சிவில் சமூக கட்டமைப்புக்கள் ஏன் எமக்கு அவசியமாகிறது? – பேராசிரியர் ரகுராம் விசேட நேர்காணல்

சிவில் சமூக கட்டமைப்புக்கள் ஏன்

பேராசிரியர் ரகுராம் விசேட நேர்காணல்

சிவில் சமூக கட்டமைப்புக்கள் ஏன்சிவில் சமூக கட்டமைப்புக்கள் ஏன்: தமிழ் மக்களுடைய உரிமைகள் மற்றும் அடிப்படைப் பிரச்னைகள் தொடர்பில் தமிழ் சிவில் சமூகத்தின் செயற்பாடுகளின் அவசியம் அண்மைக் காலத்தில் பலமானதாக உணரப்படுகின்றது. தேசியம் சார்ந்த அரசியல் கட்சிகள் பொதுவான விடயங்களில் இணக்கப்பாட்டை எட்டுவதில் கூட, தடுமாறும் ஒரு நிலை காணப்படுகின்றது. கட்சி அரசியல் சாராது தமிழ் மக்களுடைய நலன்கள் சார்ந்து செயற்படக்கூடிய பலமான சிவில் சமூக கட்டமைப்புக்களின் தேவை அண்மைக் காலத்தில் வலியுறுத்தப்படுகின்றது. ஆனால், அதில் பல சவால்களும் உள்ளன. இவை குறித்து இந்த விடயத்தில் செயற்படும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ரகுராம் அனைத்துலக உயிரோடைத் தமிழ் தாயக களம் நிகழ்வுக்காக வழங்கிய நேர்காணலின் முக்கியமான பகுதிகள்.

கேள்வி:
தமிழ் மக்கள் சார்ந்து பொதுவான கோரிக்கை ஒன்றை சர்வதேச சமூகத்தை நோக்கி முன்வைப்பதில்கூட, தேசியம் சார்ந்த தமிழ் அரசியல் கட்சிகளால் உறுதியாகச் செயற்பட முடியாத நிலை உள்ளதை தற்போது காணமுடிகின்றது. இதற்கு என்ன காரணம்?

பதில்:
தமிழ் மக்களிடையேயான அரசியல் அபிலாஷைகளையும், நீண்ட கால அரசியல் நோக்கில தமிழ் மக்கள் வேண்டி நிற்கின்ற, தங்களுக்கான சுதந்திரத்திற்கான கட்டமைப்புக்களை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய கூட்டிணைவு தமிழ் அரசியல் கட்சிகளிடையே   மிகக் குறைவாகக் காணப்படுகின்றது.

தங்களிடையே இருக்கக்கூடிய தனித்த அடையாளங்கள், அரசியல் கொள்கைகள் குறித்த நிலைப்பாடுகளில் அவர்கள் வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும்கூட ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்திய நோக்கிலாவது இவர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தன்மை ஒன்று அவசியமாக இருக்கின்ற போது, தேவையை உணரும் பொறுப்புணர்வு மிகக் குறைவாகவே உள்ளது.

கேள்வி:
தமிழ்க் கட்சிகளை உறுதியான ஒரு பாதையில் கொண்டுசெல்வதில் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் முக்கியமான ஒரு பாத்திரத்தை வகிக்க முடியும் என எதிர்பார்க்கின்றீர்களா?

