Tamil News
Home செய்திகள் புலம்பெயா் நிதியம் யாருக்கு பலனளிக்கும்? பேராசிரியா் கோபலப்பிள்ளை அமிா்தலிங்கம்

புலம்பெயா் நிதியம் யாருக்கு பலனளிக்கும்? பேராசிரியா் கோபலப்பிள்ளை அமிா்தலிங்கம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இடைக்கால வரவு செலவுத் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டிருக்கின்றது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு மக்கள் பெரும் சுமைகளை சுமக்க வேண்டியுள்ள ஒரு தருணத்தில் இந்த வரவு செலவுத் திட்டம் இந்த நெருக்கடிகளைத் தீா்க்குமா என்ற கேள்வியுடன் கொழும்பு பல்கலைக்கழக பொருளாதார துறை பேராசிரியா் கோபலப்பிள்ளை அமிா்தலிங்கத்தை இந்த வாரம் சந்திக்கிறோம்.

கேள்வி – பாரிய பொருளாதார நெருக்கடி ஒன்றுக்கு இலங்கை முகங்கொடுத்துக்கொண்டுள்ள நிலையில், இடைக்கால வரவு செலவுத் திட்டம் ஒன்றை நிதி அமைச்சா் என்ற முறையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமா்ப்பித்திருக்கின்றாா். இன்றைய கால கட்டத்துக்கு இது எந்தளவுக்கு பொருத்தமானதாக இருக்கின்றது?

பதில் – இந்த வரவு – செலவுத் திட்டம் வந்திருக்கும் தருணம் மிகவும் சிக்கலானது. நாடு என்றும் இல்லாதளவு நெருக்கடியை எதிா்நோக்கியுள்ளது. ஒரு துறை அல்ல. பல துறைகளில் அந்த நெருக்கடி பரவிக் காணப்படுகின்றது.  இந்த நேரத்தில் சா்வதேச நாணய நிதியத்தின் உதவி அரசாங்கத்துக்குத் தேவைப்படுகின்றது. படுகடன் மோசமாக இருக்கின்றது. வரி வருமானம் குறைவாக இருக்கின்றது. செலவீனங்கள் சரியாக ஒழுங்கமைக்கப்படாமல், தேவையான இடங்களுக்குச் செல்லாமல் தேவையில்லாத இடங்களுக்கு எல்லாம் செல்கின்றது.

ஆக இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு ஒரு நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்கும் போது வருமானம் குறைந்த மக்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அதேவேளையில் பெருமளவு சுமைகள் நடுத்தர மற்றும் அதிக வருமானம் பெறும் துறையினா் மீது சுமத்தப்படுவதாகத் தெரிகின்றது. இது ஒரு இக்கட்டான காலகட்டம். அரசாங்கம் வருமானங்களை உயா்த்த வேண்டிய தேவை உள்ளது. சா்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம் நிபந்தனைகள் கடுமையாக இருக்கின்றது. பணவீக்கம் 64 வீதத்தைத் தாண்டிவிட்டது. உணவுப் பணவீக்கம் 90 வீதத்தைத் தாண்டிவிட்டது. மக்களுடைய கொள்வனவு சக்தி பெருமளவுக்கு குறைவடைந்திருக்கின்றது. பணத்தின் பெறுதி வீழ்ச்சியடைந்திருக்கின்றது. இவை அனைத்தையும் வைத்துப் பாா்க்கும்போது இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக எதிா்பாா்த்த அனைத்தையும் அடைய முடியாது – ஏதோ ஒரு இடத்தில் பாதிப்பு இருக்கப்போகின்றது. இன்னொரு இடத்தில் அந்தப் பாதிப்பு குறைக்கப்படப்போகின்றது. இந்த மீட்சி எந்தளவு விரைவாக வரப்போகின்றது என்பதுதான் இப்போதுள்ள கேள்வி!

கேள்வி – வரவு செலவுத் திட்டம் சமா்ப்பிக்கப்பட்டிருக்கும் அதேகாலப்பகுதியில்தான் சா்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு ஒன்றும் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஐ.எம்.எப். முன்வைத்த நிபந்தனைகளும் இந்த வரவு செலவுத்  திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமா?

