‘வெற்றிபெற்ற’ ஜனாதிபதியாக கோட்டாபயவினால் முடியுமா? | அகிலன்

கோட்டாபயவினால் முடியுமா?அகிலன்

கோட்டாபயவினால் முடியுமா?

தோல்வியடைந்த ஜனாதிபதியாக தான் பதவி விலகப்போவதில்லை என கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருக்கிறார். இதன் மூலம் தோல்வியடைந்த ஜனாதிபதியாக தான் இப்போது இருப்பதை அவர் மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கின்றார். இரண்டரை வருடங்களில் நாட்டை படுபாதாளத்தில் தள்ளிய அவரால், அடுத்த இரு வருடங்களில் வெற்றிபெற்ற ஜனாதிபதியாக உயரத்தான் முடியுமா?

‘கோட்டா கோ ஹோம்’ என்ற கோசத்துடன் ஜனாதிபதி செயலகத்தை சுற்றிவளைத்து இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரண்டாவது மாதத்தை நிறைவு செய்திருக்கும் நிலையில், கோட்டாபய ராஜபக்ச இந்த அறிவிப்பு வெளியாகியது. ‘தோல்வியடைந்த ஒரு ஜனாதிபதியாக நான் பதவி விலகப்போவதில்லை. மக்கள் எனக்கு ஐந்து வருடங்கள் ஆட்சி செய்வதற்கான ஆணையைத் தந்திருக்கின்றார்கள். அதனைப் பூர்த்தி செய்த பின்னரே நான் விலகிச் செல்வேன்’ என்பதுதான் அவரது அறிவிப்பு.

‘கோட்டா கோ கம’வில் இரண்டு மாத காலமாகப் போராடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு அவர் கொடுத்திருக்கும் ஒரு தெளிவான செய்தி இது. அதாவது, ‘நான் வீட்டுக்குப் போகப்போவதில்லை’ என்பதை அவர் பகிரங்கமாக அறிவித்துவிட்டார்.

 கோட்டாபயவினால் முடியுமா?புளூம்பேர்க் ஊடகத்துக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே ஜனாதிபதி இந்த அறிவித்தலை வெளியிட்டிருக்கின்றார். ஊடகங்களுக்கு கோட்டாபய நேர்காணல்களை வழங்குவது மிகவும் அரிது. அதிலும் கடந்த இரண்டு மாதங்களில் ஊடகங்கள் எதனையும் அவர் சந்தித்ததும் இல்லை. அந்த வகையில் இந்த நேர்காணல் மிகவும் அரிதான ஒன்றாகவே கருதப்படுகின்றது. மற்றொரு முக்கியமான தகவலையும் இந்த நேர்காணலின் போது அவர் தெரிவித்திருந்தார். இன்னொரு தடவை ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்பதுதான் அது.

நாடு தற்போது செல்லும் நிலையில் மற்றொரு தேர்தலில் அவர் போட்டியிட்டாலும் வெற்றிபெற முடியுமா என்பதும் கேள்விக்குறிதான். 2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற அவரால் 2024 நவம்பர் வரையில் பதவியிலிருக்க முடியும். அதாவது இன்னும் சுமார் இரண்டு வருடங்களும் நான்கு மாதங்களும் சட்டப்படி அவர் அதிகாரத்திலிருக்க முடியும்.

இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்த ஒரு பின்னணியில் சக்திவாய்ந்த ஒரு தலைவராகக் கருதப்பட்ட மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அண்ணனின் பதவியைப் பலிகொடுத்து தனது பதவியை கோட்டாபய தப்பவைத்துக் கொண்டார். ஆனாலும், அவரைப் பதவி விலகக்கோரும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கோட்டாபய 2024 நவம்பர் வரையில் பதவியிலிருப்பதை கோட்டா கோ கம இளைஞர்கள் பொறுத்துக் கொண்டிருக்கப் போவதில்லை என்பதும் தெரிகின்றது.

தோல்வியடைந்த ஜனாதிபதியாக வீடு செல்லப்போவதில்லை என்றால், வெற்றிபெற்ற ஜனாதிபதியாவதற்கு அடுத்த இரண்டு வருடங்களுக்குள் என்னத்தை அவரால் சாதித்துவிட முடியும்? முடிவடைந்த இரண்டரை வருடங்களுக்குள் நாட்டை அதளபாதாளத்துக்குள் தள்ளிய கோட்டாபய, மிகுதி இரண்டரை வருடங்களில் அதனை மீட்பதற்காக எதனையும் செய்யப்போவதில்லை என்பதும் உறுதி.

