ஆலயங்கள் அழித்தொழிக்கப்படும்போது இந்தியா ஏன் மௌனமாக இருக்கிறது -அகில இலங்கை இந்துமா மன்றம் கேள்வி

இலங்கை தொடர்பில் இந்தியாவுக்கு அக்கறை இருக்கின்றது என்றால் ஏன் இந்து ஆலயங்கள் அழித்தொழிக்கப்படும்போது மௌனமாக இருக்கிறீர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கத்திற்கு அளுத்தத்தை பிரயோகியுங்கள் என அகில இலங்கை இந்துமா மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் ஆலயங்கள் இடித்தழிக்கப்படுகின்ற சம்பவங்கள் தொடர்பாக அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவரும் சிவபூமியின் அறக்கட்டளைத் தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகன் கருத்துத் தெரிவிக்கின்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்

அவர் மேலும்தெரிவிக்கையில்,

“தமிழர் பகுதிகளிலுள்ள ஆலயங்கள் தெய்வ விக்கிரகங்கள் அழிக்கப்படுவது சேதமாக்கப்படுவது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இது மனவேதனை வருகின்ற விடையமாகும் குறிப்பாக சைவ மக்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சியான செய்திகள் வந்தவண்ணமுள்ளது.

வெடுக்குநாறி மட்டுமன்றி கீரி மலையில் ஆதிச்சிவன்கோவில் இருந்த இடம் தெரியாது சிதைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சைவ ஆலயங்களை தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தி பௌத்த அடையாளங்களாக மாற்றி வருகின்றார்கள்.

இந்தவார அதிர்ச்சியான செய்தியாக வவுனியா வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயம் இடித்தழிப்பு முழு இந்து மக்களையும் சீற்றமடைய வைத்துள்ளது. இலங்கையின் ஜனாதிபதி இந்த விடையத்தில் உரிய நடவடிக்கை எடுத்து யார் இதனை செய்தார்கள் என்பதை அறிந்து உரிய தண்டணை வழங்கவேண்டும்.

இந்த நடவடிக்கைகளை சமாளிப்பார்கள் என்றால் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறப்போகிறது என்ற சந்தேகமே எழுகின்றது. இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டணை வழங்கவேண்டும் இது இந்து மக்களுக்கு ஆறுதல் தரும் விடையமாக இருக்கும் சமீபத்தில் குறுந்தூர் மலை விவகாரத்தில் நீதித்துறையை மக்கள் நம்பி இருந்தார்கள். ஆனால் நீதித்துறை நடவடிக்கை எடுத்தும் பௌத்த விகாரை கட்டப்பட்டமையானது இலங்கையில் நீதி நியாயம் இல்லை என்பதை எடுத்துக்காட்டி நிற்கின்றது.

உலக அரங்கில் இலங்கை எத்தனையோ கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய நிலையில் பொருளாதாரத்தில் வழிமை இழந்து பிற நாடுகளை நம்பியுள்ள நிலையில் இத்தகைய அசம்பாவிதங்கள் மதங்களை இனங்களை தூண்டி மக்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற நிகழ்ச்சி நிரலாக அமைந்துள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படவேண்டும். இடித்தழிக்கப்பட்ட ஆலயங்கள் உடனடியாக மீள்நிர்மாணம் செய்யப்பட்டு சைவமக்கள் வழிபடக்கூடிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

பொலிஸார் இதற்கு காவல் கடமையில் ஈடுபட்டு இத்தகைய சம்வங்கள் நடைபெறாது இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.  அந்தந்த மாவட்டங்களில் இருக்கின்ற மாவட்ட செயலாளர்கள் ஆளுநர்கள் இத்தகைய நடவடிக்கைகள் இனிமேல் இடம்பெறாத வகையிலும் ஆலயங்களைப் பாதுகாக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.

போர்க்காலத்தை காரணம் காட்டி பல ஆலயங்கள் இடித்தழிக்கப்பட்டுள்ளது சைவ மக்களின் வறுமையை அடையாளம் கண்டு மதமாற்றங்கள் இடம் பெற்றுள்ளது.

சைவ மக்கள் என்றுமில்லாத வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். சைவ மக்கள் விக்கிரகங்கள் ஏதாவது வைத்தால் அதற்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள் பிற மதங்களின் அடையாளச் சின்னங்கள் வைத்தால் அது தொடர்பில் எவரும் வாய் திறப்பதில்லை.

நாவற்குழியில் காங்கேசன்துறையில் தையிட்டியில் எத்தனையே பௌத்த விகாரைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. கேட்பார் கிடையாது சைவ மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் ஏதாவது வைத்தால் விதண்டாவாதமும் கேள்விகளும் எழுகின்றது.

சமயத்தலைவர்களைப் பொறுத்த வரையில் யாரும் மதங்களுக்கு எதிரானவர்கள் அல்ல சைவ மக்களுக்கு பிரச்சினைகள் வரும் போது ஒரு சில சைவ பாராளுமன்ற உறுப்பினரக்ள் குரல் கொடுக்கின்றார்கள். ஏனையவர்கள் பேசாதிருக்கின்றார்கள் கிறிஸ்தவர்களுக்கு பிரச்சினை என்றால் கிறிஸ்தவ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் இருவர் குரல் கொடுக்கின்றார்கள் ஆனால் ஒட்டுமொத்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து குரல் கொடுப்பதில்லை.

மதங்களுக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்படுகின்றுபோது அதனைத் தீர்த்து வைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்துக் குரல் கொடுப்பதில்லை. இது கவலையான விடையமாகும். ஆலயங்கள் சேதமாக்கப்படுகின்றபோது இடித்தழிக்கும் போது குரல் கொடுப்பதும் ஊர்வலங்கள் செய்வதும் ஏற்புடையதல்ல அவை இனி இடம்பெறாது இருப்பதற்கான நடவடிக்கைகள் ஒருமித்து எடுக்கப்படவேண்டும்.

ஆணித்தரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் மணித்தியலக்கணக்கில் பேசிப் பிரயோசம் இல்லை இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கு ஏற்ற வகையில்; பாராளுமன்றத்தில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடவேண்டும்.

சத்திய வழியில் இதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் நீங்கள் ஒற்றுமை இல்லாத நிலையில் காணப்படுகின்றீர்கள் இனியாவது இதனை கைவிட்டு இத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறாத வகையில் ஒருமித்து செயற்படுங்கள். இலங்கையில் எத்தனையோ ஆதிசிவன்கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன இதன் வலியை தற்போது இலங்கை அரசாங்கம் உணர்ந்து கொண்டிருக்கின்றது.

இனியும் ஆலயங்கள் இடித்தழிக்கப்படுமேயானால் இந்த நாடு வறுமையையும் துன்பத்தையும் சந்திக்கப்போகும் இதிலிருந்து தப்புவதற்கு நீதி தேவன் நிமிர்ந்து நிற்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்இந்த விடயத்தில் இந்திய அரசாங்கம் மௌனம் காக்கக்கூடாது இந்திய அரசாங்கம் இலங்கை விடையத்தில் அக்கறை இருப்பதென்றால் இந்த விடையத்தில் ஏன் மௌமாக இருக்கின்றீர்கள் என்பதை உங்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.