Home செய்திகள் நாட்டை காக்க அதிகாரத்தை கோரியவர்கள், நாட்டை வெளிநாடுகளிடம் அடகு வைத்துள்ளனர்-இம்ரான் எம்.பி

நாட்டை காக்க அதிகாரத்தை கோரியவர்கள், நாட்டை வெளிநாடுகளிடம் அடகு வைத்துள்ளனர்-இம்ரான் எம்.பி

நாட்டை காக்க அதிகாரத்தை கோரி

‘நாட்டை காக்க அதிகாரத்தை கோரியவர்கள் நாட்டை வெளிநாடுகளிடம் அடகு வைத்துள்ளனர்‘ என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்  மஹ்ரூப்  குற்றம் சுமத்தியுள்ளார்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு விற்பனை  செய்வது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், “1924 ஆம் ஆண்டு எண்ணெய் தாங்கிகளின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1930 அளவில் 101 எண்ணெய் தாங்கிகளும் பூரணமாக நிர்மாணிக்கப்பட்டன. சிட்னியை அடுத்து இரண்டாவது ஆழமான  இயற்கை துறைமுகமாக திருகோணமலை துறைமுகம் காணப்படுவதால் இவை  துறைமுகத்தை அண்டிய பகுதியில்  நிர்மாணிக்கப்பட்டன.

இதில் ஒரு தாங்கியில் 12000 டொன் எண்ணெய் சேமிக்க முடியும் மொத்தமாக 1.2 மில்லியன் டொன் எண்ணெய் இதில் சேமிக்க முடியும். இதில் 15 தாங்கிகள் ஏற்கனவே 2004 இல் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு விட்டன. தற்போது 24 தாங்கிகள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கும் 61 தாங்கிகளை இந்தியா -இலங்கை ஒன்றிணைந்து அபிவிருத்தி செய்யும் முயற்சி எனும் பெயரில் இந்தியாவுக்கு விற்கும் ஒப்பந்தத்தை அரசு மேற்கொள்ளவுள்ளது.

இந்த மொத்த தாங்கிகளிலும் 1.2 மில்லியன் எண்ணெய் சேமித்தால் நாளாந்தம் மில்லியன் டொலருக்கு அதிகமான வியாபாரம் எம்மால் செய்ய முடியும். எம்மால் தங்கத்தை விட பெரிய வியாபாரம் ஒன்றை செய்ய முடியும்.

ஆனால் இதை இலங்கை அரசு வெறும் 500 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்கிறது.1994  முதல் சுதந்திர கட்சி அல்லது பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஜனாதிபதிகளே இந்த நாட்டை ஆட்சி செய்கின்றனர். அவர்களால் எமது வளங்களை நிர்வகிக்க முடியவில்லை. இந்த விலை மதிப்பில்லா வளங்களுக்கு அவர்கள் பெற்றுக்கொண்ட தொகை வெறும் 500 மில்லியன் மட்டுமே.

நாட்டை வங்குரோந்து நிலைக்கு கொண்டு வந்து டொலர் தட்டுபாட்டை ஏற்படுத்தி நாட்டின் பெறுமதிமிக்க சொத்துக்களை அடிமட்ட விலைக்கு விற்கின்றனர்.

சென்ற வருடம் அமைச்சர் கம்பன்பில இந்த எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் இருந்து திரும்ப பெற இந்தியா ஒப்புக் கொண்டதாக கூறினார். இன்று அந்த தாங்கிகளோடு சேர்த்து எஞ்சிய அனைத்து தாங்கிகளையும் இந்தியாவுக்கு வழங்க ஒப்பந்தம் செய்கின்றனர்.

அமைச்சர் கம்பன்பிலவின் கட்சி யாப்பில் எமது சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பதில்லை என உள்ளது. ஆனால் அவர்தான் இன்று இந்தியாவுக்கு விற்கும் ஒப்பந்தத்தை கைச்சாத்திடவுள்ளார்.

இவ்வாறான ஒப்பந்தங்களை திருட்டு தனமாக நிறைவேற்றி கொள்ளவே ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்தி வைத்துள்ளார். இன்று அமெரிக்க பிரஜைகள் சுகபோகம் அனுபவிக்க நாட்டு மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.ஏழு மூளை உள்ளவரின் செயலால் நாட்டுக்கு ஏழரை பிடித்துள்ளது. நாட்டை காக்க அதிகாரத்தை கோரியவர்கள் நாட்டை வெளிநாடுகளிடம் அடகு வைத்துள்ளனர்” என்றார்.

Exit mobile version