பதில்:
நிச்சயமாக. போராட்ட காலத்தில் போராட்ட சக்தியாக இருந்த விடுதலைப் புலிகள் காலத்தில் வெவ்வேறு பாதைகளில் பயணித்த அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, மக்களிடமிருந்து அரசியல் அமைப்பை கட்டியெழுப்ப வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது. ஆனால் போரின் பின்னரான காலப்பகுதியில் தமிழ் சிவில் சமூகத்தின் கட்டமைப்பு மன்னார் ஆயராக இருந்த இராயப்பு யோசப் அவர்களால் முன்னெடுக்கப் பட்டு வந்தது. அவர் தலைமை தாங்கிய சிவில் சமூக அமைப்பின் மையப் புள்ளியாக அவரே இருந்திருந்தார். அவருடைய நடவடிக்கைகளில் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மக்களிடம் இருந்ததை அவதானிக்க முடிந்தது. அந்தக் காலத்தில் வடகிழக்கு தழுவிய மிக முக்கியமான தமிழ் தலைவர்கள், சிவில் சமூகக் குழுக்களின் பிரதிநிதிகள் எல்லோருமே பேராயர் இராயப்பு யோசப் அவர்களின் வழிகாட்டுதலை எதிர்பார்த் திருந்த ஒரு காலம் இருந்தது.

ஆனால் பொது அரங்கிலே அவர் செயற்பட முடியாத பின்னர் சிவில் சமூகக் கட்டமைப்புகளின் உருவாக்கமும், அரசியல் கட்சிகள் இந்த சிவில் சமூகக் கட்டமைப்பின்பால் பொறுப்புக்கூற வேண்டிய நிலைப்பாடு இல்லாமல் இருப்பதை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டாலும் கூட ஆரம்பத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அந்தக் காலத்தில் இடம்பெற்ற எழுகதமிழ் ஒரு பெரிய எழுச்சியாக இடம்பெற்ற போது, இலட்சக் கணக்கான மக்கள் அதில் பங்குபற்றியிருந்தார்கள். நேரடியாக பங்குபற்ற முடியாத மக்கள் மத்தியில்கூட சிவில் சமூகக் கட்டமைப்பு என்பது இவ்வளவு ஒரு பலம் வாய்ந்ததாக அரசியல் சக்திகளை ஒன்றிணைக்கக்கூடிய வகையில் அமைந்திருந்தது.

கேள்வி:
தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் தமிழ் அரசியல் பரப்பில் ஆரோக்கியமானதாக நோக்கப்பட்டது. ஆனால், அது இன்று காணாமல் போய்விட்டது. இதற்கு காரணம் என்ன?

பதில்:
என்னைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் பேரவை தமிழ் தேசியப் பரப்பிலே உள்ளவர்களை இணைந்து நகர்கின்ற ஒரு முக்கிய தளமாக அது காணப்பட்டது. ஒரு கட்டத்தில் இதில் இணைந்திருந்த அரசியல் கட்சிகள் மேலோங்கிய நிலையிலே காணப்பட்டது. தலைமை வகித்தவர்கள் தமிழ் மக்கள் பேரவையை தமது பாதைக்கு ஏற்றவாறு பயன்படுத்துகின்ற ஒரு போக்கு ஏற்படத் தொடங்கியதும் தமிழ் மக்கள் பேரவை பலவீனப்படத் தொடங்கி விட்டது.

இந்தப் பலம் தமிழ் மக்கள் பேரவையைப் பொறுத்தவரையில் கட்டியெழுப்பப் படவில்லை. பலமான சிவில் சமூகக் கட்டமைப்பு உருவாக்கப்படுவதை யார் விரும்பாமல் இருக்கிறார்கள். அல்லது யார் அதுதொடர்பாக வேலை செய்யத் தயக்கம் காட்டுகிறார்கள் என்பதை நாங்கள் பார்க்க வேண்டிய நிலைமையும் இங்கே இருக்கிறது. எதிர் காலத்தில் தேசியம் சார்ந்த சிவில் சமூகக் கட்டமைப்புகளை உருவாக்க அறிவும், அனுபவமும் எங்களுக்குத் தேவையாக உள்ளது.

கேள்வி:
பலமான தமிழ் சிவில் சமூக கட்டமைப்புக்களை உருவாக்குவதில் இன்று எதிர்கொள்ளப்படும் சவால்கள் என்ன? அவற்றை எவ்வாறு தாண்டிச்செல்ல முடியும்? உங்கள் கருத்தென்ன?

