Home ஆய்வுகள் கிழக்கில் மீண்டும் ஒரு இன முறுகலுக்கு வித்திடப்படுகின்றதா? – கே.மேனன்

கிழக்கில் மீண்டும் ஒரு இன முறுகலுக்கு வித்திடப்படுகின்றதா? – கே.மேனன்

இன முறுகலுக்கு வித்திடப்படுகின்றதா

கே.மேனன்

இன முறுகலுக்கு வித்திடப்படுகின்றதா: கிழக்கு மாகாணத்தில் யுத்த காலத்தில் தமிழ்-முஸ்லிம் இனங்களிடையே ஏற்படுத்திய பிரிவினையையும், கலவரத்தினையும் ஏற்படுத்துவதற்கான அடித்தளங்கள் அண்மைக்கால நிகழ்வுகள் மூலமாக இடப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

வடகிழக்கு என்பது தமிழ் பேசும் மக்களின் தாயகம். இணைந்த வடகிழக்கில் தான் தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாகவும் தம்மைத்தாமே ஆளும் நிலைமையினை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதற்காகவுமே தமிழர்கள் கடந்த 60வருடத்திற்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.

பெரும்பான்மை இனத்தவரால் சிறுபான்மையின மக்களுக்கு இந்த நாட்டில் முன்னெடுக்கப்பட்ட அடக்குமுறைகளே, இந்த நாட்டில் தமிழர்களை தனித் தமிழீழம் கேட்டுப் போராடும் நிலைமைக்கு தள்ளியது. அகிம்சைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அவை வெற்றியளிக்காத நிலையிலேயே இந்த நாட்டில் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்ட அகிம்சைப் போராட்டமும் சரி ஆயுதப் போராட்டமும் சரி தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியிலேயே முன்னெடுக்கப்பட்டது. தமிழர்களின் போராட்டங்கள் எவையும் தனியே தமிழர்களுக்கு என்று இல்லாமல், சகோதர முஸ்லிம் மக்களையும் இணைத்து தமிழ் பேசும் மக்களுக்குரிய போராட்டமாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தது.

ஒன்றுபட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமானால், அது சிங்கள தேசத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகவும், தமிழ் பேசும் மக்களுக்கு அது பாரிய வெற்றியாகவும் அமையும் என்பதை உணர்ந்துகொண்ட சிங்களத் தலைவர்கள், தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அவற்றில் வெற்றியும் அடைந்தனர்.

தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செயற்பாட்டால் தமிழீழத்திற்கான அங்கீகாரத்தினை நாட்டுக்கு வெளியில் பிரகடனப்படுத்துவதற்கான ஏதுவான நிலையேற்படும் என்பதன் காரணமாகவே இரு இனங்களையும் மோதவிட்டு குளிர் காயும் நிலையினை சிங்கள தேசம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

ஆயுதப்போராட்ட காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் உட்பட பல்வேறு இயக்கங்களில் முஸ்லிம் இளைஞர்கள் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தனர். பல இளைஞர்கள் மாவீரர்களாகவும் ஆகியுள்ளனர். தமது போராட்ட இயக்கங்களுக்குள் பிரிவினைகள் இருக்கக்கூடாது என்பதற்காக தமிழ் இளைஞர்களுக்கு முஸ்லிம் இளைஞர்களின் பெயர்களும் அன்றைய இயக்கங்களில் சூட்டும் நிலையிருந்தது.

