பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு என்ன? பெப்ரவரிக்கு முன் தெரியப்படுத்துங்கள்; அரசிடம் கோருகிறார் ரணில்

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுநாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதா, அல்லது வேறு ஏதுவும் முறையான தீர்வு உள்ளதா என்பதனை பெப்ரவரி மாதத்துக்குள் அரசு பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற, ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்புவேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

நாங்கள் முன்னர் ஜீ.எஸ்.ரி. மற்றும் வற் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் ஒரே பொருட்கள் சேவைகள் மீது அறவிடுகின்றனர். ஏதாவது ஒன்றையே அறவிட வேண்டும். அதேவேளை அனைத்து வரிகளையும் அரச வருமான வரி திணைக்களமே அறவிடவேண்டும். ஆனால் இப்போது நிதி அமைச்சு அதனை அறவிடுவது ஏன்?

இன்று பொருளாதாரத்தை பார்த்தால் பாரிய நெருக்கடிகள் உள்ளன. சிறிய வர்த்தகர்கள், குறைந்த வருமானம் உடையவர்களே இதனால் அதிகளவில் பாதிக்கப் படுகின்றனர். இந்நிலையில் அரச கடனை பார்த்தால் 2019 ஆம் ஆண்டில் 13,000 பில்லியன் ரூபாவாக இருந்தது. ஆனால் 2021 ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் அது 17,000 பில்லியனாக அதிகரித்துள்ளது. இரண்டு வருடங்களில் எவ்வாறு 4 ரில்லியனால் அதிகரித்தது என்று கேட்கின்றோம். இந்த இடத்தில் பிரச்சனைகளை பார்க்க முடிகின்றது. அதேபோன்று மொத்த தேசிய உற்பத்தியில் 10 வீதம் கடனாக இருக்கின்றது.

இதேவேளை, அந்நிய செலாவணி மூலம் கடனுக்காக எதிர்வரும் 6 வருடங்களுக்கு ஒவ்வொரு வருடத்திற்கும் 6 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது. பெப்ரவரி மாதத்துக்கு முன்னர் இது தொடர்பில் நிதி அமைச்சர் அறிவிக்கவேண்டும். நாங்கள் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா? அல்லது ஏற்றுக்கொள்ளக் கூடிய மாற்று வழிகளுக்கு செல்வதா? என்று கேட்கின்றேன். இந்தப் பிரச்சனையை தொடர விட முடியாது. இது தொடர்பாக அமைச்சரவையும் தீர்மானத்தை எடுத்து இந்த பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவேண்டும்.

பல வருடங்களாக இருந்த முறைமைகளை நீக்கியமையால் டொலர் நெருக்கடிகள் ஏற்பட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கை மீதான நம்பிக்கை இல்லாது போயுள்ளது. இதற்கு குறுகியகால, மத்திய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் வேண்டும்” என்றார்.