மாகாண சபை நிர்வாகத்தை யார் குழப்பினார்கள் -சிறிதரனின் கருத்துக்கு சீ.வீ.கே.சிவஞானம் பதில்

மாகாண சபை நிர்வாகத்தை யார் குழப்பினார்கள்

மாகாண சபை நிர்வாகத்தை யார் குழப்பினார்கள்: “மாகாண சபை நிர்வாகத்தை யார் யார் குழப்பினார்கள். எவற்றை எல்லாம் குழப்பினார்கள். அவற்றின் பின்னணியில் யார் யார் இருந்தார்கள் என்ற நூற்றுக்கணக்கான விடயங்கள் எனக்குத் தெரியும். கட்சி நலன் கருதி நான் அவை பற்றி பொது வெளியில் பேசியதில்லை” என்று வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 05.09.2021 ஆம் திகதி ஒளிபரப்பாகிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபையை குழப்புவதில் நிறைய அனுபவம் வாய்ந்த நானும் பாரிய கவனம் செலுத்தினேன் என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனைச் சில அச்சு ஊடகங்களிலும் செய்தியாக்கப்பட்டதால் உண்மை நிலையைத் தெளிவுபடுத்தல் மிக அவசியம் என்பதால் இந்த ஊடகச் சந் திப்பை கூட்டியிருக்கின்றேன்.

நான் செய்த தவறாக சிறிதரன் குறிப்பிட்டது 17 சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து மாகாண சபையை  கலையுங்கள் என்ற கடிதத்தை ஆளுநரிடம் நான் கையளித்தமை பற்றியது. இந்த விடயம் தொடர்பாக பல தெளிவுபடுத்தல்களை நான் கடந்த 5 வருடங்களாக வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறேன்.

ஆளுநருக்குக் கொடுத்த கடிதம் முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை  என்பது மட் டுமே தவிர. சபையைக் கலையுங்கோ என்றல்ல என்பதை முதலில் குறிப்பிட விரும்புகின்றேன்.

முதலமைச்சர் அமைச்சர்களுக்கு எதிராக விசாரணைக் குழு ஒன்றை சபை நியமிக்க வேண்டும் என்ற முன்மொழிவைச் சமர்பித்தபோது இதன் பொருட்டு சபை உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக் குழுவை நியமிக்க முடியுமே தவிர, முதலமைச்சர் கோரியபடி வெளியாட்கள் கொண்ட குழுவை நியமிப்பதை நிராகரித்ததே நான்தான். முதலமைச்சர் தமக்குரிய சிறப்புரிமைக்கமைய அமைச்சர்களை நீக்கும்படி ஆளுநருக்கு சிபார்சு செய்யலாம் என்பதால் விசாரணைக்குழு தேவையற்றது என்பதே எமது நிலைப்பாடாக இருந்தது.

அதனால் சுமார் ஒன்றரை நாள் விவாதத்தின் பின்பு முதலமைச்சர் தாமே ஒரு குழுவை நியமிக்கலாம் என்று நாம் கூறியதற்கு அமையவே விசாரணைக்குழு அவரால் நியமிக்கப்பபட்டது. அந்த அறிக்கையை சபையில் சமர்ப்பித்த பின் நடைபெற்ற விவாதத்தின் முடிவில் திரு பொ.ஐங்கரநேசன் அவர்கள் தன்னிலை விளக்கம் அளித்த நிலையில் முதலமைச்சர் அதனையும் பரிசீலித்து அவரது முடிவை இரண்டு நாட்களின் பின்பு தெரிவிக்கலாம் என்ற எனது கோரிக்கையை நிராகரித்து தமது தீர்மானத்தை வாசிக்கத் தொடங்கியதும் அநேகமான மாகாண சபை உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறினர். இவ்வாறான நடவடிக்கை பற்றி எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் பிற்பகல் 3 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் ஒரு கூட்டம் இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறு எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைய நான் சபை அமர்வு முடிந்த பின்பு கட்சித் தலைமையத்துக்கு இரண்டு மணித்தியாலயங்களுக்கு பின்பு சென்றபொழுது அநேகமான உறுப்பினர்களும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆளுநருக்குச் சமர்ப்பிதற்கான கடிதம் கணினியில் தட்டச்சிடப்பட்டுக் கொண்டிருந்தது. அது கட்சி உறுப்பினர்களின் முடிவு என எனக்குத் தெரிவிக்கப்பட் டது. அதில் எனது பெயர் முதலில் இருந்தபோது அப்படிப் போட வேண்டாம். அது தவறு என பலமுறை வற்புறுத்தியும் அதனை நிராகரித்து எனது பெயரை முதலில் தட்டச்சாக்கிவிட்டார்கள். வேறு வழியின்றி கையொப்பமிட நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன்.

