தள்ளாட்டம்….திண்டாட்டம்…அரசியல் தில்லுமுல்லுகள்…எதிர்காலம் பற்றிய கரிசனைகள்-பி.மாணிக்கவாசகம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தேசிய அளவில் மிக மோசமானது. அந்த நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கப் போவதாகச் சூளுரைத்து குறுக்கு வழியில் அரச தலைவராகியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, செயல் வல்லமையற்ற சூழலுக்குள் சிக்கியிருப்பதையே காண முடிகின்றது.

பொருளாதார நெருக்கடி என்பதிலும் பார்க்க பொருளாதாரத்தின் பாரிய அளவிலான வீழ்ச்சியானது, பல்வேறு பிரச்சினைகளாகப் படர்ந்து விரிந்து கிளைபரப்பி நிற்கின்றது. நாட்டின் அன்றாடச் செலவினங்களுக்கான டொலர்களைப் பெற்றுக்கொள்ள முடியாத இக்கட்டுக்குள் திறைசேரி திணறிக் கொண்டிருக்கின்றது. பெற்ற பில்;லியன் கணக்கிலான கடன்களைத் திருப்பிச் செலுத்தவோ அல்லது அவற்றை முற்றாகப் புறந்தள்ளி, புதிய பொருளாதாரச் செயற்பாடுகளையோ முன்னெடுக்க முடியாமல் அரசாங்கம் அல்லாடுகின்றது.

நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பை ஸ்திரப்படுத்த முடியவில்லை. அரச ஊழியர்களுடைய சம்பளத்தைக் கிரமமாக வழங்குவதற்குத் தேவையான பணத்தை எங்கிருந்த எவ்வாறு புரட்டுவது என்று அரசினருக்குத் தெரியவில்லை.

இது தொடர்பில் ———-

‘யூரியா விற்ற பணத்தில்தான் அரச உத்தியோகத்தர்களுக்கு டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்பட்;டது – அரசாங்கம் அறிவிப்பு.

சாராயம் விற்கும் பணத்தில் ஜனவரி மாதமும், சிகரட் விற்கும் பணத்தில் பெப்ரவரி மாதமும், கஞ்சா விற்கும் பணத்தில் மார்ச் மாதமும், விபச்சாரம் செய்யும் பணத்தில் அடுத்தடுத்த மாதங்களிலும் சம்பளம் வழங்கப்படலாம்!

ச்சீ….வெட்கமாக இல்லை…?’

என்ற முகநூல் பதிவொன்று கண்ணில் தென்பட்டது. இதை வாசித்ததும் மனதுக்குள் என்னவோ செய்தது….. ஆனால் இந்த நிலைமை குறித்து அரச தரப்பினருக்கும் அரசில் பங்கேற்றுள்ள அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகளுக்கும் எத்தகைய உணர்வு ஏற்பட்டிருக்கின்றது என்பதைக் கூற முடியவில்லை. ‘நிலைமைகளை எப்படியும் சமாளிப்போம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல் விடமாட்டோம்’ என்ற போலித்தனமான அரசியல் கூற்றே அவர்களிடம் இருந்து வெளிப்பட்டிருக்கின்றது.

பொருளாதாரம் தொடர்பிலான இந்த நிலைமை சீர்பெறுவதற்குரிய சமிக்ஞைகளையும் நம்பிக்கைக்குரிய முயற்சியாண்மை கொண்ட நடவடிக்கைகளையும் அரச தரப்பிடம் காண முடியவில்லை. இதனால் நிலைமை மேலும் மோசமடையலாம் என்ற அச்சத்துக்கான அறிகுறிகளே தென்படுகின்றன. அது மட்டுமல்லாமல், இன்னும் மோசமான சமூக, அரசியல், பொருளாதார, பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு நாடு முகம் கொடுக்கப் போகின்றது என்ற அபாய அறிவிப்பையே 2023 ஆம் ஆண்டின் முகப்பில் காணக் கூடியதாக உள்ளது.

தேசிய அரசியலில் பல்வேறு சிக்கல்கள், பிரச்சினைகள், ஒன்றுக்கொன்று முரணான நிலைமைகள் உருவாகியிருப்பதைப் போலவே தமிழ் அரசியலும் மிக மோசமாகப் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. இந்தப் பின்னடைவுகள் தமிழ்த்தரப்பின் – மேலும் மோசமடையக் கூடிய எதிர்கால அரசியல் நிலைமைகள் குறித்த எச்சரிக்னை உணர்வை ஊட்டக் கூடியதாகவும் அமைந்திருக்கின்றது.

பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கின்ற அதேவேளை, சர்வததேச நாணய நிதியம், உலக வங்கி, வல்லரசு நாடுகள் என்பவற்றின் உதவிகளைப் பெறுவதற்குக் கண்துடைப்பு நடவடிக்கையாக இனப்பிரச்சினைக்கு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் அரசியல் தீர்வு காணப்படும் என்ற அறிவித்தலோடு பேச்சுவார்த்தைகளுக்கான திகதிகளைக் குறித்து தமிழ்த்தரப்பை ஜனாதிபதி மனம் குளிரச் செய்ய முற்பட்டிருந்தார்.

அவரது முயற்சியைத் தமிழ்த்தரப்பினர் கண்டு கொள்ளவில்லை என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக அவரது கூற்றை வரவேற்று, பேச்சுவார்த்தைகளுக்குரிய முற்தயாரிப்புக்கான அனைத்துக் கட்சி கூட்டம் மற்றும் தமிழ்த்தரப்பினருடனான நேரடிச் சந்திப்புக்களிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ் அரசியல் தவைர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஆனாலும் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கைக்குரிய திசையில் நகராத காரணத்தினால் பேச்சுவார்த்தைக்கு சாதகமான முன்னாயத்த நிலைமைகளை உருவாக்குமாறு கூட்டமைப்பினர் விடுத்த காலக்கெடுவுடன் கூடிய கோரிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உரிய கவனத்தைப் பெறவில்லை.

யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழாவை அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பல்கலைக்கழக மாணவ்களும் பொது அமைப்புக்களும் இதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இந்த நிலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் போராட்டத்திற்கு மத்தியில் அந்த விழாவில் கலந்து கொண்டு, அரசியல் படம் காட்டிய ரணில் விக்கிரமசிங்க யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகள் சில விடுவிக்கப்படும் என்று அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் ஒன்றகூட்டி அதிரடியாக அறிவித்தல் செய்தார். அது அறிவித்தலாக மட்டுமே உள்ளது. நடைமுறையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைக் காண முடியவில்லை.

அதேபோன்று அவசரமாகத் தீர்வு காணப்பட வேண்டிய தமிழ் மக்களின் எரியும் பிரச்சினைகளில் ஒன்றாகிய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் – பொங்கலுக்கு ஐந்து கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. அது வாய்ப்பேச்சுடன் நின்று விட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபா இழப்பீட்டுடன் பிரச்சினையை முடிப்பதற்கு அப்பால் எந்தவித நகர்வும் கிடையாது என கோடி காட்டப்பட்டிருக்கின்றது.

இத்தகைய பின்னணியில்தான் தமிழ்க்கட்சிகள் பிளவுபட்ட நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்கொள்ளத் தீர்மானித்திருக்கின்றன. தமிழரசுக் கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாகிய வீட்டுச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கின்றது. இந்த அறிவிப்பை ‘இம்முறை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு தேர்தலில் வென்ற பின்னர் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைத்துச் செயற்படும்’ என்று விபரித்திருக்கின்றது. தொகுதிவாரி மற்றும் விகிதாசாரக் கலவை முறையிலான இந்தத் தேர்தலில் தனிக்கட்சிகளாகப் போட்டியிட்டால்தான் கூட்டமைப்பு அதிக ஆசனங்களையும் அதிக மன்றங்களையும் கைப்பற்ற முடியும். ஒன்றிணைந்து ஓர் அணியாகப் போட்டியிட்டால் வெற்றி பெறுவது கடினம் என்ற அரசியல் நுணுக்க விளக்கத்தையும் இரா.சம்பந்தனும், சுமந்திரனும் அளித்திருக்கின்றனர்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சியின் சின்னமாகிய வீட்டுச் சின்னத்தையே தேர்தலுக்கான சின்னமாக இதுவரையில் பயன்படுத்தி வந்தது. வீட்டுச் சின்னம் என்றால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சின்னம் என்பது தமிழ் வாக்காளர்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்துள்ள அரசியல் அடையாளமாகும். இந்தச் சின்னத்தின் கீழ் தும்புத்தடியை நிறுத்தினாலும்கூட தமிழ் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பார்கள். கேள்வி கேட்கமாட்டார்கள் என்பது பொதுவானதோர் அரசியல் நம்பிக்கை. இது தமிழரசுக் கட்சியின் ஆழமான நம்பிக்கையுடன் கூடிய நிலைப்பாடு.

இந்தத் தேர்தலில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளை வீட்டுச் சின்னத்தில் போட்டியிட விடாமல் ஒதுக்கி, தனித்தனியாகப் போட்டியிடச் செய்துவிட்டால் தமிழரசுக் கட்சி பெருவாரியாக வெற்றி பெற்று பெரும்பான்மையான உள்ளுராட்சி மன்றங்களைக் கைப்பற்றிக் கொள்ள முடியும். அதேவேளை தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக அல்லாமல் தமிழரசுக் கட்சியை உறுதியாக நிலைநிறுத்திவிட முடியம் என்று திடமாக நம்பிக்கை கொண்டு காய்நகர்த்தல்களை மேற்கொண்டிருக்கின்றது.

எத்தகைய தேர்தல் முறையாகவும் மக்கள் கட்சிகள் மீதும் வேட்பாளர்கள் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்தார்களாயின் எந்தவிதமான தடைகளும் தேர்தல் வெற்றிக்கு இடையூறாக இருக்கமாட்டாது. இதுவே தேர்தலின் அடிப்படை நிலை. எனவே தமிழ் மக்களின் மனங்களை வென்று அவர்களது ஆதரவைப் பெறுவதற்கான வழிவகைகளை விடுத்து வெறும் தேர்தல் சின்னத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அக்கினிப் பரீட்சையில் தமிழரசுக்கட்சி களமிறங்கியிருக்கின்றது.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடுவது என்றால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கூட்டிணைவு சிதைந்துவிட்டது என்பதே நிலைமை என்பது தமிழரசுக் கட்சியைத் தவிர்ந்த கூட்டமைப்பின் பங்காளிகளாகிய புளொட் மற்றும் டெலோ ஆகிய கட்சிகளின் நிலைப்பாடாகும். இந்த நிலையில் அந்தக் கட்சியினர் ஈபிஆர்எல்எவ், ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் டெலோவில் இருந்து பிரிந்து சென்றுள்ள சிறிகாந்தா தலைமையிலன அணி போன்றவற்றுடன் இணைந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக மக்கள் முன்னால் செல்ல முற்பட்டிருக்கின்றார்கள்.

தனித்துப் போட்டியிட்டாலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமக்கே உரியது என்ற வேடிக்கையான அரசியல் உரிமைக்கோஷத்தையும் தமிழரசுக் கட்சியினர் வெளிப்படுத்தி இருக்கின்றனர். இது தனிமரம் தோப்பானது என்று நிரூபிப்பதற்கு முற்பட்டிருக்கின்ற அரசியல் முயற்சியாகும். இதனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஜனநாயகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் டெலோ, புளொட் உள்ளிட்ட கட்சிகளின் புதிய கூட்டணி உதயமாகியிருக்கின்றது.

தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கீழ் ஓரணியில் ஒன்றிணைந்து தங்களுக்கு அரசியல் தலைமையைத் தரவேண்டும் என்பது தமிழ் மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு. நீண்டகால எதிர்பார்ப்பும்கூட. ஆனால் தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்பையும் அரசியல் வேணவாவையும் அபிலாசையையும் தமிழ்க்கட்சிகளும் தமிழ் அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகளும் சரியாகப் புரிந்து கொள்ளிவில்லை. அல்லது அவ்வாறு புரிந்து கொள்ள மறுத்திருக்கின்றார்கள்.

அவர்களின் இந்த நிலைப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாகத் தேர்தலில் ஒரு குழப்ப நிலையையே ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, எரியும் பிரச்சினைகளாகிய அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தின் பிடியில் உள்ள இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் காணி விடுவிப்பு, வலிந்து காணாமல் ஆகப்பட்டோருக்கு அரசு பொறுப்பு கூறுதல், யுத்தத்தின் பின்னரான இயல்பு வாழ்க்கைக்கான சுதந்திரமானதும், நிலைபேறானதுமான வாழ்வாதாரம், இராணுவ, அரசியல் அழுத்தங்களற்ற சுமுக வாழ்க்கை என்பவற்றுக்குத் தீர்வு காண்பதில் தமிழ்க்கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள்.

இந்த நிலையில் தமிழ்க்கட்சிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சிதைத்து கட்சி அரசியல் நலன்களை இலக்கு வைத்துத் தேர்தலில் போட்டியிடவும் அதனைத் தொடர்ந்து அரசியலில் ஈடுபடவும் முடிவு செய்திருப்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு அரசியலுக்கு முற்றிலும் முரணான செயற்பாடாகும்.

இது மக்களைக் குழப்புவதற்கும், நாட்டின் தீர்க்கப்படாத தேசிய பொருளாதார நெருக்கடி காரணமாகத் தற்சார்பு பொருளாதார வழியில் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதைப் போன்று, தற்சார்பு அரசியல் வழியொன்று குறித்து அவர்களைச் சிந்திக்கவும் அந்த வழியில் செயற்படவும் தூண்டியிருக்கின்றது என்றே கூற வேண்டும்.