இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்? | கலாநிதி எம்.கணேசமூர்த்தி

சர்வதேச நாணய நிதியம்

இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்?

இலங்கையின் பொருளாதாரம் மோசமடைந்து கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. இந்தப் பேச்சுக்கள் எந்தளவுக்குப் பலனளிக்கும், அதன் பின்னணியில் செயற்படும் சக்திகளின் அரசியல் இலக்குகள் என்ன போன்ற விடயங்களையிட்டு கொழும்பு பல்கலைக்கழக பொருளாதாரத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி இந்த வாரம் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்கள நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியிலிருந்து முக்கியமான பகுதிகள் இங்கு தரப்படுகின்றது.

கேள்வி:
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கை எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியுமா?

பதில்:
ஆரம்பகட்டப் பேச்சுக்களின் போது உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதமாகலாம் என்றவாறான தகவல்கள் வெளிவந்திருந்தன. துரித கடன்வசதியைப் பெற்றுத் தருமாறுதான் இலங்கை நாணய நிதியத்திடம் கேட்டிருந்தது. அதற்கு பிணையாக நிற்பதற்கு இந்தியாவும் தயாராகவிருப்பதாக ஒரு தகவல் வந்தது. ஆனால், ஐ.எம்.எப்.பின் நடைமுறைகளின் படி உடனடியாக ஒரு நாட்டுக்கு கடன் வழங்கப்படுமா என்பது சந்தேகம்தான். உலக வங்கி போன்ற அதனுடன் தொடர்புபட்ட நிறுவனங்கள் மூலமாக கடனைப் பெற்றுக்கொள்வதற்கு ஐ.எம்.எப். உதவக்கூடும். ஆனால் நேரடியாக ஐ.எம்.எப். கடனுதவி ஒழுங்குபடுத்தப்படுவதாக இருந்தால், அதற்கு ஆறு மாதங்களாவது செல்லலாம். அதற்கான நடைமுறைகளுக்கு இந்தளவு கால வரையறை தேவை. ஆனால், மாற்று வழிகளை நாடுவதற்கு அவர்கள் உதவிகளைச் செய்யலாம்.

கேள்வி:
இதற்காக முன்வைக்கப்படக்கூடிய நிபந்தனைகள் என்ன? அந்த நிபந்தனைகளை ஏற்பதனால் இலங்கையில் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் என்ன?

பதில்:
ஐ.எம்.எப். சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம். அதனால் – சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட கொள்கைப் பொதி ஒன்று பொதுவாக இருக்கும். இதில் பெரும்பாலும் அரச நிதியைப் பலப்படுத்துதல், இதற்காக வரிகளை அதிகரிக்கச் சொல்வார்கள். இரண்டாவதாக அரசாங்கத்தின் செலவீடுகளை குறைக்குமாறு சொல்வார்கள். இலங்கையில் நட்டத்தில் இயங்குகின்ற நிறுவனங்களால் ஏற்படும் இழப்புக்களை அரசாங்கமே பொறுப்பேற்கின்றது. அவற்றை நிச்சயமாக குறைக்குமாறு சொல்வார்கள். இதற்காக இவற்றை மீள்கட்டமைப்பு செய்ய வேண்டும் அல்லது தனியார்மயப்படுத்துமாறு சொல்வார்கள்.

இதனைவிட வட்டிவீதங்களை அதிகரிக்கச் சொல்வார்கள். இது ஏற்கனவே செய்யப்பட்டிருக்கின்றது. இது போதிளவுக்குச் செய்யப்பட வேண்டும். இதனைவிட பணம் அச்சடிப்பதை நிறுத்தச் சொல்வார்கள். நாணயமாற்று வீதத்தை சந்தையால் நிர்ணயிக்கப்படும் வகையில் வைத்திருக்குமாறு சொல்வார்கள். இதனையும் அரசாங்கம் செய்திருக்கின்றது. மாநியங்களை நிறுத்துமாறு சொல்வார்கள். இறக்குமதிப் பொருட்களை சந்தை விலைக்கு வழங்குமாறு சொல்வார்கள். அதன் ஒரு அங்கமாகத்தான் பெற்றோலியப் பொருட்கள், கோதுமை போன்றவற்றின் விலைகள் கடந்த வாரம் அதிகரிக்கப்பட்டது. ஐ.எம்.எப். உடனான பேச்சுக்குச் செல்வதற்கு முன்னரே அரசு இவற்றைச் செய்திருந்தது.

