Home செய்திகள் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க வலியுறுத்தும்  போராட்டம் எதற்காக?

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க வலியுறுத்தும்  போராட்டம் எதற்காக?

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க முன்னெடுக்கப்படும் போராட்டம் அரசியல் ரீதியாக தங்களை தக்கவைத்துக் கொள்ளும் போராட்டமா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்,

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றது.

இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க வலியுறுத்தி கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் கூட நடாத்தப்பட்டது.
இவ்வாறான காலப்பகுதியில் அதற்கு எந்த ஆதரவினையும் வழங்காதவர்கள் இன்று பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கும் கையெழுத்துப் பெறும் போராட்டமானது தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை இனத்தவர்களினால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அச்சுறுத்தல்களை கண்டும் காணாமலிருக்கும் இவர்கள்,  இன்று இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

நல்லாட்சிக் காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் பல போராட்டங்களை முன்னெடுத்து அது தொடர்பில் மகஜர்களையும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளித்தோம்.

அன்றைய ஆட்சிக் காலத்தில் தீர்மானிக்கும் சக்தியாகயிருந்தவர்கள் அதனைச் செய்யாது இன்று மக்கள் மத்தியில் நாடகம் அரங்கேற்ற முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.

இன்று இந்த கையெழுத்துப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளவர்கள் கிழக்கு மாகாணத்தை புறக்கணித்தே போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். கொழும்பிலும் வடக்கிலுமே இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என்ற போலி கோசத்துடன் இவர்கள் செயற்படுகின்றதை இது வெளிப்படுத்துகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டம் என்பது தமிழ் மக்களின் குரல் வளையினை நசுக்குவதற்கான ஆயுதம். அதனை இந்த நாட்டில் நீக்கவேண்டுமானால் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version