தற்போதுள்ள பொதுவான மக்கள் கருத்தின்படி தோல்வியடைந்த ஜனாதிபதியாகவே அவர் இருக்கின்றார். தன்னுடைய செயலகத்துக்கு கூட செல்ல முடியாத நிலையில், கடும் பாதுகாப்புடன் கூடிய ஜனாதிபதி மாளிக்கைக்குள் அவர் முடக்கப்பட்டிருக்கின்றார். 69 லட்சம் மக்களின் ஆணை தனக்கிருப்பதாக அவர் சொல்லிக்கொண்டாலும் கூட, அந்த ஆணையைப் பெறுவதற்காக அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் அவரால் நிறைவேற்ற முடியவில்லை. அதற்கும் மேலாக பொருளாதார நெருக்கடியை தாங்கமுடியாது என்ற நிலையில்தான் மக்கள் வீதிகளில் இறங்கியிருக்கின்றார்கள்.

கோதா கே கமவில் நடைபெறும் போராட்டத்தின் பின்னணியில் ஜே.வி.பி.யும், முன்னிலை சோசலிச கட்சியும் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், தினசரி அங்காங்கே எரிவாயுவுக்காகவும், எரிபொருட்களுக்காகவும் நடைபெறும் போராட்டங்களின் பின்னணியில் எந்தக் கட்சியும் இல்லை. அவை முற்றுமுழுதாக மக்களின் ஆத்திரத்தின் வெளிப்பாடு. அதனைவிட காலிமுகத்திடல் போராட்டத்தில் இருப்பவர்களும் நாட்டு மக்களின் உணர்வுகளைத்தான் பிரதிபலிக்கின்றார்கள். இந்த நிலையில், 69 இலட்சம் மக்களின் ஆணை தனக்கிருப்பதாக ஜனாதிபதி சொல்லிக்கொள்வது அர்த்தமுள்ள ஒன்றாக இருக்கமுடியாது.

மீண்டும் போட்டியிடும் யோசனை இல்லை எனச் சொல்லிக்கொள்வதன் மூலமாக – மக்களின் உணர்வுகளை அவர் புரிந்துகொண்டிருக்கின்றார் என்பது தெரிகின்றது. ஆனால், இரண்டு வருடங்களின் நிலைமைகளை மாற்றி வெற்றிபெற்ற ஜனாதிபதியாக அவர் வீடு செல்வதற்கான வாய்ப்புக்களும் இல்லை. ஏனெனில் தற்போது உருவாகியிருக்கும் பொருளாதாரப் பிரச்சினை 2024 இலிலும் தொடரும் என்றே பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றார்கள். ஆக – தனது பதவிக்காலம் முடியும் வரை அவர் அதிகாரத்திலிருந்தாலும் தோல்வியடைந்த ஜனாதிபதியாகவே அவர் வீடு செல்ல வேண்டியிருக்கும்.

ஜனாதிபதியால் இரவோடிரவாக அதிரடியாகக் கொண்டுவந்த இரசாயன உரம், கிரிமிநாசினி, களைகொல்லி போன்றவற்றுக்கான தடைதான் இன்று உருவாகியுள்ள உணவுத் தட்டுப்பாட்டுக்கும், அவற்றின் விலையேற்றத்துக்கும் பிரதான காரணம். இதனைவிட ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றவுடன் சில பெரும் முதலாளிகளைத் திருப்திப்படுத்துவதற்காக செய்த வரிக்குறைப்பு அரசின் கஜானா காலியாவதற்கு காரணமாகியது. இதனைவிட பொருளாதார நெருக்கடி தலைகாட்டியபோதே சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை அவர் நிராகரித்தார். முன்னரே நாணய  நிதியத்தின் உதவியைப் பெற்றிருந்தால் நிலைமை இந்தளவுக்கு மோசமாகியிருக்காது.

ஆக, தற்போதைய நெருக்கடிக்கு பிரதான காரணமாக இருப்பவர் கோட்டாபயதான். நாட்டை படுபாதாளத்துக்குள் தள்ளிய அவர், தோல்வியடைந்த ஜனாதிபதியாக செல்லப்போவதில்லை என்பது நகைப்பிற்கு இடமானது.

