முற்றாக முடங்கிய இலங்கை ஏன் தடுக்க முடியவில்லை? | கலாநிதி எம்.கணேசமூர்த்தி நேர்காணல்

எரிபொருள் நெருக்கடியால் இலங்கை முழுமையாக முடங்கியுள்ளது. அடுத்து வரப்போகும் வாரங்களில் இந்த நிலை மேலும் மோசமடையப் போகின்றது. இந்த நிலையை அரசினால் ஏன் தடுக்க முடியவில்லை போன்ற கேள்விகளுடன் கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி அவர்கள் உயிரோடை தமிழ் தாயகக்களம் நிகழ்வுக்காக வழங்கிய நேர்காணலை இலக்கு வாசகர்களுக்காக தருகின்றோம்.

கேள்வி:
எரிபொருள் நெருக்கடியால் இலங்கை கிட்டத்தட்ட முற்றாகவே முடங்கிப்போயுள்ளது. இந்த நிலை அடுத்து வரப்போகும் மூன்று நான்கு வாரங்களுக்கும் தொடரப்போகின்றது. இவ்வாறான ஒரு நிலை ஏற்படும் என்பது முன்னரே தெரிந்திருந்தும் அதனை அரசாங்கத்தினால் தடுக்க முடியாமல் போனமைக்கு காரணம் என்ன?

பதில்:
வழமையாகவே இவ்வாறான நிலைமைகள் பற்றிய எதிர்வுகூறல்கள் முன்னர் வெளிவருகின்ற போதிலும் கூட, அவற்றையிட்டு அந்த நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என முன்கூட்டியே எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசாங்கம் காலந்தாழ்த்தியமை ஒரு காரணமாக இருக்கின்றது. இப்போது எரிபொருள் கப்பல்களைக் கொண்டுவரக்கூடியதாக இருக்கும் என அரசாங்கம் இறுதிக்கட்டம் வரையில் நம்பிக்கொண்டிருந்ததாகவும் தெரிகின்றது. இலங்கையின் கடன்பத்திரங்களை வழங்குனர்கள் ஏற்றுக்கொள்ளாதததும் ஒரு காரணமாக சொல்லப்படுகின்றது. அதன் காரணமாகத்தான் இப்போது இலங்கை அரசாங்கம் மாற்று வழிகளை நாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

இவ்வாறான ஒரு நிலைமை உருவாகும் என இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கவில்லை என்ற கருத்து ஒன்றும் முன்வைக்கப்படுகின்றது. அதாவது இலங்கைக்கு வழமையாக எரிபொருட்களை வழங்குகின்ற நாடுகள் அவற்றை வழங்க முடியாது என்று சொல்வார்கள் என்று இலங்கை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அவ்வாறு ஏற்பட்டாலும் அதற்கு என்ன மாற்றுவழியைக் கையாளலாம் என்பதையிட்டு அவர்கள் சிந்தித்திருக்க வேண்டும். இப்போது இந்த நிலைமை மோசமான நிலையிலிருந்து படுமோசமான நிலைக்கு நாட்டைத்தள்ளிவிட்டுள்ளது. எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் எந்தக் கப்பலும் வராது என்ற தகவலைத்தான் இறுதியாக வந்த அறிக்கைகளில் பார்க்கக்கூடியதாக இருந்தது. ஆக, அடுத்த மூன்று வாரங்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் தவிர்ந்த ஏனையவற்றுக்கு எரிபொருள் இல்iயென்றால் நாடு முழுவதும் முடங்கிப்போகக்கூடிய ஆபத்துதான் உள்ளது.