இவற்றைவிட அரசின் நிதி தொடர்பான செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஊழல், நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு வலியுறுத்துவார்கள். ஊழல் மோசடிகள் கடந்த காலங்களில் இடம்பெற்றிருக்குமாயின் அதற்கான கணக்காய்வை மேற்கொள்ளுமாறு கோருவார்கள்.

இதில் முதலில் உள்ள நிபந்தனைகளை நிறைவேற்றும்போது அது பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே விலைவாசி உயர்வடைந் திருக்கின்றது. இதனால், பொதுமக்களின் கொள்வனவு சக்தி கடுமையாக வீழ்ச்சியடைந் திருக்கின்றது. வாழ்க்கைச் செலவைத் தாங்க முடியாத நிலையில் மக்கள் இருக்கின்றார்கள். இதற்கு மேலாக தட்டுப்பாடுகளும் உள்ளன.

இவ்வாறான நிலையில் பாதிக்கப்படும் மக்களுக்கு – அதாவது விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு உதவக்கூடிய வகையில் நிவாரணப் பொதி ஒன்றை வழங்குமாறும் கோருவார்கள்.

இவைதான் பிரதான நிபந்தனைகளாக இருக்கும். இவற்றுக்கு மேலாக மனித உரிமைகள், நல்லாட்சி போன்றனவும் நிபந்தனைகளாக முன்வைக்கப்படும்.

கேள்வி:
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவினாலும் கூட, தற்போது எதிர் கொள்ளப்படும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அது எந்தளவுக்கு உதவும்?

பதில்:
மூன்று முதல் நான்கு வரையான பில்லியன் அமெரிக்க டொலர்களை தாம் ஐ.எம்.எப். இடமிருந்து எதிர்பார்ப்பதாக அமெரிக்கா சென்றிருந்த நிதி அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்தத் தொகையை வைத்துக்கொண்டு இலங்கை இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவர முடியாது. அது போதாது.

இதற்கு மேலதிகமாக இந்தியாவிடமிருந்தும், சீனாவிடமிருந்தும் கடன் கேட்டிருக்கின்றர்கள். இந்த கடன் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியாவிடமே இலங்கை பெருமளவுக்குத் தங்கியிருப்பதாகத் தெரிகின்றது. இந்தியாவும் அதற்கு சாதகமான சமிஞ்ஞைகளைக் காட்டியிருக்கின்றது.

இந்தக் கடன்கள் இரண்டு – மூன்று மாதங்களுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கே போதுமானதாக இருக்கும்.

எனவே பொருளாதாரத்தை சரியான முறையில் சீரமைத்துக்கொள்வதன் மூலமாக மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வைக்காணக்கூடியதாக இருக்கும். இவற்றுக்கான வழிவகைகளைக் காணாமல் ஐ.எம்.எப். இடமிருந்து பெறப்படும் கடன்மூலமாக மட்டும் இந்தப் பிரச்சினையிலிருந்து இலங்கையால் நிச்சயமாக வெளிவர முடியாது. இதனைச் செய்வதற்கு இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி தீரவேண்டும். உறுதியான அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும். இதன்மூலமாக மட்டுமே வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவரமுடியும், வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த மக்கள் நம்பிக்கையுடன் பணத்தை நாட்டுக்கு அனுப்பும் நிலையை ஏற்படுத்த முடியும். ஐ.எம்.எப். உதவி ஒரு குறுங்காலத் தீர்வாக மட்டுமே இருக்கமுடியும்.

கேள்வி:
இலங்கைக்கு அண்மைக்காலம் வரை சீனாதான் அதிகளவு உதவிகளை வழங்கி வந்தது. ஆனால், தற்போது உருவாகியிருக்கும் அந்நியச் செலாவணிப் பற்றாக் குறையைத் தீர்ப்பதற்கு சீனா போதியளவுக்கு உதவவில்லை. அது ஏன்?

