யுத்தம்  இல்லாத  நாட்டில் ஏன் இவ்வளவு இராணுவம்? ஏன் இந்தளவு இராணுவ முகாமக்கள்?-செல்வம் அடைக்கலநாதன்

இலங்கையில் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்து.

யுத்தம்  இல்லாத  நாட்டில் ஏன் இவ்வளவு இராணுவம்? ஏன் இந்தளவு இராணுவ முகாமக்கள்? ஏன் இந்தளவு நிதி ஒதுக்கம் எனக்கேள்வி எழுப்பிய   தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான வாக்களிப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்தே வாக்களிக்கும் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (நவ.16) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மீதான 2ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிட்டதாவது,

இலங்கையில் முப்படைகளையும் சேர்த்து 9 இலட்சம் வரையிலான படை வீரர்கள் உள்ளனர். இவர்களில்  பெருமளவானோர் வடக்கில் உள்ளனர்.

இவர்களின் முகாம்களுக்காக மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள், விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அபகரிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தில்  மக்களின் காணிகளில் இராணுவத்தினரே வசிக்கின்றனர். விவசாயிகளின் காணிகளில் இராணுவத்தினரே  விவசாயம் செய்கின்றனர்.

உணவகங்களை, சலூன்களைக்கூட இராணுவத்தினர்தான் நடத்துகின்றனர். நாட்டின் வேறு ஏதாவது பகுதிகளில் இவ்வாறு நடக்கின்றதா? வடக்கில் மட்டும் ஏன் இந்த நிலை?

 யுத்தம்  இல்லாத இலங்கையில் ஏன் இவ்வளவு இராணுவம்? ஏன் இந்தளவு இராணுவ முகாமக்கள்? ஏன் இந்தளவு நிதி ஒதுக்கம் ? இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.பாதுகாப்பு  அமைச்சுக்கான  நிதி ஒதுக்கீடு மீதான வாக்களிப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எதிர்த்தே வாக்களிக்கும் .

இதேவேளை, ஜனாதிபதியினால் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட  தமிழ் அரசியல் கைதிகளில் கிருபாகரன், எல்.நிமலன், குகதாசன் ஆகியோர் மீது பதுளை மற்றும் கொழும்பு நீதிமன்றங்களால் புதிதாக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. எனவே இதுதொடர்பில் ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.