இந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பது என்பதுதான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கப்போகின்றது. இப்போதே பல்வேறு தொழில்துறைகள் முடங்கிக்கொண்டு வருகின்றன. இவ்வாறான தொழில்துறைகளில் ஈடுபட்டிருப்பவர்களின் வாழ்வாதாரம் படிப்படியாக முடங்கிக்கொண்டு செல்கின்றது. இவ்வாறான நிலையில் இந்த நாட்டை மீளக்கட்டியெழுப்புவதென்பது ஒரு பெரும் சவாலாகவே அமையப்போகின்றது. இந்த நெருக்கடியானது இலங்கையின் பொருளாதாரத்தில் குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக அமையப்போகின்றது.

கேள்வி:
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றவற்றிடமிருந்து எவ்வாறான உதவிகளை இன்றைய திருணத்தில் இலங்கையால் பெறக்கூடியதாக இருக்கும்?

பதில்:
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி என்பன தமக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அதிகார வரம்பிற்குட்பட்டுத்தான் எப்போதும் உதவிகளை வழங்க முடியும். உலக வங்கியின் சார்பில் அண்மையில் வெளிவந்திருக்கும் அறிக்கை ஒன்றின்படி அண்மையில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்து அவற்றை நடைமுறைப்படுத்த முடியுமா அவற்றுக்கு நிதி வழங்கலாமா என்பதையிட்டு ஆராய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கும் என்பது தெரியவில்லை. அதேபோல சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளும் இப்போது வந்துசென்றிருக்கின்றார்கள். நாட்டின் தலைவர்களையும் அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்திருக்கின்றார்கள். இலங்கைக்கு உதவி செய்வோம் எனவும் அவர்கள் சொல்லிச்சென்றுள்ளார்கள்.

இந்த இரண்டு அமைப்புக்களைவிட அமெரிக்காவும் உதவிகளைச் செய்வதாகக்கூறியிருக்கின்றது. ஆனால், அந்த உதவிகள் வந்துசேர காலமெடுக்கும். ஆனால், எமக்கு உடனடியாக எரிபொருள் தேவை. எரிபொருளை உடனடியாக வழங்கக்கூடியதாக எந்தவொரு நாடும் இருக்கின்றதா என்பது எமக்குத் தெரியவில்லை. அமைச்சர்கள் அதிகாரிகள் இப்போது ரஸ்யாவுக்கும் கட்டாருக்கும் பறந்திருக்கின்றார்கள். அந்த பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் பற்றி இன்னும் எமக்குத் தெரியவில்லை. ஏதாவது அதிசயம் நிகழ்ந்து ரஸ்யாவிலிருந்து அல்லது கட்டாரிலிருந்து எரிபொருள் கிடைக்குமாக இருந்தால் இந்த நெருக்கடியிலிருந்து ஓரளவுக்காவது தாக்குப்பிடிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால், அவ்வாறான எந்த சமிஞ்ஞையும் தென்படவில்லை என்பதுதான் தூரதிஸ்டம்.

கேள்வி:
சர்வதேச உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் அல்லது தடைகள் என்ன?

பதில்:
ஒரேயொரு தடைதான். பெற்ற கடன்களைத் திருப்பிச்செலுத்த முடியாது என அறிவித்தமை – அதற்கு முன்னதாக சர்வதேச ரீதியாக இலங்கையின் கடன் மீளச் செலுத்துகை தொடர்பான ஆற்றலை அவை தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்ளும் அமைப்புக்கள் குறைத்து மதிப்பிட்டன. கடன்களை மீளச்செலுத்த முடியாது என அறிவித்த உடனடியாகவே இலங்கை வங்குரோத்து நிலையில் உள்ள ஒரு நாடு என அவை அறிவித்தன. கடன்களை மீளச்செலுத்த முடியாமல் வங்குரோத்து நிலையில் இருக்கின்ற போது சர்வதேச ரீதியாக இருக்கின்ற கடன் சந்தைகளில் இலங்கையால் கடன்பெறமுடியாது. அதாவது வெளியிலிருந்து கடன்பெற முடியாத ஒரு நிலைமை.