அதேபோன்று அரசியல் ரீதியான அன்றைய காலத்தில் தமது உரிமைகளை வலியுறுத்தி தமிழ் கட்சிகளில் இணைந்து முஸ்லிம் தலைவர்கள் போராடி வந்தார்கள். இதனை கண்ணுற்ற பேரினவாதம் முஸ்லிம் தலைவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், அவர்களின் தனிப்பட்ட தேவைகளையும் பூர்த்தி செய்ததுடன், அதன் மூலம் தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரிவினைகளை தோற்றுவிக்கும் செயற்பாடுகளுக்கு வித்திடப்பட்டது. இந்தச் செயற்பாடு இன்று நேற்று தொட்டது அல்ல இந்த நாடு அந்நியர் ஆட்சி முடிந்து இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் தொடக்கம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த செயற்பாடுகளை காலத்திற்குக் காலம் தமிழர்கள் ஒன்றுபடும்போது எல்லாம் பெரும்பான்மைவாத அரசுகள் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு தமிழ்-முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பயன்படுத்தியே வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகளை உணர்வுரீதியான செயற்பாடுகள் காரணமாக சாதாரண முஸ்லிம் மக்களும் புரிந்து கொள்ளாத நிலையினாலே இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் இனம் பாரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான காரணமாகவும் அமைந்தன.

அண்மையில் இலங்கை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான தினேஸ் குணவர்த்த என்னும் அமைச்சர் வடகிழக்கு இணைப்பினை இந்தியா கோரினால் அதனை கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர்கள் விரும்பாது விட்டால் வடகிழக்கு இணைப்பு என்பது சாத்தியமற்றது என்பதுடன் அதனை இந்தியா நினைத்தால்கூட செய்ய முடியாது என தெரிவித்திருந்தார்.

இதே அமைச்சர்தான் கடந்த காலத்தில் முஸ்லிம்கள் தொடர்பான கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வந்ததுடன் முஸ்லிம்களினால் இந்த நாடு அழியும் நிலைக்கு செல்வதாக பல்வேறு விமர்சனங்களை தெரிவித்துவந்த நிலையில் இன்று முஸ்லிம்கள் தொடர்பில் கவலைப்படுகின்றார் என்றால் இவரது கபட நாடகத்தினை முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்.

குறிப்பாக தமிழ்-முஸ்லிம் மக்களிடையே கிழக்கு மாகாணத்தில் மோதல்களை ஏற்படுத்தி அதன் மூலம் இரு இனங்களையும் பகையாளர்களாகவும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலையினை ஏற்படுத்திவரும் செயற்பாடுகளை காலத்திற்கு காலம் வரும் அரசாங்கங்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. இதற்கான தனியான புலனாய்வினை கட்டமைத்து செயற்பட்டு வருகின்றதா என்ற சந்தேகங்கள் தமிழ் பேசும் இனத்திற்கு மத்தியிலிருக்கின்றது.

யுத்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு மிகவும் கடுமையான காலமாகயிருந்தது. புட்டும் தேங்காய்ப் பூவுமாகயிருந்த சமூகத்தின் மத்தியில் அரசியல் தலைவர்கள் மூலம் ஏற்படுத்தப்பட்ட அரசியல் ரீதியான பிளவுகள் மற்றும் இனரீதியான செயற்பாடுகள் இந்த தாக்கத்திற்கு காரணமாயின.

குறிப்பாக விடுதலைப்புலிகளினால் முஸ்லிம் மக்கள் கொல்லப்படுகின்றார்கள் என்பதை காட்டுவதற்காக அரசாங்கத்தின் கைக்கூலிகளாகயிருந்த தமிழ் இயக்க உறுப்பினர்களையும் முஸ்லிம் ஊர்காவல் படையினரையும் பயன்படுத்தி முஸ்லிம் கிராமங்கள் மீதும் முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் மீதும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு அவற்றினை விடுதலைப்புலிகளின் தலையிலும் தமிழ் மக்களின் தலையிலும் போட்டுவிட்டு அவர்கள் மூலமாக தமிழ் மக்களை படுகொலை செய்யும் செயற்பாடுகள் 1990காலப் பகுதியில் கிழக்கில் பரவலாக முன்னெடுக்கப்பட்டது.