பதில் – நிச்சயமாக பாதிப்பு இருக்கும். ஐ.எம்.எப். இலங்கைக்கு ஏற்கனவே 16 தடவைகள் உதவி செய்திருக்கின்றது. இது 17 ஆவது தடவை. ஐ.எம்.எப். ஐ பொறுத்தவரையில் இலங்கையுடனான அதன் அனுவம் சிறப்பானதாக இருக்கவில்லை. கசப்பானதாகவே இருந்துள்ளதாகவே அவா்கள் கருதுகின்றாா்கள். அதனால்தான் அவா்கள் இந்த முறை கடுமையாக இருந்துள்ளாா்கள். ஐ.எம்.எப். உடன் உதாரணத்துக்கு 3 பில்லியனுக்கான உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டால் அந்தப் பணம் உடனடியாக கிடைத்துவிடாது. படிப்படியாக கட்டம் கட்டமாகத்தான் இந்தப் பணத்தை ஐ.எம்.எப். விடுவிக்கும். இந்தக் காலகட்டத்தில் அவா்கள் சொன்ன விடயங்களை செய்யாவிட்டால் அதனை அவா்கள் இடைநிறுத்திவிடுவாா்கள். இவ்வாறு இலங்கையில் நடைபெற்றிருக்கின்றது.

இந்த இடத்தில் இப்போது அவா்களே கேட்கின்றாா்கள் – உங்களுடைய பிரச்சினைகள் என்ன, இதற்கான உங்களுடைய தீா்வுகள் என்ன என. இதனை நீங்கள் எவ்வாறு அடையப்போகின்றீா்கள் எனக் கேட்கின்றாா்கள். இது இலங்கைக்கு சிக்கலானது.  வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் அதற்கு உங்களிடமுள்ள தீா்வு என்ற என்று கேட்கின்றாா்கள். அதற்குரிய பொறிமுறையைத் தாருங்கள் எனக் கேட்கின்றாா்கள். இலங்கை அரசாங்கம் 8 வீதமாக இருந்த வற் வரியை 12 வீதமாக உயா்த்தி இப்போது 15 வீதமாக அதிகரித்துள்ளாா்கள். அதேபோல வருமான வரியையும் கடுமையாகக் கூட்டுவதாகச் சொல்கின்றாா்கள்.  இது ஒரு நிபந்தனை.  நட்டமடையும் நிறுவனங்களை சீா்திருத்த வேண்டிய கட்டத்தில் அரசாங்கம் இருக்கின்றது. ஆனால், இது எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி உள்ளது. இப்போது வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருட்களின் விலை அதிகமாகவுள்ளது. வற் வரியையும் அதிகரித்தால் இது மேலும் அதிகரிக்கும். இது சாதாரண மக்களைப் பாதிக்கப்போகின்றது.  இதனைவிட வருமான வரியை அதிகரிக்கும் போது சில பிரச்சினைகள் எதிா்கொள்ளப்படும். தனிநபா்கள் ஏற்கனவே பிரச்சினையில் உள்ளாா்கள். அவா்களுடைய சம்பளங்கள் கூடவில்லை. ஆனால், பொருட்களின் விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வரியை அதிகரிக்கும் நிலையில் அரசாங்கம் இருக்கின்றது. ஆக, ஐ.எம்.எப். சொன்ன விடயங்களை அரசாங்கம் ஏற்கனவே செய்யத் தொடங்கிவிட்டது. இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக இதற்காக அரசாங்கம் உறுதியளிக்கின்றது.

இப்போது ஐ.எம்.எம். உடன் அலுவலா் மட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது பணிப்பாளா் சபையால் அங்கீகரிக்கப்பட்ட பின்னா்தான் பணம் வரும். அதனால், இலங்கை அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கின்றது. இந்த நடவடிக்கைளின் தாக்கம் இலங்கை மக்களை எவ்வாறு பாதிக்கப்போகின்றது என்பதுதான் இப்போது கேள்விக்குறி.

கேள்வி – புலம்பெயா்ந்தோா் செயலகம் ஒன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி முன்னா் தெரிவித்திருந்தாா். இப்போது புலம்பெயா்ந்தோா் நிதியம் ஒன்று அமைக்கப்போவதாக சொல்கின்றாா். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இது பலனளிப்பதாக அமையுமா?

