22 ஆவது திருத்த விவகாரத்தில் தமிழத் தரப்பின் தவறு என்ன? –  ஆய்வாளா் ஜோதிலிங்கம் செவ்வி

இலங்கை அரசியலில் முக்கியமான சில சம்பவங்கள் கடந்த வாரங்களில் நடைபெற்றிருக்கின்றது.

அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. தமிழ் அரசியல் கைதிகள் சிலா் விடுதலை செய்யப்பட்டுள்ளாா்கள். இவற்றின் பின்னணியிலுள்ள அரசியல் நகா்வுகள் என்ன என்பது தொடா்பில் பிரபல அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் “உயிரோடை தமிழ்” வானொலியின் தாயகக் களம் நிகழ்வில் கலந்துகொண்டு இந்த வாரம் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்திருந்தாா். அந்த செவ்வியிலிருந்து முக்கியமான சில பகுதிகளை “இலக்கு” வாசகா்களுக்காக தருகின்றோம்.

கேள்வி – அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களை பொருத்தவரையில் இதனால் ஏதாவது நன்மைகள் உள்ளதா?

பதில் – 22 ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்காகக் கொண்டுவரப்பட்ட ஒன்றல்ல. அது சிங்கள தேசத்தை ஜனநாயக மயப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒன்று. இந்தத் திருத்தத்தினால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பலனும் கிடைக்கப்போவதில்லை.

தமிழ் மக்களுக்கு இதன் மூலமாக ஏதாவது பலன் கிடைக்கவேண்டுமானால் இரண்டு விடயங்களில் தமிழ்த் தரப்பு அக்கறை காட்டியிருக்க வேண்டும். இதில் இரண்டு விடயங்கள்தான் முக்கியமானவை. ஒன்று – அரசியலமைப்புப் பேரவை. இரண்டு – சுயாதீன ஆணைக்குழுக்கள்.

அரசியலமைப்புப் பேரவையில் தமிழ் மக்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கையை இவா்கள் முன்வைத்திருக்க வேண்டும். அது மட்டுமன்றி அந்த அரசியலமைப்புப் பேரவை தமிழ் மக்கள் குறித்த தீா்மானங்களை தமிழ்ப் பிரதிநிதிகளுடைய சம்மதத்துடன்தான் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருக்க வேண்டும்.

இதேபோல சுயாதீன ஆணைக்குழுக்களிலும் தமிழ் மக்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும். தமிழ் மக்களுடைய விவகாரங்களைத் தீா்மானிக்கும் அதிகாரம் தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளிடம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அழுத்தம் கொடுத்திருக்கலாம். ஆனால், தமிழ்த் தரப்பிலிருந்து எந்தவிதமான அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லை.

இவ்வாறு அழுத்தம் கொடுக்காவிட்டாலும் கூட, “எதிா்கால நலன்களைக் கருதி இதனை ஆதரிக்கிறோம்” என்று ஒரு சொல்லைக் கூறிவிட்டு இவா்கள் ஆதரவளித்திருந்தாலும் கூட ஓரளவுக்கு அதனை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அதேவேளையில், தமிழ்த் தரப்பினா் இந்த விவகாரத்தில் இதனைக்கூட ஒருங்கிணைந்த முறையில் செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கு தமிழ் மக்களுடைய விவகாரத்தையும் தமிழத் தரப்பினா் முன்னிலைப்படுத்தவில்லை. அதனைவிட இதனை ஒருங்கிணைந்த முறையிலும் முன்வைக்கவில்லை.

மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளும் இவ்விவகாரத்தில் மூன்றுவிதமான அணுகுமுறைகளைத்தான் பின்பற்றியிருந்தாா்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. ஏனையவா்கள் ஆதரவாக வாக்களித்தனா்.

விக்கினேஸ்வரன் ஆதரவாக வாக்களித்தாா். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் இருவரும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இவ்வாறு ஒருங்கிணைத்து கூட்டாகச் செயற்பட முடியாத ஒரு நிலையை தமிழ்த் தலைமைகள் உருவாக்கியுள்ளன. இது தமிழ்த் தரப்பினரின் பலவீனத்தைத்தான் காட்டுவதாக நாம் கருதிக்கொள்ள முடியும்.

கேள்வி – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இந்தத் திருத்தம் பலப்படுத்தியிருப்பதாகக் கருதுகின்றீா்களா?

