Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் ஈழத்தமிழர்கள் இன்றென்ன செய்ய வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 197

ஈழத்தமிழர்கள் இன்றென்ன செய்ய வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 197

ஈழத்தமிழர்கள் இன்றென்ன செய்ய வேண்டும்

இந்திய அமெரிக்க எதிர்ப்புக்களுக்கும் மேலாக தனது ஆதிபத்திய இறைமையை செயற்படுத்தி சிறிலங்கா சீனாவின் புலனாய்வுக் கப்பலான யுவான் வாங் 5 ஐ அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்பதற்பு அனுமதித்து சீனாவை முன்னிறுத்தும் சிறிலங்கா தான் என்பதைச் சிறிலங்கா உலகுக்கு மீளவும் உறுதி செய்துள்ளது.
இதற்கு பதில் உதவியாகச்
1. சிறிலங்காவின் சீனாவிடமிருந்து பெற்ற கடனை மீளக்கட்டும் காலத்தை நீடிப்புச் செய்யுமாறு கோருவது,
2. மீளவும் 4.5 பில்லியன் டொலர்களைச் சீனாவிடமிருந்து புதிய கடனாகப் பெற முயற்சிப்பது,
3. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது கூட்டத்தொடர் 12.09. 2022 இல் ஆரம்பமாகும் பொழுது அன்றையத் தினமே சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்த அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரால் சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பாக நாடுகளின் விவாதமும் தொடங்க இருக்கின்ற சூழலில் சிறிலங்காவின் இறைமைக்குள்ளும் ஆள்புலஒருமைப்பாட்டுக்குள்ளும் தலையிடும் செயலாகச் சீனாவைக் கொண்டு எச்சரிக்கை செய்வித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் சிறிலங்கா குறித்த அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையிலான கடமைகளைச் செய்யவிடாது தடுப்பது
என்பன அமைந்துள்ளன.
சீனாவைச் சிறிலங்கா முன்னிறுத்தும் நிலையிலும் இந்தியாவோ சிறிலங்காவை முன்னிறுத்தி அயல் நாடுகளுக்கு முதலில் உதவுவது என்ற தனது வெளிவிவகாரக் கொள்கையின் நடைமுறைப்படுத்தலாக 06 பில்லியன் டொலர் கடன்களை வழங்கியும், தொடர்ந்தும் நிதி உதவிகளை வழங்க இயலாத நிலையில் நேரடியாகவே அனைத்துலக நாணயநிதியத்தின் கடனைச் சிறிலங்காவுக்கு வழங்குமாறு விதந்துரைத்தும் சிறிலங்காவின் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து பிணையெடுக்கப் பார்க்கிறது. இந்த முயற்சிகள் வழி சிறிலங்காவில் தனது சந்தை மற்றும் இராணுவப் போட்டியார்களான சீனாவையும் பாக்கிஸ்தானையும் முழுஅளவில் தங்கள் மேலாண்மையை நிறுவ அனுமதியாது தடுத்தல் என்பது அமைகிறது.
சீனாவுக்கு சிறிலங்காவில் உள்ள மேலாண்மையை மட்டுப்படுத்தும் நோக்கிலேயே அமெரிக்காவும் தனது சிறிலங்காவுக்கான தூதுவர் மூலம் மனித உரிமைகள், பேணப்பட வேண்டும் என்னும் நேரடி அறிவுறுத்தல்களை வழங்கியும், மறைமுகமாக அனைத்துலக நாணய நிதியத்தின் வழி தாரண்மைவாத முதலளித்துவ நாடாக இலங்கையை மாற்றக் கூடிய முறையில் நாட்டின் உயர் கல்வி உட்பட பல இலாபம் தரக்கூடிய தேசிய சேவைகளைத் தனியார்க்கு விற்று அதன் வழி வரக்கூடிய வருமானத்தைக் கொண்டு பொருளாதார நெருக்கடியில் நின்று சிறிலங்காவை விடுபடும்படி நெறிப்படுத்தியும் வருகிறது.
கூடவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவோம் என ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து வரிச்சலுகைளைப் பெற்ற சிறிலங்காவின் இன்றைய ஜனாதிபதி ரணில் (ராசபக்சா) தான் அதே பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கொண்டு அரகலியப் போராட்டத்தில் பங்கேற்ற சிங்களவர்கள் உட்பட்ட போராட்டக்காரர்களைக் கைது செய்து விளக்கமறியலில் மூன்று மாதங்கள் தடுத்து வைக்கும் அரசபயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றார் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குத் தேசியத் தகுதி வழங்கி தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்னும் பெயரில் அதனை மீள்கட்டமைப்புச் செய்யவுமுள்ளார்.
இவ்வாறு சிறிலங்காவின் இன்றைய அரசியல் அனைத்துலக நாடுகளின் தலையீடுகளை
இயல்பாகப் பெறும் நிலையிலும், அவை மனித உரிமைகள் பேணலை உதவிகளுக்கான முன் நிபந்தனையாக வைக்கின்ற நிலையிலும், சிறிலங்கா தனது சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் சிந்தனைகளிலும் ஈழத்தமிழரின் மேலான பண்பாட்டு இனஅழிப்பு, இனச்சுத்திகரிப்பு, இனஅழிப்பு என்னும் மூவகை இனஅழிப்பு அரச செயற்பாட்டு திட்டங்களிலும் எவ்வித மாறுபாடுமில்லாது ரணிலின் ஆட்சியிலும் இவை அவையாகவே தொடர்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் நல்லாட்சிக்கானதும் பொருளாதார வளர்ச்சிக்கானதுமான வழிகாட்டலாக அமைந்த பொறுப்புக் கூறல், வெளிப்படையான முறையில் எதனையும் செய்தல், மனித உரிமைகளைப் பேணல், சுதந்திரமாகத் தேர்தல் நடாத்துதல் என்பவற்றை நடைமுறைப்படுத்தாது விடுவதற்கு பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுதல் தான் முதன்மை நோக்கு என்ற பின்னணி யில் தான் தனது ஆட்சியை ரணில் முன்னெடுக்கிறார்.
இலங்கைத் தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கான எந்தத் தீர்வையும் கவனத்தில் கொள்ளாது, புலம்பெயர் தமிழர்களின் நிதி முதலீட்டைக் கவர்வதில் ரணில் கவனம் செலுத்தும் இந்தப் புதிய சூழலில் ஈழத்தமிழர் என்ன செய்து தமது தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளைப் பேணுவது என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.
இதற்கு விடை இலங்கைத்தமிழர் தேசியப் பிரச்சினை என்பது அவர்களின் வரலாற்றுத் தாயகமான இலங்கைத் தீவில் அவர்களுக்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொடர்ந்து வரும் இறைமையின் அடிபப்டையில் அவர்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளைச் செயற்படுத்தி அவர்கள் இலங்கையின் மற்றைய தேச இனமான சிங்களவர்களுடன் சமத்துவம் சகோதரத்தவம் சுதந்திரம் பேணப்பட்ட நிலையில் இணைந்து முஸ்லீம் மலையக மக்களின் குடியுரிமைகளை வழங்கி வாழ வழி செய்வதே என்ற உண்மையை ஒவ்வொரு இலங்கைத் தமிழரும் உரக்கப்பேசி உலகிற்குத் தெளிவுபடுத்த வேண்டும். அப்பொழுதுதான் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் உறுதி பெறும். இந்த உண்மையின் அடிப்படையிலேயே தாயகத் தமிழர்களும் புலம்பதிந்து வாழும் தமிழர்களும் ரணிலுடனான அனைத்துத் தொடர்புகளையும் முன்னெடுப்பது மட்டுமல்ல இந்தியா, சீனா, யப்பான், இரஸ்யா அமெரிக்கா, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட்ட உலகநாடுகள் அனைத்திற்கும் இலங்கையில் மனித உரிமைகள் பேணப்பட வேண்டுமானால் ஈழத்தமிழர்களின் இறைமை பேணப்பட வேண்டும் என்பதை உறுதியுடன் எடுத்துக் கூறவேண்டுமென்பதே இலக்கின் எண்ணம்.

ஆசிரியர்

Exit mobile version