அன்றைய அமைச்சர் அஸ்ரப் அவர்களின் துணையுடன் முஸ்லிம் ஊர்காவல் படை உருவாக்கப்பட்டு அவை தமிழர்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்கு பயன்படுத்தப் பட்டது. அன்றைய காலத்தில் இராணுவம், விசேட அதிரடிப்படை என பல படைப் பிரிவுகள் இருக்கும் போது முஸ்லிம் பிரதேசங்களை பாதுகாக்கவென இந்த ஊர்காவல் படை அமைக்கப்பட்டு தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டதுடன் அதன் மூலம் கிழக்கில் தமிழர் களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பாரிய இடை வெளியை அரசாங்கம் ஏற்படுத்தியிருந்தது.

இக்காலப்பகுதியில் வடக்கிலும் இவ்வாறான நிலையேற்படும் என்பதை கருத்தில் கொண்டு வடக்கில் உள்ள முஸ்லிம் மக்களை பாதுகாப்பாக விடுதலைப்புலிகள் வெளியேற்றியபோது அவற்றினை இனச்சுத்திகரிப்பாக அரசாங்கத்தின் கைக் கூலிகளாக செயற்பட்ட அரசியல்வாதிகள் கருத்துகளை தெரிவித்துவந்தனர்.

எனினும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் வடகிழக்கின் தமிழ்பேசும் இனம். இரண்டு இனங்களும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே வடகிழக்கில் தமிழ் பேசும் தாயகத்தினை பாதுகாக்கமுடியும் என தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் முஸ்லிம் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது எல்லாம் வலியுறுத்தி வந்துள்ளார். இவற்றையெல்லாம் புறந்தள்ளிவந்த காரணத்தினால்தான் இந்த நாட்டில் கடந்த காலத்தில் முஸ்லிம்கள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டனர்.

இவ்வாறான நிலையிலேயே அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் இனங்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் அதற்கு எதிராக தமிழ் அரசியல் தலைமைகளும் தெரிவித்துவரும் நிலையினை காணமுடிகின்றது.

சீனா இலங்கையில் காலூன்ற முனையும் இக்காலப்பகுதியில் இந்தியா தமிழர்கள் தொடர்பில் கரிசனை காட்ட ஆரம்பித்துள்ள நிலையில் வடகிழக்கு இணைப்பு, மாகாணசபை முறையினை பலப்படுத்தல்கள் குறித்து தமிழ் தலைவர்களும் இந்திய அரசும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இந்திய அரசாங்கம் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் நிலைமைகள் உருவாகலாம் என்பதை உணர்ந்துள்ள இலங்கை அரசாங்கம் கிழக்கில் இரு இனங்களிடையே மோதல்களை ஏற்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை முன்னெடுத்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அதன் கீழ் பல்வேறு செயற்றிட்டங்களை வெற்றிகரமான அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அண்மையில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காராமுனை பகுதியில் சிங்கள மக்களை குடியேற்ற முற்பட்டமை, அண்மைக் காலமாக முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அகமட் தெரிவித்துவரும் இனவாத கருத்துகள், அதற்கு எதிராக தமிழ் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துகள் என அனைத்து விடயங்களையும் பார்க்கும்போது இது புலனாகின்றது. குறிப்பாக இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களே களத்தில் நின்று இரு இனங்களிடையே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதை அவதானிக்கமுடிகின்றது.

இவ்வாறான நிலையில் கிழக்கில் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு இடையில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகள் வெற்றியளிக்குமானால் எதிர்காலத்தில் தமிழர்களின் தீர்வினை நோக்கியதான செயற்பாடுகளுக்கு பாரிய பின்னடைவினை ஏற்படுத்தக்கூடிய நிலைமைகள் ஏற்படும்.

எனவே இவ்வாறான செயற்பாடுகள் குறித்து முறையான பிரசாரங்களை தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உள்ள அரசியல்வாதிகள் முன்னெடுக்கவேண்டும்.

Exit mobile version