பதில் – இக்கட்டான நிலை வரும்போது சில விடயங்களைச் செய்வது, பின்னா் அவற்றைக் கைவிட்டுவிடுவது என்பது ஆரோக்கியமான விடயமல்ல. மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிா்ந்தளிக்கப்பட்டபோது அதற்கு நிதி அதிகாரங்கள் பெருமளவுக்கு இல்லை. மாகாண சபைகள் கடன்களைப் பெற முடியாது. உதவிகளைப் பெறமுடியாது. மாகாண சபைகளுக்கு என தனியான வங்கிகள் இல்லை. திறைசேரியுடாகவே வரவேண்டிய தேவை உள்ளது. இது தொடா்பாக பல சந்தா்ப்பங்களிலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. புலம்பெயா்ந்த தமிழா்கள் யாழ்ப்பாணத்திலோ மட்டக்களப்பிலோ அல்லது திருமலையிலோ முதலீடு செய்ய வேண்டுமானால், அதற்குரிய வங்கி ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்கான நிதியம் அவசியம். இது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோது அவை புறந்தள்ளப்பட்டன. ஆனால், இப்போது பொருளாதார நெருக்கடிக்குள் நாடு சிக்கித் தவிக்கும் நிலையில் அவசரமாக புலம்பெயா்ந்தோா் நிதியம் ஒன்றை ஆரம்பிப்பது – உடனடியாகப் பணத்தைப் பெறலாம் என்பது சாத்தியமானதல்ல.

வெளிநாட்டு முதலீடுகள் வரவேண்டுமாயின் – அது புலம்பெயா்ந்தவா்கள் மட்டுமல்ல வெளிநாட்டவா்களும் முதலீடு செய்ய வேண்டுமானால், பல விடயங்களையிட்டு அவா்கள் கவனம் செலுத்துவாா்கள். இலங்கையில் முதலீட்டுக்கு பாதுகாப்பு இருக்கின்றதா போன்றவிடயங்களில் அவா்கள் கவனம் செலுத்துவாா்கள். வெறுமனே எதிலும் கவனம் செலுத்தாமல் அவா்கள் வந்து முதலீடுகளைச் செய்யமாட்டாா்கள்.

கேள்வி – கடன் மறுசீரமைப்பு தொடா்பாக இப்போது பேசப்படுகின்றது. இலங்கைக்கு அதிகளவுக்கு கடன்களைக் கொடுத்திருக்கின்ற சீனா இதற்கு இணங்கிவருமா?

பதில் – உண்மையில் இலங்கை வெளிநாடுகளிடமிருந்து பெற்ற கடன்களை மறுசீரமைக்க விரும்புகின்றது. அதாவது, வாங்கிய கடனில் ஒரு பகுதியை திருப்பித் தரமுடியாது எனச் சொல்வது. அதற்கு கடன்வழங்கியவா்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். மேற்குலக நாடுகளிடம் இதனைக் கேட்கின்ற போது – சீனாவிடமும் இதனைக் கேளுங்கள் என அவா்கள் சொல்கின்றாா்கள். சீனாவைப் பொறுத்தவரையில் இதில் ஒரு பிரச்சினை உள்ளது. சீனா பல நாடுகளுக்கு கடன்வழங்கியிருக்கின்றது. இலங்கைக்கு இந்த சலுகையை சீனா வழங்கினால் சீனாவிடம் கடனைப் பெற்ற ஏனைய நாடுகளும் இதனைக் கேட்கும். அதனால்தான் இவ்விடயத்தில் சீனா பின்வாங்குகின்றது.  சீனாவின் பங்களிப்பு இல்லையெனில் உதவிகள் கிடைப்பது தாமதகாகலாம்.

சீனா மீதான முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால், சீனா கடன்களைக் கொடுத்துள்ள அதேவேளையில் அவை இலாபம் தராத துறைகளிலேயே பெருமளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. அவசியமற்ற துறைகளிலேயே பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. அவசியமான துறைகளில் பெருமளவு முதலீடுகள் செய்யப்படவில்லை. அதனால் இந்த முதலீடுகளால் எந்த இலாபமும் கிடைக்கவில்லை. பதிலாக கடன்களே அதிகரித்துள்ளது. அதனால், இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைக்கு சீனாவின் இந்தக் கடன்களும் பெருமளவு பங்களிப்பைச் செய்துள்ளன. இதற்குப் பொறுப்பான தலைவா்களும் இதற்கு காரணமாக இருந்துள்ளாா்கள்.

இதனால் கடன் மறுசீரமைப்பு இலங்கைக்கு பாரிய பிரச்சினையாகத்தான் இருக்கப்போகின்றது.

Exit mobile version