ஜனாதிபதியின் கருத்துக்களிலிருந்து மற்றொரு விடயமும் தெளிவாகத் தெரிகின்றது. தான் தோல்வியடைந்த ஒரு ஜனாதிபதியல்ல என்பதை நிரூபிப்பதற்கான முயற்சிகளை அடுத்த இரண்டு வருடங்களில் முன்னெடுக்கப்போகின்றார். தன்னுடைய இமேஜை பாதுகாப்பதுதான் அவருக்கு முக்கியமாக இருக்கப்போகிறதே தவிர, நாட்டை மீட்பது அல்ல.

வெற்றிபெற்ற ஒரு ஜனாதிபதியாக அவர் 2024 இல் தன்னை மாற்றிக்கொண்டால், மீண்டும் போட்டியிடுவது குறித்துதான் அவர் சிந்திப்பார் என்பதும் கவனிக்கத்தக்கது.

அதேவேளையில், ‘கோட்டா கோ ஹோம்’ எனப் போராடி வருபவர்கள் வெறுமனே ஆட்சி மாற்றம் ஒன்றை மட்டும் கோரவில்லை. ஆட்சி முறைமை மாற்றத்தையும் கேட்கின்றார்கள். குறிப்பாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பது அவர்களுடைய பிரதான கோரிக்கை. இதற்காகத்தான் 21 ஆவது திருத்தம் கொண்டு வரப்படுகின்றது. ஆனால், 21 நிறைவேற்றப்படுமா என்பதும் இன்று கேள்விக்குறியாகியிருக்கின்றது.

இதில் ஜனாதிபதிக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களை விட்டுக்கொடுக்கும் நிலையில் பொதுஜன பெரமுன இல்லை. நிறைவேற்று அதிகாரம்தான் தற்போதைய நிலையில் தமக்குள்ள பலமாக பொதுஜன பெரமுன கருதுகின்றது. பாராளுமன்றப் பெரும்பான்மை பொது ஜன பெரமுனவிடம் இருப்பதால், அதன் நிலைப்பாட்டை மீறி 21 ஐ நிறைவேற்றுவது சாத்தியமல்ல.

21 ஆவது திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான விடயத்தை பொதுஜன பெரமுன எதிர்க்கவில்லை. அதன்மூலம் பசில் ராஜபக்ச பதவி விலக வேண்டிவரும் என்பதைத் தெரிந்துகொண்டும் அதனை அவர்கள் ஏற்றார்கள். இதன்படி பசில் பதவி விலகுகின்றார். ராஜபக்சக்களுக்குள்ளேயே தனக்குத்தான் எதிர்ப்பு அதிகம் என்பது பசிலுக்குத் தெரிந்துள்ளது. தொடர்ந்தும் இங்கிருந்து அரசியல் செய்ய முடியாது என்ற நிலையில்தான் பதவியைத் துறக்க அவர் முன்வந்தார். 21 வரமுதலே பதவி துறப்பது கொஞ்சமாவது அனுதாபத்தைக் கொண்டுவரும் என அவர் கருதியிருக்கலாம்.

இரட்டைப் பிரஜாவுரிமை விடயத்தில் விட்டுக்கொடுத்து ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை அகற்றுவதை அனுமதிப்பதில்லை என்பதில் மொட்டு உறுதியாக இருக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் தனது நேர்காணலிலும் பெயரளவுக்கான ஒரு ஜனாதிபதியாக தான் இருக்க விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார். அதாவது – நிறைவேற்று அதிகாரங்களுடன் எஞ்சிய காலத்துக்கும் இருப்பதுதான் அவரது நோக்கம். மக்களுடைய எதிர்பார்ப்பு என்ன? நாட்டுக்கு எவ்வாறான அரசியலமைப்பு அவசியம்? என்ற கேள்விகளைவிட தேல்வியடைந்த ஜனாதிபதியாக தான் வீடு செல்லக்கூடாது என்பதில்தான் அதிக அக்கறையானவராக அவர் இருக்கின்றார்.

மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்வதற்கு – அல்லது சமாளிப்பதற்கு சகோதரர்கள் இருவரது (மகிந்த, பசில்) அரசியலையும் பலிகொடுத்து தன்னைப் பாதுகாப்பதுதான் கோட்டாபய உபாயமாக இருந்தது. அத்துடன் 21 ஆவது திருத்தம் என்று சொல்லி காலத்தைக் கடத்துவதற்கும் அவர் முற்படுகின்றார். கோட்டா கோ கம வில் போராடும் இளைஞர்கள் இதனை அனுமதிப்பார்களா? அவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்?

Tamil News