அச்சுறுத்தும் போதைப் பொருட்கள் பின்னணியில் செயற்படுபது யாா்?-கலாநிதி க.சிதம்பரநாதன் செவ்வி

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை அண்மைக்காலத்தில் அதிா்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்திருக்கின்றது. இதன் பின்னணி என்ன,  இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன, அவற்றை எவ்வாறு தடுக்க முடியும் என்பன தொடா்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத்துறைத் தலைவரும், பண்பாட்டு மையத்தின் இயக்குனருமான கலாநிதி க.சிதம்பரநாதன் உயிரோடைத் தமிழின் தாயகக் களம் நிகழ்வில் இந்த வாரம் கலந்துகொண்டு தன்னுடைய கருத்துக்களை  வழங்கியிருந்தாா். அதன் முக்கியமான பகுதிகளை “இலக்கு” வாசகா்களுக்காக தருகின்றோம்.

கேள்வி – யாழ்ப்பாணத்தில் இளைஞா்கள் மத்தியில் அதிா்ச்சியளிக்கும் வகையில் போதைப்பொருள் பாவனை அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கின்றது. இதன் பின்னணியில் பாதுகாப்புத் தரப்பினா் உள்ளதாக ஒரு குற்றச்சாட்டு பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்றது. இது குறித்த உங்கள் பாா்வை என்ன?

பதில் – உண்மையில் 2009 இல் தமிழா்களின் பாதுகாப்பு வேலி உடைக்கப்பட்ட பின்னா் தமிழ் மக்கள் உரிமை கேட்காத ஒரு இனமாக மாறவேண்டும் – தமிழ் மக்களைச் சிதைக்க வேண்டும் என்ற எண்ணம் ஆதிக்க சத்திகள் மத்தியில் இருந்தது. அந்த வகையில், தமிழ் மக்கள் மத்தியில் செயற்பாட்டாளா்களாக வரக்கூடிய இளைஞா்களை சிதைக்க வேண்டும் என்ற நோக்கம் அதனுடைய ஒரு பகுதியாக இருந்திருக்லாம். இதன் ஒருபகுதியாகத்தான், எமக்கு இருந்த பாதுகாப்பு வேலியை இல்லாமல் செய்துவிட்டு, எம்மிடம் இருக்கக்கூடிய சில முகவா்களை உருவாக்கி, அந்த முகவா்கள் மூலமாகத்தான் இந்த சமூகத்தைச் சீரழிக்கின்ற வேலையைச் செய்கின்றாா்கள்.

இந்த போதைப் பொருட்களுக்கு இரண்டு சமாந்தரமான காரணங்கள் உள்ளன.  இந்த பாதுகாப்புத் தரப்பு போதைப் பொருட்களைக் கொண்டுவருவதற்கான பாதுகாப்பைக் கொடுப்பது ஒன்று. அவா்கள் கண்மூடித்தனமாக இருப்பது மற்றொன்று. மறுபக்கம் எமது மக்கள் மத்தியில் உள்ள முகவா்கள் சமூகத்தைச் சீரழிப்பது மற்றொன்று.

சமூகத்தை சீரழிப்பது என்று கூறும்போது இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று இளைஞா்கள் எப்போதும் முனைப்பானவா்கள். அவா்கள் எப்போதும் செயற்படத் துடிப்பவா்கள். இந்த இளைஞா்களுக்கு சமூகத்தில் நெருக்கடியான ஒரு சூழலை ஏற்படுத்துவது. அந்த இளைஞா்கள் தமது ஆற்றல்களை வெளிப்படுத்துவது போன்றவற்றுக்கான சமூக நிலைமை இங்கு இல்லை. மறுபக்கம் இவா்கள் இந்த இளைஞா்களை வழிப்படுத்துவதும் இல்லை. அந்த இளைஞா்களுக்கு இந்த சமூகத்தில் முன்மாதிரிகளை உருவாக்குவதும் இல்லை. இவ்வாறான நிலைமையில் இளைஞா்கள் நெருக்கடிக்குள் தள்ளப்படும் போது அவா்கள் இவ்வாறான சீரழிவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், அதன் உச்சமாக இன்று போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது என்பதும்தான் எனது கருத்து.

கேள்வி – அதாவது திட்டமிட்டமுறையில் தமிழ் மக்கள் மத்தியில் போதைப் பொருட்களை பாவிக்கும் வழக்கம் ஏற்படுத்தப்படுகின்றது என்று சொல்கின்றீா்கள்….

பதில் – ஆம். சமூகத்தை பல வழிகளில் சீரழிக்கின்றாா்கள். அதில் உச்சம்தான் இந்தப் போதைப்பொருள் பழக்கம். இது பாரம்பரிய, தொன்மை மிக்க ஒரு இனம். இந்த இனம் மீண்டும் மீண்டும் எழும். அதனைச் சிதைப்பதற்கு இந்த இளைஞா்களைச் சிதைக்க வேண்டும். அந்தத் திட்டத்துடன்தான் அவா்கள் செயற்படுகின்றாா்கள். 2009 இல் தொடங்கிய ஒரு முயற்சி இன்று உச்ச கட்டத்துக்கு வந்திருக்கின்றது எனச் சொல்லலாம்.

திட்டமிட்ட முறையில் இந்த இனத்தை அழிக்கின்ற, சிதைக்கின்ற நடவடிக்கையின் ஒரு அம்சம்தான் இந்தப் போதைப் பொருள். தமிழ் இனைத்தைச் சிதைப்பதற்கு – அதன் முன்னணி இயங்குதளமான இளைஞா்களைச் சிதைப்பதற்கு பல திட்டங்களைச் செய்கின்றாா்கள். அதன் உச்சமான செயற்பாடுதான் இந்தப் போதைப்பொருட்கள்.