பதில்:
இலங்கையைப் பொறுத்தவரையில் போர் முடிவுக்கு வந்த 2009 காலப் பகுதியிலிருந்தே இங்கு முன்னெடுக்கப்படுகின்ற உட்கட்டுமானத் திட்டங்கள், முதலீட்டுத் திட்டங்கள் என்பவற்றில் சீனாவின் பங்குதான் அதிகளவுக்கு இருந்துள்ளது. இந்தியாவின் பங்கு மிகவும் குறைவாகவே இருந்துள்ளது. குறிப்பாகச் சொல்லப் போனால் முன்னைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் அதிகளவுக்கு சீன சார்புள்ளதாகவே இருந்துள்ளது. அதனால்தான் கடந்த காலங்களில் சீனாவின் கடன்களின் அடிப்படையிலான உட்கட்டுமானத் திட்டங்கள் அதிகளவில் ஏற்படுத்தப் பட்டிருந்தன. சீனாவின் கடன்கள் எல்லாமே வணிக ரீதியான கடன்கள். அதாவது – அவை குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். ஆனால், இந்தியாவிடமிருந்து வழங்கப்படும் கடன்கள் பெருமளவுக்கு சலுகைத் தன்மை வாய்ந்தவையாக இருக்கும். அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகவே இந்தியா அண்மையில் கடன்களை வழங்கியிருந்தமையையும் பார்க்கிறோம். சீனாவிடமிருந்தும் இவ்வாறான கடன்கள் கோரப்பட்டபோது அதற்கு சீனா சாதகமான பதிலைக் கொடுக்கவில்லைப் போலுள்ளது. ஆனால் – ஒரு தொகுதி அரிசியை மட்டும் சீனா அண்மையில் வழங்கியது. இந்தப் பின்னணியில் சீனாவை விட இந்தியாவிடமே இலங்கை அதிகளவுக்கு உதவியை எதிர்பார்ப்பதாகத் தெரிகின்றது.

கேள்வி:
இலங்கைக்கு உதவும் போது மனித உரிமைகள் போன்ற விடயங்களை நிபந்தனைகளாக முன்வைக்க வேண்டும் என பிரித்தானிய எம்.பி. ஒருவர் நாணய நிதியத்தை கேட்டிருந்தார். இவ்வாறான கோரிக்கைகள் நாணய நிதியத்தினால் கவனத்திற் கொள்ளப்படுமா?

பதில்:
நிச்சயமாகக் கவனத்திற்கொள்ளப்படும். ஐ.எம்.எப். கண்காணிப்புக்குள் வரும் ஒரு நாட்டுக்கு கடன்வழங்கும் போது, குறிப்பிட்ட நாடு சர்வதேச நியமங்களுக்கு உட்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்ப்பார்கள். மனித உரிமைகள் விவகாரமும் அதில் ஒன்றாகப் பார்க்கப்படும். வெளிப்படைத்தன்மை, மனித உரிமைகள் பேணப்படுதல் அதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் என்பன எதிர்பார்க்கப்படும். பல நாடுகள் ஐ.எம்.எப். இடம் வருவதைத் தவிர்ப்பதற்கு இவை காரணமாகவுள்ளன. தமது இறைமையைப் பாதிப்பதாக அந்த நிபந்தனைகள் அமைந்துள்ளன என அவர்கள் சொல்வது இதனால்தான். அதனால் இந்த விவகாரங்கள் பேச்சுவார்த்தைகளின் போது கவனத்திற்கொள்ளப்படும்.

கேள்வி:
தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஆட்சி மாற்றம் ஒன்றினால் முடிவுக்கு கொண்டுவருவது சாத்தியமா?

பதில்:
தற்போதிருக்கின்ற அரசாங்கம் அமைச்சர்களை மாற்றியமைப்பதன் மூலமாக இந்த நிலைமைகளை மாற்றியமைக்க முடியாது. ஏனெனில், தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமாக இருந்தால் முதலில் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். நெருக்கடி ஒன்று இருக்கின்றது. மக்கள் வீதிகளில் நிற்கின்றார்கள். பேராட்டங்கள் சில இடங்களில் வன்முறையாகவும் மாறியிருக்கின்றது. அரசியல் மாற்றம் ஒன்றை மக்கள் இப்போது எதிர் பார்க்கின்றார்கள். அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கம் ஒன்றை மக்கள் விரும்புவதாகத் தெரிகின்றது. மக்கள் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகவே தோன்றுகின்றது.

Tamil News