Home நிகழ்வுகள் உலக வெண்பிரம்புப் பாதுகாப்பு நாளும், கட்டிடடத் திறப்புவிழாவும்

உலக வெண்பிரம்புப் பாதுகாப்பு நாளும், கட்டிடடத் திறப்புவிழாவும்

உலக வெண்பிரம்புப் பாதுகாப்பு நாளும், கட்டிடடத் திறப்புவிழாவும்: 15.10.2021 ஆம் நாள் பன்னாட்டு வெள்ளைப் பிரம்புப் பாதுகாப்பு நாளினை வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினர் கிளிநொச்சி, விவேகானந்தநகர் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய செயலகத்தில் கடைப்பிடித்தார்கள். இப் புதிய செயலகத் திறப்பு விழாவும், அன்றையநாள் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பார்வையற்ற குடும்பங்களின் நலன்களைப் பேணும் நோக்கோடு உருவாக்கப்பட்ட இச்செயலக நிர்மாணப் பணிக்கான செயற்திட்டத்தினை லண்டன் தாயகமேம்பாட்டு அணியினர் பொறுப்பேற்று, இதற்கான நிதித்திரட்டலை புலம்பெயர் உறவுகளிடமிருந்து மேற்கொண்டிருந்தார்கள்.

இவர்களின் நிதிப் பங்களிப்பில் உயிரூட்டம் பெற்ற இச் செயலகத்தின் பெயர்ப் பலகையினை நிகழ்வில் கலந்து சிறப்பித்த கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேசசபை தலைவர் திரைநீக்கம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் அவர்களும் கொடையாளிகள் சார்பில் ஆசிரியர் சஜிகரன் அவர்களும் இணைந்து நாடாவினை வெட்டிக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்கள். மங்கள விளக்கேற்றியதையடுத்து, தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக உயிர்க் கொடை செய்த அனைவருக்கும் அகவணக்கம் செய்யப்பட்டது.

திறப்புவிழா1 உலக வெண்பிரம்புப் பாதுகாப்பு நாளும், கட்டிடடத் திறப்புவிழாவும்இதனைத் தொடர்ந்து இரு கைகளையும் ஒருகண்ணையும் இழந்த பயனாளியின் மகளாகிய கேதீஸ்வரன் பூவிழி அவர்களால் வரவேற்பு நடனம் நிகழ்த்தப்பட்டது. வரவேற்புரை, தலைமை உரையினைத் தொடந்து கொடையாளிகளுக்கான சிறப்பு நன்றிகள் தெரிவிக்கப்பட்டன. அதன் பின்னர், முற்றாக பார்வையற்றவர்களுக்கான ஐந்து லட்ச ரூபாய் நிரந்தர வைப்பிலிட்ட சான்றிதழ்கள் பதினைந்து பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஐந்து மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கண்டாவளை உதவிப் பிரதேச செயலர் கலந்து சிறப்பித்திருந்தார். அவருடன் கண்டாவளை சமூகசேவைகள் உத்தியோகத்தர், பரந்தன் கிராமசேவகர், கண்டாவளை கமக்கார அமைப்பினர், கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்க தலைவர், கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள், கிராமிய வங்கி நடத்துனர்  என பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

நிகழ்வினைக் கிளிநொச்சி மாவட்ட அரிமா கழகத்தினர் பொறுப்பேற்று நடத்தியிருந்தார்கள். நிகழ்ச்சித் தொகுப்பினை வடக்கு, கிழக்கு வன்னி விழிப்புலனற்றோர் சங்க தலைவர் நிகழ்த்தியிருந்தார். நன்றியுரையுடன் நிகழ்வு சிறப்பாக நிறைவுற்றது.

Exit mobile version