இந்தக் கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவதற்கு என்னையும் அழைத்தார்கள். அப்படி நானும் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனும் எனது வாகனத்தில் புறப்படும்போது திரு.கமலேஸ்வவரன் அந்தக் கடிதக் கோவையை கொண்டு வந்து என்னிடம் தந்தார். அதை நான் ஏற்காமல் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தவர்களே கொடுக்க வேண்டும் எனக் கூறியதும் அவர் அதை எடுத்துச் சென்றார்.

பின்பு ஆளுநரைச் சந்திக்க மேல்மாடியில் உறுப்பினர்களும் ஊடகவியலாளர்களும் உட்சென்றபோது ஏற்பட்ட நெருக்கடிக்குள் அந்தக் கோவை எனது கையில் திணிக்கப்பட்டது. இதனால் நான் அதிர்ச்சியடைந்த போதும் அந்த இடத்தில் நின்று பிரச்சினைப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு கடிதம் என்னால் ஆளுநரிடம் சகல உறுப்பினர்கள் முன்னிலையில் கையளிக்க வேண்டியதாயிற்று.

எனவே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முன்னெடுப்பிலோ வேறு விதத்திலோ எனக்கு எதுவித சம்பந்தமும் இல்லை என்பதை காணலாம். சகல உறுப்பினர்களும் சேர்ந்து கட்சி சார்ந்து கட்சித் தலைமையகத்தில் எடுத்த முடிவுக்கு எப்படி என்னைப் பொறுப்பாளி ஆக்கலாம்.

தாம் இது பற்றி “கட்சித் தலைவர் மாவை அண்ணையைக் கேட்டபோது இதைப் பற்றி தன்னுடன் கதைக்கவில்லை” என தம்மிடம் கூறியதாக  சிறிதரன் கூறுகின்றார். இந்த சம்பவம் நடைபெற்றபோது திரு.மாவை சேனாதிராசா தலைமையகத்திலே இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்தக் கைங்கரியத்தை முன்னெடுத்தவர்கள் வேறு எங்கேயோ கூடித் தயாரித்த வரைபை அவரிடம் காட்டிய பின் மாற்றியமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மேலும் ஆளுநர் அலுவலகத்தில் என்னைக் கடிதத்தைக் கொடுக்க வைத்த திட்டமிட்ட சதி பற்றியும் இதில் நான் பலிகடாவாக்கப்பட்டமை பற்றியும் உடனடியாகவே கட்சித் தலைவரான மாவை சேனாதிராசா அவர்களுக்கு நேரடியாக எனது கவலையைத் தெரிவித்த பின்பே நான் எனது இல்லம் திரும்பினேன். இதனை அவரிடமே ஊடகவியலாளர்கள் கேட்கலாம். அவரிடம் பேசிய பின்பே இந்த ஊடகவியலாளர் சந்திப்பை அழைத்தேன் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

ஆகவே, ஏதோ கட்சித் தலைவருக்குத் தெரியாமல் இந்தச் செயற்பாட்டை நான் முன்னெடுத்த மாதிரியான தொனிப்பட சிறிதரன் கூறிய கருத்து தவறானதும் கவலையளிப்பதாகும். இது ஒரு தனிமனிதன் கையாண்ட விடயமல்ல. 17 சபை உறுப்பினர்கள் சேர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட விடயமாகும். உண்மையை மறைக்கமுடியாது. திரு.மாவை சேனாதிராசா அப்படி உண்மையை மறைக்கக்கூடியவர் அல்ல.

நான் அவைத் தலைவர் மட்டும்தான் என்பதையும் நிர்வாக விடயத்தில்  நேரடிப் பொறுப்பு எதுவும் கொண்டிருக்கவில்லை என்பது சாதாரண அறிவுக்கெட்டிய விடயம். மாகாண சபை நிர்வாகத்தை யார் யார் குழப்பினார்கள். எவற்றை எல்லாம் குழப்பினார்கள். அவற்றின் பின்னணியில் யார் யார் இருந்தார்கள் என்ற நூற்றுக்கணக்கான விடயங்கள் எனக்குத் தெரியும். கட்சி நலன் கருதி நான் அவை பற்றி பொது வெளியில் பேசியதில்லை. அதனால் நான் பலவீனமானவன் என்று யாரும் கருதக் கூடாது. இப்பொழுது நடப்பது போல தமிழரசுக் கட்சிக்குள் (same side goal) தன்பக்க கோல் அடிக்கும் செயல்பாடு இல்லாத வரலாற்றினூடாக வந்தவன் நான். “ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர்தாக்கற்கு பேருந்தகைத்து”  என்றார் வள்ளுவர்.

தேவைப்படும் போது அவை பற்றி பேசுவேன். 50 வருடத்திற்கு மேலான அரசியல் மற்றும் மக்கள் சேவை அனுபவமும் 20 வருடத்துக்கு மேலான தேர்தல்களைச் சந் தித்த அனுபவமும் எனக்குண்டு என்பதை நான் கூறியாக வேண்டும்” என்றார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021