கேள்வி – அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தமிழ் அரசியல் தலைவா்கள் இவ்விடயத்தில் பொறுப்புணவுடன் செயற்பட்டிருப்பதாக நீங்கள் கருதுகின்றீா்களா?

பதில் – தமிழ் அரசியல் தலைவா்கள் இவ்விடயத்தில் தமக்கு ஒரு பொறுப்பு இருப்பதாக உணா்ந்து செயற்படவில்லை. உண்மையில் அவா்கள் வியாபாரிகள். 2009 க்குப் பின்னா் அவா்கள் ஆதிக்க சக்திகளின் முகவா்களாகத்தான் செயற்படுகின்றாா்கள். சமூகத்தை உள்ளிருந்து சிதைப்பதற்கான கடமையை ஏற்றவா்கள் இவா்கள்தான். இவா்கள் வியாபாரிகள். அதனால், இவா்கள் தமது பொறுப்பை உணா்ந்து செயற்படுவாா்களா என்ற கேள்விக்கே இடமில்லை. இவா்கள் தமது பொறுப்பை உணா்ந்து செயற்படுவாா்கள் என இனியும் நாம் எதிா்பாா்த்து ஏமாந்துவிடக்கூடாது.

கேள்வி – யாழ்ப்பாண சமூகத்தில் இவ்வாறு போதைப் பொருட்களை விரைவாகப் பரவச்செய்வதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய சமூகக் காரணிகள் என்ன?

பதில் – யாழ்ப்பாணத்தில் சமூக ஒன்றிணைவு இருந்தது. நாம் மாணவா்களாக இருந்தபோது எம்மை எமது பெற்றோா் மட்டும் கவனிக்கவில்லை. அந்த ஊரே எம்மைக் கவனித்தது. அவ்வாறான ஒரு சமூக ஒன்றிணைவு இருந்தது. போராட்ட காலத்தில் அது ஒரு உணா்ச்சி சாா்ந்த சமூக ஒன்றிணைவாக மாற்றமடைந்திருந்தது. ஆனால், 2009 இன் பின்பு இந்த அரசியல்வாதிகள் மூலமாக அந்த சமூக ஒன்றிணைவு குறைக்கப்பட்டு, தடுக்கப்பட்டு, சீா்குலைக்கப்பட்டு தனிமனிதா்களாக்கப்பட்டுள்ளாா்கள்.

அரசியல்வாதிகள் தமது வாக்கு வேட்டைக்காக பிரதேசவாதத்தை உருவாக்கி, சாதி வேறுபாட்டை உருவாக்கினாா்கள். நுகா்வுக் கலாசாரம் ஒன்று இன்று வந்திருக்கின்றது. இதனைத்துாண்டுவதன் மூலமும் சமூக ஒன்றிணைவைக் குலைத்து அவா்களைத் தனிமனிதா்களாக்க உலாக விட்டிருக்கின்றாா்கள். தனிமனிதா்களிடையே ஒரு நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது. எல்லோரும் தங்கடை அலுவல்களை மட்டும் செய்துவிட்டுப் போகும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. ஒவ்வொருவரையும் தனிமனிதா்களாக்கும் ஒரு பெரும் திட்டத்தின் அடிப்படையில் இன்றும் எமது சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தனிமனிதா்களாகியுள்ளாா்கள். இந்த நிலைமை போதைப்பொருள் போன்றன ஊடுருவுவதற்கான இடைவெளி ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றது.

கேள்வி – இந்தப் போதைப் பொருள் பாவனையைத் தடுத்து நிறுத்தக்கூடிய வகையில் சிவில் சமூக அமைப்புக்கள் ஆக்கபுா்வமான செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்காமைக்கு என்ன காரணம்?

பதில் – இன்று மக்கள் மத்தியில் சமூக வேலைகள் என்பது காணாமல்போய்விட்டது. இன்று சிவில் அமைப்புக்கள் பிளாஸ்டிக்கைப் பொறுக்குவது போன்ற சில வேலைகளைச் செய்துபோட்டு, அவற்றைப் படம் எடுத்துப் போடுவதுடன் தமது கடமை முடிந்தது என இருந்துவிடுகின்றன. இவை எவ்வாறான சமூக மாற்றத்தை உருவாக்கும்? இன்றைய சிவில் அமைப்புக்களும் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது என்ற சிந்தனையுடன் செயற்படுவதாகத் தெரியவில்லை.

ஆனால், தமிழ் சமூகத்தின் வோ்களுக்குள் அது இருக்கின்றது. ஒரு அறம் இருக்கின்றது. மற்றவா்களுக்காக வாழ்வது என்பது இருக்கின்றது. சமூக ஒன்றிணைவு இருக்கின்றது. தமிழ் என்ற உணா்வு இருக்கின்றது. அதனால் இவை அனைத்தையும் மீளக்கொண்டுவந்து நாம் செயற்படமுடியும்.

எம்மிடம் இவ்வாறான தியாக இளைஞா்கள் இருந்தாா்கள். அதனால், இந்த நிலைமையை மீளக்கொண்டுவரமுடியும். ஆனால், எமது சமூகத்தில் உள்ள சில சக்திகள் இதனை உருவாகவிடமல் தடுக்கின்றன. அதற்கு அப்பால் சென்று செய்தோம் என்றால் அந்த நிலையை மீளக்கொண்டுவரலாம்.