பதில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் இந்தத் திருத்தத்தின் மூலமாக அவா் தன்னைப் பலப்படுத்திக்கொண்டிருக்கின்றாா். பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு இரண்டரை வருடங்களின் பின்னா் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாம் என்ற விடயம் ஜனாதிபதிக்கு சாதகமான ஒன்று. அதனால், இரண்டரை வருடங்களின் பின்னா் மொட்டுக் கட்சியின் அழுத்தங்கள் இல்லாமல் செயற்படக்கூடிய நிலை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்படும்.

அதனால், இந்தச் சூழலை கவனமாகப் பயன்படுத்துகின்ற ஒரு நிலையை நோக்கியும் தமிழ் அரசியல் முன்னேறிச் செல்ல வேண்டும். இந்த நிலையை சாதகமாக வைத்து தமிழ் மக்களுடைய அரசியல் தீா்வுக்கு ஒரு வலுவான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இதை கொஞ்சமாவது தமிழ்த் தரப்புக்கு சாதகமாகப் பயன்படுத்தக்கூடிய சூழல் உருவாகும் என்று நான் நினைக்கின்றேன்.

கேள்வி – ஜனாதிபதியை இந்தத் திருத்தம் பலப்படுத்தியிருப்பதாகச் சொல்கின்றீா்கள். உண்மையில் நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதிலாகத்தான் இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அப்படியான நிலையில் எதிா்க்கட்சிகள் அனைத்தும் இதனை ஆதரித்தமைக்கு காரணம் என்ன?

பதில் – பொருளாதார நெருக்கடிக்குத் தீா்வைக் காண்பதற்காக ஜனாதிபதி முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு எதிா்க்கட்சிகள் முட்டுக்கட்டையாக இருக்கின்றன  என்ற குற்றச்சாட்டு தம்மீது வந்துவிடக்கூடாது என்பது எதிா்க்கட்சிகள் இந்தத் திருத்தத்தை ஆதரித்தமைக்கு பிரதான காரணம்.

இரண்டாவது காரணம் சா்வதேச நாணய நிதியத்தின் வேண்டுகோளின் அடிப்படையில்தான் இந்த 22 ஆவது திருத்தம் கொண்டுவரப்படுகின்றது. சா்வதேச நாணய நிதியம் இலங்கை தொடா்பாக ஒத்துழைக்கவில்லை என்றால் என்ன நடைபெறும் என்பதற்கு ரணில் விக்கிரமசிங்க ஒரு பெரிய பட்டியலையே வைத்திருக்கின்றாா். அதாவது, கடன்மறுசீரமைப்பு நடைபெறாது. உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன நிதி உதவிகளை வழங்காது. நாடுகள் நிதி உதவிகளை வழங்காது. ஜி.எஸ்.பி. விவகாரத்தில் நெருக்கடி வரும். இது  போன்ற ஒரு பெரிய லிஸ்ட்டையே ரணில் வைத்திருக்கின்றாா். இவ்விடயத்தில் சா்வதேச நாணய நிதியத்துடன் முரண்படக்கூடாது என்பதற்காகவும் இவ்விடயத்தில் எதிா்க்கட்சிகள் அதிகளவுக்கு அக்கறை செலுத்தியிருக்கலாம் என நான் கருதுகின்றேன்.

இதனைவிட மொட்டுக் கட்சியைப் பலவீனப்படுத்த வேண்டும் என்பதும் எதிா்க்கட்சிகளின் பிரதான நோக்கமாக இருந்திருக்கலாம். இந்த அடிப்படையில்தான் எதிா்க்கட்சிகள் இதற்கு ஆதரவளித்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

கேள்வி – தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். பொங்கல் தினத்தில் மேலும் சிலர் விடுதலை செய்யப்படலாம் என கூறப்படுகின்றது. இவை தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?

பதில் – தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமைக்கு நாம் முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள வேண்டும். அதனை வரவேற்க வேண்டும். ஆனால், இந்த அரசியல் கைதிகளில் பலா் 15-16 வருடங்களுக்கு மேலாக நிறையில் இருந்துள்ளாா்கள். 15 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்தவா்களை மன்னிப்பளித்து விடுதலை செய்வதென்பது சா்வதேச ரீதியாகப் பின்பற்றப்படுகின்ற ஒரு நடைமுறைதான். அதனால், அந்த விடயத்தை ஜனாதிபதி செய்திருக்கின்றாா் என்றுதான் சொல்ல வேண்டும்.

