Home செய்திகள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீருக்கு நீதி இல்லையேல் அழிந்துபோவீர்கள் – ரவிகரன்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீருக்கு நீதி இல்லையேல் அழிந்துபோவீர்கள் – ரவிகரன்

நீதி இல்லையேல் அழிந்துபோவீர்கள்

கண்ணீருக்கு நீதி இல்லையேல் அழிந்துபோவீர்கள்

வட, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சிந்தும் கண்ணீருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இல்லையேல் அந்த கண்ணீருக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்த அரசு அழிந்து போகுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் எச்சரித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் தமது தொடர்போராட்டத்தின் ஐந்தாவதுவருட நிறைவுநாளில், மகளிர் தினத்தினை துக்கநாளாகக் கடைப்பிடித்து மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டுகருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படவேண்டிய மகளிர் தினத்தினை எமது மகளிர்கள், துக்க தினமாகக் கடைப்பிடித்து வருகின்றனர். வட, கிழக்கிலே சுமார் 90ஆயிரம் அளவில் விதவைகளாக எமது மகளிர்கள் இருக்கின்றனர்.

இதனைவிட காணாமல் ஆக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். இப்படியிருக்கும் போது இந்த மகளிர் தினத்தினை எமது மகளிர்கள் எப்படி மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியும்.

ஐந்து வருடங்களாக இவ்வாறு வீதியிலே இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆறாவது வருடத்தின் தொடக்கத்தில் தற்போது போராட ஆரம்பித்திருக்கின்றார்கள். குறிப்பாக இதுவரையில் ஐக்கிய நாடுகள் சபையோ, இலங்கை அரசோ, அல்லது வேறு சர்வதேச நாடுகள்கூட இவர்களுடைய போராட்டத்திற்கு உரிய தீர்வுகளை வழங்க முன்வரவில்லை.

இவர்களுடைய கண்ணீருக்கான பதில் என்ன? எமது உறவுகள் சிந்துகின்ற இந்த கண்ணீருக்கு ஈடுகொடுக்கமுடியாமல் இந்த அரசு அழிந்துபோகும் நிலைதான் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எமது உறவுகளுக்குரிய நீதியை வழங்குங்கள். சர்வதேசரீதியாக ஐக்கியநாடுகள் சபை நிச்சயமாக இந்த மகளிர்களுக்கு நீதியை வழங்க முன்வரவேண்டும்.

இந்த மகளிர்களின் கண்ணீருக்கு விடை கிடைக்கவேண்டும். இல்லாவிட்டால் இந்த அரசு அழிந்துபோகும் – என்றார்.

Exit mobile version