Home அறிவாயுதம் அதி மிகையொலி (Hypersonic) ஏவுகணைகளின் முக்கியத்துவம் என்ன? | ஆர்திகன்

அதி மிகையொலி (Hypersonic) ஏவுகணைகளின் முக்கியத்துவம் என்ன? | ஆர்திகன்

மிகையொலி ஏவுகணை

ஆர்திகன்

அதி மிகையொலி ஏவுகணை: முக்கியத்துவம் என்ன?

ஓலியைவிட பல மடங்கு வேகமாகச் செல்வதுடன், எதிரிகளின் ரடார்களின் திரையில் புலப்படாது, தனது இலக்குகளைத் தாக்கும் நவீன ஏவுகணைகளின் (Hypersonic) தயாரிப்பு மற்றும் மேம்பாடுகள் உக்ரைன் போரின் பின்னர் அதிகரித்துள்ளன.

மிக்-31 விமானத்தில் இருந்து ரஸ்யாவினால் ஏவப்பட்ட இந்த ஏவுகணை, உக்ரைன் படையினருக்கு ஏற்படுத்திய அழிவைவிட மேற்குலகத்திற்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்திருந்தது. சீனாவும், ரஸ்யாவும் தான் அந்த தொழில்நுட்பத்தில் தற்போது முன்னணியில் திகழ்கின்றன. எனினும் சீனா அதனை இன்றுவரை போரில் பயன்படுத்தவில்லை. ஆனால் ரஸ்யா அதனை களமுனையிலும் பரீட்சித்துப் பார்த்துவிட்டது.

இதனிடையே அமெரிக்கா கடந்த மாதம் அதிபர் ஜோ பைடனின் ஐரோப்பிய பயணத்துக்கு முன்னர் அதனைப் பரீட்சித்ததாக இந்த வாரம் அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகம் அறிவித்துள்ளது.

எனினும் ரஸ்யாவுடனான மோதல்களைத் தவிர்க்கும் முகமாக அதனை தாம் வெளியில் தெரிவிக்கவில்லை என அது மேலும் தெரிவித்துள்ளது. பி-52 குண்டுவீச்சு விமானத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணையானது, ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் 300 கி.மீ தூரம் சென்று தாக்கக்கூடியது.

அதேசமயம், அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளைக் கொண்ட அகுஸ் (AUKUS) எனப்படும் புதிய கூட்டணி அமைப்பு, கைப்பசொனிக் ஏவுகணைகளைத் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அணுசக்தியில் இயங்கும் நீர் மூழ்கிகளைத் தயாரிக்கும் இந்த அமைப்பு, தற்போது கைப்பசொனிக் ஏவுகணை நோக்கித் தனது பார்வையைத் திருப்பியுள்ளது.

கைப்பசொனிக் ஏவுகணை என்றால் என்ன?

எதிர்கால களமுனையின் போக்கை மாற்றும் சக்தி கொண்டது கைப்பசொனிக் ஏவுகணையாகும். ஒலியைவிட 5 மடங்கு வேகத்துடன் செல்லும் இந்த ஏவுகணையை சாதாரண ஏவுகணைத் தடுப்பு ஏவுகணைகளால் தடுத்து நிறுத்த முடியாது. கடல், தரை மற்றும் வானில் இருந்து ஏவப்படும் இந்த ஏவுகணையானது, சாதாரண வெடிமருந்துகள் கொண்ட குண்டுகளை அல்லது ஆணுவாயுதங் களைச் சுமந்து செல்லக்கூடியது.

இதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று  விண்வெளிக்கு ஏவப்படும் ஏவுகணையானது, பின்னர் அங்கிருந்து வழிநடத்தப்படும். இரண்டாவது ஏவுகணையின் இயந்திரம் வளியில் உள்ள ஒக்சிசனை உள்வாங்கி திடமான வேகத்துடன் இலக்கைச் சென்று தாக்கும்.

இதன் பயணப்பாதை என்பது எதிர்வுகூறுவது கடினமானது. சாதாரண ஏவுகணைகளைப் போல ஒரு வரையறுக்கப்பட்ட பாதையில் அல்லது அரை வளைவுப் பாதையில் அவை பயணிப்பது இல்லை. அது வளியைப் பயணப்பாதையாகக் கொண்டு நகர்வதால், அதன் பாதையை கண்டறிந்து தாக்குவது கடினம்.

எதிரிகளின் வான் பாதுகாப்பை முறியடித்து, ஊடறுத்துச் செல்வதே அதன் சிறப்பம்சம் என கூறுகின்றார் Royal United Services Institute ஜ சேர்ந்த படைத்துறை ஆய்வாளர் ஜஸ்ரின் புரொங். எனவே மிகவும் பாதுகாப்பான நிலையிடங்களைச் சுலபமாகத் தாக்க முடியும். நகர்ந்து செல்லும் உயர் பாதுகாப்புக் கொண்ட இலக்குகளையும் தாக்கலாம். அதாவது நவீன விமானங்கள் அல்லது விமானந்தாங்கிக் கப்பல்கள்.

இந்த ஏவுகணைகளின் இயக்க சக்தி அதிகம் என்பதால், இலக்குகளை உள்சென்று தாக்கும் வல்லமை கொண்டது. எனினும் அதனால் ஏற்படும் சேதம் என்பது அதில் பொருத்தப்படும் வெடிகுண்டில் தங்கியுள்ளது. கப்பல்களைத் தாக்கும் போது அது ஒரு புறத்தில் சென்று மறுபுறத்தால் வெளிவரும் சக்தி கொண்டது. ஆழமான பதுங்கு குழிக்குள் இருக்கும் இலக்குகளையும் தாக்கும் தகைமை கொண்டது.

காற்றைக் கிழித்துச் செல்லும் இந்த ஏவுகணைகள், காற்றைத் தனது பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்திச் செல்கின்றது. எனவே அதனைத் தாக்குவது கடினமானது, புதிய தலைமுறை வான்பாதுகாப்பு சாதனங்களையும் அது முறியடித்துவிடும். அதாவது இவ்வாறான கதைகளை நாம் திரைப்படங்களில் தான் பார்த்திருப்போம் ஆனால் இன்று நிஜமாக எம் கண்முன்னால் வந்து நிற்கின்றது என தெரிவித்துள்ளார் சதாம் கவுஸ் சிந்தனைப் பள்ளியின் ஆய்வாளர் மத்தியூ பொலிகோ.

தற்போதைய நிலையில் பிரித்தானியாவிடம் இந்த வகையான ஏவுகணைகள் இல்லை, அமெரிக்கா தற்போது தான் பரீட்சித்துப் பார்த்துள்ளது. முன்னணியில் இருப்பவை ரஸ்யாவும் சீனாவும் தான். அமெரிக்கா மிகவும் சக்தி வாய்ந்த வான்பாதுகாப்புப் பொறிமுறைகளைக் கொண்டுள்ளதால், அவற்றை ஊடறுத்துச் செல்லும் ஏவுகணைத் தயாரிப்பில் ரஸ்யா அதிக கவனம் செலுத்தியிருந்தது; அதில் வெற்றியும் பெற்றுள்ளது. எனினும் தற்போது மூன்று நாடுகள் கூட்டாகத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதால், அவர்கள் அதிகளவில் உருவாக்க முடியும்.

மேற்குலகத்தைப் பொறுத்தவரையில், இந்த ஏவுகணைகளின் வடிவமைப்பில் அவை ஆரம்ப நிலையிலேயே உள்ளன. எனவே அதனை உக்ரைன் சமரில் அவர்களால் பயன்படுத்த முடியாது. இந்த ஏவுகணையின் பரிசோதனையில் கூட அமெரிக்கா பல தடைகளைச் சந்தித்துள்ளது என புரொங் தெரிவித்துள்ளார். எனவே இத்தகைய ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்க முடியாது.

ஒரு ஏவுகணையின் பெறுமதி 50 தொடக்கம் 100 மில்லியன் டொலர்களாக இருப்பதே இந்த ஆயுதத்தின் பின்னடைவாகும். இதனை அதிகளவு பயன்படுத்தும் போது போர் அதிக செலவு மிக்கதாக மாறிவிடும்.

சீனாவையும், ரஸ்யாவையும் பார்க்கும்போது மேற்குலகத்தினால் அதிக இலக்குகளைத் தாக்கும் சக்தி கிடையாது. கைப்பசொனிக் ஏவுகணைகளைத் தயாரிக்க பிரித்தானியாவுக்கு 5 தொடக்கம் 10 வருடங்கள் எடுக்கலாம். அதுவும் அமெரிக்கா தொழில்நுட்ப உதவிகளை வழங்கினால் தான் சாத்தியம் என தெரிவித்துள்ளார் வான்வெளி வியூங்களுக்கான அனைத்துலக பள்ளியின் ஆய்வாளர் டக்ளஸ் பரி அவர்கள்.

கைப்பசொனிக் ஏவுகணைகள் அரசியல் முக்கியத்துவம் அற்றதெனினும், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து தயாரிப்பது அரசியல் முக்கயத்துவம் வாய்ந்தது என தெரிவித்துள்ளார் புரொங். இது இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் பிரித்தானியாவின் ஆளுமையை அதிகரிக்கும்.

இதனிடையே அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா யப்பான் ஆகிய நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கிய போதும், நவீன ஆயுதங்களின் இணைந்த பயன்பாட்டில் யப்பானையும், இந்தியாவையும் ஓரம்கட்டி விட்டு அமெரிக்காவும் பிரித்தானியாவும் அவுஸ்திரேலியாவுடன் இணைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version