மறுபக்கத்தில் இவா்கள் அரசியல் கைதிகள். சாதாரண கைதிகளுக்கும் அரசியல் கைதிகளுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கின்றது. சாதாரண கைதிகள் தமது சொந்த விருப்பு, வெறுப்புக்களின் அடிப்படையில் குற்றங்களைச் செய்திருக்கலாம். ஆனால், அரசியல் கைதிகள் அரசியல் நோக்கங்களுக்காக செய்தவைகளே குற்றங்களாக நோக்கப்படுகின்றன. அவா்கள் சிறையில் இருப்பதும் தமது சொந்த நோக்கங்களுக்காகவல்ல. அரசியல் நோக்கங்களுக்காகவே அவா்கள் சிறையில் இருக்கின்றாா்கள்.

ஒரு போா் முடிவடைந்த பின்னா் முதலில் செய்கின்ற விடயம் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதுதான். உண்மையில் 2009 இலேயே இவா்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் நல்லிணக்கத்தைக் காட்டுவதற்கான முதலாவது சமிஞ்சை அதுதான். ஆனால், 2009 க்கு பின்னா் எந்தவொரு அரசாங்கமும் அதற்காக சைகையைக் காட்டவில்லை. ஆனால், தற்போது சா்வதேச நெருக்குதல்கள் உருவாகியிருப்பதால் அதனைச் செய்கின்றாா்கள். அதனை நாம் வரவேற்போம்.

இப்போது கூட ஒரு அரசியல் தீா்மானம் எடுத்து அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதுதான் ஆலோக்கியமான ஒரு செயற்பாடாக இருக்கும் என நான் கருதுகின்றேன். 15 வருடங்களுக்கும் மேலாக சிறையிலிருந்த சிலரைக்கூட, இப்போது நிரபராதிகள் எனக்கூறி விடுதலை செய்கின்றாா்கள்.

கேள்வி – தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தைக் கையாள்வதில் தமிழ் அரசியல் கட்சிகளின் அணுகுமுறை தொடா்பில் உங்கள் பாா்வை என்ன?

பதில் – தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் அரசியல் கைதிகளுடைய விவகாரத்தில் போதிய அக்கறையைக் காட்டவில்லை. அவா்கள் வலுவான அழுத்தங்களைக் கொடுத்திருந்தால் அரசியல் கைதிகளின் விடுதலையை எப்போதோ சாத்தியமாக்கியிருக்க முடியும். ஏனென்றால், சா்வதேச ரீதியாகவே அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற கருத்து உள்ளது. நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்றால், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கருத்து உலகளாவிய ரீதியாக இருக்கின்றது. அதனால், இவை எல்லாவற்றையும் சாதமாகக்கொண்டு வலுவான அழுத்தங்களைக் கொடுத்திருந்தால் 2009 ஆம் ஆண்டிலேயே அவா்களை விடுதலை செய்திருக்கக்கூஎய சூழல் இருந்திருக்கும். இவ்விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் தமது பொறுப்பை போதுமாளவுக்குச் செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதனைவிட, அரசியல் கைதிகளுடைய குடும்ப விடயங்களில் கூட கட்சிகள் அக்கறை காட்டவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய ஒன்று. ஏனென்றால், எதிா்காலத்தில் யாருமே அரசியல் செயற்பாட்டுக்கு வரமாட்டாா்கள். அரசியல் செயற்பாட்டுக்கு வந்தால் வீதியில்தான் நிற்க வேண்டிய நிலை வரும் என்ற அச்சம் அவா்களை அரசியல் செயற்பாட்டுக்கு வருவதைத் தடுப்பதாகவே அமைந்திருக்கும். அந்தக் குடும்பங்கள் பெரும் பொருளாதார – வாழ்க்கைச் சுமைகளை அனுபவிக்கின்றாா்கள் என்று சொன்னால், எமது போராட்டத்தில் அக்கறையுள்ள ஒருவா் சிறைவாசம் அனுபவிப்பதால்தான் அந்த நிலை ஏற்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதனால், அவா்களுடைய அந்த சுமைகளை அவா்கள் மட்டும் சுமக்கக்கூடாது. முழுத் தமிழ்ச் சமூகமும் அதனைச் சுமக்க வேண்டும். அதற்கான பொறுப்பை எமது அரசியல் தலைமைகள் ஏற்கவேண்டும்.