாக கீழே விழுந்து நிலத்தில் அடிபட்ட  நிலையில் அங்கிருந்த காவல்துறையினர் சப்பாத்து கால்களால் வயிற்றுப்பகுதியில் மிதித்துள்ளதோடு தாக்குதலும் மேற்கொண்டுள்ளனர்.

காவல்துறையினரின் தாக்குதலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க இணைப்பாளர் ஈஸ்வரி   போராட்டம் நிறைவுற்று முல்லைத்தீவிலுள்ள தனது வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை (20)சென்ற நிலையில் வாந்தி எடுத்தபின்னர்  மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு உறவினர்களால் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து  சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamil News