Home செய்திகள் தமிழரசுக் கட்சியின் ஒப்புதல் இன்றியே ஐ.நா.வுக்கு கடிதம்; அரசியல் குழுவில் கடும் எதிர்ப்பு

தமிழரசுக் கட்சியின் ஒப்புதல் இன்றியே ஐ.நா.வுக்கு கடிதம்; அரசியல் குழுவில் கடும் எதிர்ப்பு

தமிழரசுக் கட்சியின் ஒப்புதல் இன்றிதமிழரசுக் கட்சியின் ஒப்புதல் இன்றி: இலங்கை இராணுவமும், விடுதலைப் புலிகளும் போர்க் குற்றத்தில் ஈடுபட்டார்கள் என குறிப்பிடும் ஆவணத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்புவதற்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல் குழுவில் கடும் எதிர்ப்பு வெளியிடப் பட்டுள்ளது.

இணைய வழியாக நேற்று இடம்பெற்ற தமிழ் அரசு கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் பங்கேற்ற தமிழரசுக் கட்சி தலைவர், அக்கட்சி எம்.பிக்கள் மற்றும் சிரேஷ்ட தலைவர்கள் இந்தக் கடிதத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதன்போது கட்சிக்குள் இருந்துகொண்டு கட்சி பெயரில் யாரும் தன்னிச்சையான முடிவு எடுக்கக்கூடாது. விரும்பினால் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் ஐ.நா.வுக்கு கடிதம் அனுப்பலாம் என தமிழரசுக் கட்சியினர் கடும் விமர்சனங்களை இக்கூட்டத்தில் முன்வைத்ததாக தெரியவருகிறது.

இந்தக் கடிதம் தமிழரசுக் கட்சியின் கடிதமாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடிதமாகவோ இல்லாலமல் கட்சியில் உள்ள தனி நபர் கடிதமாகவே கருதப்படும் எனவும் இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியினர் பலர் தெரிவித்ததாகவும் கட்சித் தகவல்கள் தெரிவித்தன.

இந்த கூட்டத்தில் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், பொ.செல்வராசா, பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், த.கலையரசன், கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் அதிகளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட முடியாது என மறுத்துவிட்டனர். மீண்டும் அனைவரையும் கூட்டிப் பேசிஆவணம் தயாரித்து அனுப்பலாமென யோசனையும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.. எனினும் இந்த ஆவணம் ஏற்கனவே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டு விட்டது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து காரசார விவாதம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இன்று கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தை பாராளுமன்றத்தில் கூட்டி, ஆவணம் தயாரித்த விடயம் குறித்து ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டது. எனினும் யாருடைய ஒப்புதலும் பெறப்படாமல் தன்னிச்சையாக தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம் குறித்து இனிப் பேசிப்பயனில்லை என கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகள் முடிவு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் பங்கேற்பதில்லை என பங்காளிக்கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாகவும் நம்பகமாக அறியவருகிறது.

Exit mobile version