அதேபோல சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி என்பவற்றிடமிருந்து பெறப்படுகின்ற கடன்களும் உடனடியாக வந்துசேர முடியாத நிலைமை உள்ளது. அதனைவிட அவற்றிடமிருந்து கிடைக்கப்பெறுகின்ற கடன்தொகையும் பெரியளவில் இருக்கப்போவதில்லை. அதனால்தான் மாற்று வழிகளில் சில நட்பு நாடுகளிடமிருந்து கடன்களைப் பெற்றுக்கொள்கின்ற நிலை ஏற்படுகின்றது. இந்த வகையில் அண்டைநாடான இந்தியா பெரியளவிலான உதவிகளைச் செய்துவருகின்றது.

கேள்வி:
இலங்கையில் நடைபெறும் மக்கள் போராட்டம் இந்த உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் பாதிப்புக்களை ஏற்படுத்துமா?

பதில்:
இரண்டு விதமாக இதனைப் பார்க்கலாம். ஒன்று – மக்கள் இந்தப் போராட்டங்களை வேண்டுமென்றே செய்யவில்லை. மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்ல முடியாத ஒரு நிலையில்தான் வீதிகளில் இறங்கியிருக்கின்றார்கள். எதிர்வரும் காலங்களில் இது மேலும் தீவிரமடைவதற்கான சூழ்நிலைகள்தான் அதிகமாகக்காணப்படுகின்றன. இதில் இருக்கக்கூடிய ஆபத்தான அச்சம் என்னசென்றால் இந்தப் போராட்டங்கள் வன்முறை கலந்த போராட்டங்களாக மாறக்சூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. அவ்வாறு மாறுமாக இருந்தால் இலங்கை மிகப்பெரிய பாதகமான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவ்வாறு மாற்றமடையும் நிலையில் இலங்கைக்கு கிடைக்கவிருக்கின்ற உதவிகள் தொடர்பில் இரண்டுவிதமாக உலக நாடுகள் பார்க்கலாம். ஒன்று – இலங்கைக்கு உதவிகள் தேவை என்று சிந்திக்கலாம். அல்லது இவ்விதம் வன்முறைகள் நிகழும் நாட்டுக்கு உதவிகள் தேவையில்லை என்றும் அவர்கள் சிந்திக்கலாம். இந்த இரண்டு நிலைமைகளும் இருக்கின்றது. ஆனால், இந்தப் போராட்டம் தீவிரமடைந்து வன்முறை கலந்ததாக மாற்றமடைந்தால் இலங்கைக்கு கிடைக்கவிருக்கின்ற உதவிகளில் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றே நான் நம்புகின்றேன்.

கேள்வி:
ஜனாதிபதி பதவி விலகினால்தான் வெளிநாடுகளின் உதவிகள் கிடைக்கும் என எதிரணிகளைச் சேர்ந்த சிலர் சொல்கின்றார்கள். இது உண்மையா?

பதில்:
இது தொடர்பிலும் இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. ஜனாதிபதி பதவி விலகினால் உலக நாடுகள் பெருமளவு உதவிகளைக் கொண்டுவந்து கொட்டும் என அவை குறிப்பிடுகின்றன. ஆனால், அந்த உதவிகள் எவ்வாறு கிடைக்கும் என்பதற்கான பாதை வரைபடம் எதனையும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கவில்லை. அவற்றை அவர்கள் முன்வைக்கப்போவதுமில்லை. ஏனெனில் அவற்றைப் பயன்படுத்தி அரசாங்கம் காய் நகர்தலாம் என்ற பயம் அவர்களிடம் உள்ளது. அல்லது அவர்களிடம் அவ்வாறான திட்டம் எதுவும் இல்லாமலும் இருக்கலாம்.

ஆனால், தற்போதைய ஆட்சி பதவியிலிருப்பதில் மேற்கு நாடுகளும், உதவி வழங்கும் நிறுவனங்களும் விருப்பமாக இல்லை என்பதை அவர்களுடைய செயற்பாடுகளைப் பார்க்கும் போது புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.