ஆளுங்கட்சி அமைச்சர்களே பதவி விலகிய நிலையில், தமிழ் அரசியல்வாதிகள் தமது சுயலாபங்களுக்காக பதவியை துறக்காதுள்ளனர்

ஆளுங்கட்சி அமைச்சர்களே பதவி விலகி

இலங்கை அரசாங்கம் மக்களுக்கு செய்யும் மோசமான செயற்பாடுகளை கண்டு ஆளுங்கட்சி அமைச்சர்களே பதவி விலகி சென்றுள்ள நிலையில், தமிழ் அரசியல் வாதிகள் தமது சுயலாபங்களுக்காக பதவியை வைத்துக் கொண்டிருப்பது வேதனையான விடயம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,

இந்த நாட்டில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும்போது வேதனையாக இருக்கின்றது.  நாடு முழுவதும்  போராட்டம்  வெடித்துள்ளது.

இந்த பாராளுமன்ற அமர்வு ஆரம்பித்த கடந்த ஒன்றரை வருடங்களாக நாங்கள் இதனை தெரிவித்துவருகின்றோம்.காயம் ஒன்று இருக்கும்போது அந்த காயத்திற்கு மருந்திட்டு அதனை குணப்படுத்தாமல் அதனை மூடிமூடி வைத்து இன்று அந்த காயம் காரணமாக காலை வெட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இன்று எரிமலையினை சூழ பஞ்சுகள் இருப்பதுபோன்றே மக்கள் உள்ளனர்.இன்று எவர் போராட்டத்திற்கு அழைத்தாலும் தயார் நிலையிலேயே மக்கள் உள்ளனர்.மக்கள் எதிர்நோக்கும் கஸ்டம் காரணமாகவே இந்த நிலையேற்பட்டுள்ளது. இந்த நாட்டின் நிலைமை மிக மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது.

இன்று நடைபெறும்போராட்டங்கள் அரசியல் கட்சிகள் இணைந்து முன்னெடுக்கும்போராட்டம் அல்ல.மக்களாகவே முன்வந்து முன்னெடுக்கும் போராட்டம்.  இந்த போராட்டங்களை அரசாங்கத்தினால் கட்டப்படுத்த முடியாத நிலை வரும். நாங்கள் பொறுப்புள்ள அரசியல் கட்சியாக இந்த பிரச்சினையை இந்த நாட்டில் எவ்வாறு தீர்க்கமுடியும் என்றே பார்க்கவேண்டும்.

ஜனாதிபதிக்கு இன்று இரண்டு வருடங்களுக்கு மேலாகவும் பாராளுமன்றத்திற்கு மூன்று வருடங்களுக்கு மேலாகவும் காலப்பகுதியுள்ள நிலையில் இந்த நிலைமை இவ்வாறு நீடிக்குமானால் மக்கள் வன்முறைகள் ஊடாக தமது கோவத்தினை வெளிப்படுத்தமுனையும்போது அதனை அடக்க அரசாங்கம் இராணுவத்தினதை பாவிக்கும் நிலையும் உருவாகலாம்.

ஜனாதிபதி நாட்டின் உண்மை நிலையினை மக்களுக்கு எடுத்துச்சொல்லி இதற்கு மாற்றுவழியாக அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்து ஒரு இணக்கப்பாட்டை எட்டுவதன் மூலமே நாட்டில் உள்ள பிரச்சினையை தீர்க்கமுடியும்.

விரைவில் ஒரு தேர்தல் நடாத்தக்கூடிய சூழ்நிலையில்லாத காரணத்தினால் இந்த நிலைமையினை தொடர இடமளிக்ககூடாது. இன்றைய நாட்டின் சூழ்நிலையினால் 30வருடகால யுத்ததினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தற்போதும் கடும் பாதிப்புக்களை  எதிர்கொண்டு வருகின்றனர்.

இன்று அரசாங்கத்துடன் இருக்கும் இராஜாங்க அமைச்சர்கள்,இந்த அரசாங்கம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கும்மோசமான செயற்பாடுகளைக்கண்டு தமது பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு வெளியேறிவிட்டனர்.ஆனால் தமிழர்கள் ஒருசிலர் மட்டும் அபிவிருத்திக்குழு தலைவர் பதவி,இராஜாங்க அமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு தங்களது சுயநலத்துக்காக அரசாங்கத்தினை ஆதரிக்கின்றனர்.  மக்களுக்காக அரசியலுக்கு வந்த நீங்கள் ஆளும்கட்சிக்காக அரசியலுக்கு வந்தவர்களாக இருக்ககூடாது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் பதவிகளை பிடித்துக்கொண்டுள்ளவர்களை மக்கள் எதிர்காலத்தில் இனங்கண்டு தெற்கில் எவ்வாறு அரசியல்வாதிகள் துரத்தியடிக்கப்படுகின்றார்களோ அவ்வாறு இங்கும் அவர்கள் வரும்போது துரத்தியடிக்கவேண்டும்” என்றார்.

Tamil News