பதில்:
நேரடியான, மறைமுகமான சவால்களாக நாங்கள் அவற்றைக் கருதலாம். நாட்டின் நிலைமை ஒரு சுதந்திரமான, சனநாயகம் மிக்க சிவில் சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு தடையாக இருக்கின்றது. பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல் சுதந்திரம் போன்றவற்றைக் கடந்து அந்த சுதந்திரங்கள் உறுதிப்படுத்தப் பட்ட ஒரு சூழ்நிலையில்தான் சிவில் சமூக அமைப்புக்கள் என்பவை உறுதியாகவும், தன்னெழுச்சியாகவும் உருவாக்கக்கூடிய நிலைமை உருவாகும். அதில் பங்குபற்றக் கூடியவர்களும் அவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் ஆர்வமுடன் அதில் அவர்களின் வகிபங்குகளைச் செலுத்தத் தயாராவார்கள்.

ஆனால் நாட்டில் தற்போது இருக்கும் நிலைமை என்பது சிவில் சமூக அமைப்புக்களை அல்லது அவைகளின் ஒன்றிணைவுகளை அல்லது அவை சுதந்திரமாகச் செயற்படக் கூடிய வாய்ப்புக்களை அருகச் செய்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. அதேபோல வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் இவ்வாறான ஒரு சூழல் இருந்தாலும், இவ்வாறான அமைப்புக்களை உருவாக்குவதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் விழிப்புக் காட்ட வேண்டிய ஒருதேவை இருக்கிறது. ஆனால் அவை அவற்றைச் செய்யாதிருக்கின்றன. அதுவும் ஒரு முக்கியமான விடயமாக இருக்கின்றது.

மக்கள் ஒரு திரட்சியாக அல்லது சிவில் சமூகம் ஒரு திரட்சியாக தமது குரலை உயர்த்துவதற்கு அரசியல்வாதிகள் பின்புலத்தில் இருந்து அதற்கான தளத்தை உருவாக்கி, தாங்கள் போராளிகளாக இருந்து மக்களை முன்னகர்த்தி அவர்களை வழிப்படுத்தக்கூடிய நிலைமையை தமிழ் அரசியல் கட்சிகள் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் அரசியல் கட்சிகள் யார் முன்னால் செல்வது என்ற பிரச்சினையில் இருக்கிறார்கள். எந்தக் கட்டமாக இருந்தாலும் அவர்கள் முன்னுக்கு வந்து விடுகிறார்கள். தமிழ் அரசியல் கட்சிகள், அரசியல் தலைமைகள் மக்கள் போராட்டமாக இருந்தாலும், அவற்றிலே தங்களின் பிரசன்னம் இருக்க வேண்டும் என்று நினைக்கிற அளவிற்கு அந்த மக்கள் திரட்சியை, மக்களிடமிருந்தான பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துவதற்கு தாங்கள் என்ன செய்ய முடியும் என்பதை அவர்கள் யோசிக்கத் தயங்குகிறார்கள்.

ஒரு பலமான வலுவான சிவில் சமூக அமைப்புக்கள் உருவாகுமாக இருந்தால், மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விடுவார்கள். தங்களுடைய பாதையை அவர்கள் சந்தேகத்துடன் நோக்க வேண்டிய நிலைமை உருவாகி விடும் என்பதனாலே, மக்கள் மத்தியில் ஒரு அரசியல் விழிப்புணர்வு, நடந்து கொண்டிருக்கும் விடயங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய தளங்களைக்கூட அரசியல் கட்சிகள் விருப்புடன் மேற்கொண்டு வருகின்றன என்பதை நாங்கள் காண முடியாதுள்ளது.  இப்படியான ஒரு சூழலுக்குள் இருந்து தான் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளதாக நான் உணர்கிறேன்.

Tamil News