தமிழ்த்தரப்பின் செயல் வழி என்ன?  -பி.மாணிக்கவாசகம்

WhatsApp Image 2022 08 01 at 12.13.46 PM e1659336402188 தமிழ்த்தரப்பின் செயல் வழி என்ன?  -பி.மாணிக்கவாசகம்

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை பல்வேறு உணர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.

அந்த உரையைப் பலரும் வரவேற்றுள்ளார்கள். ஆளுமையுள்ள ஓர் அரசியல் தலைவரின் உரையாக அது அமைந்திருப்பதை மேலோட்டப் பார்வையில் புரிந்து கொள்ள முடிகின்றது. ஓர் அரசியல் தலைவருக்கே உரிய பொறுப்புணர்வோடு அவர் உரையாற்றி இருக்கின்றார். நீண்டகாலத்தின் பின்னர் சிறப்பானதொரு கொள்கைப் பிரகடன உரையாக அது அமைந்திருக்கின்றது என சிறிலங்கா சுதந்திரக் கட்சி வரவேற்றிருக்கின்றது. அவரது உரை யதார்த்தமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா வர்ணித்திருக்கின்றார்.

அவரது உரை சீரழிந்துள்ள நாட்டின் பொருளாதார நிலைமைகளை ஆழமாகவும் அகலமாகவும் பிரதிபலித்திருக்கின்றது. பொருளாதாரச் சீரழிவில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்தும் அவரது உரை வெளிப்படுத்தி இருக்கின்றது. பேரினவாத அரச தலைவர்கள் பொதுவாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தமது கொள்கைப் பிரகடன உரையில் கவனம் செலுத்துவதில்லை. அவ்வாறு கவனம் செலுத்தினாலும், அது மேலோட்டமாக வேறு பிரச்சினைகளின் தொடர்ச்சியில் தொக்கி நிற்பதாகவே அமைந்திருக்கும்.

அதிலும் குறிப்பாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி அவர்கள் கருத்துக்களை வெளியிட்டிருந்தாலும், தமிழ்க்கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் என்ற அளவிலேயே அது அமைந்திருக்கும். அரசியல் தீர்வு அவசியம் என்பதை அவர்கள் தமது உரைகளில் வெளிக்காட்டுவதில்லை.

ஆனால் பழுத்த அரசியல்வாதியும் அரசியலில் ஜேஆர் ஜயவர்தனவுக்குப் பிறகு நரித்தந்திரம் மிக்கவர் என்று குறிக்கப்படுபவருமாகிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கப் போவதாக அறிவித்திருக்கின்றார். அத்துடன் மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். அவருடைய அறிவிப்பும் கூற்றும் எந்த அளவுக்கு உளப்பூர்வமானது என்பதை உடனடியாகக் கூறிவிட முடியாது.

பொதுவாக ஒற்றை ஆட்சி முறையையும் ஓரின நலன்களையும் அடிப்படையாகக் கொண்ட வகையிலேயே நாடாளுமன்றக கொள்கைப் பிரகடன உரைகள் அமைந்திருப்பதுண்டு. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உரை பல்லிணத் தன்மை குறித்த சிந்தனையைக் கொண்டிருப்பதாகக் காணப்படுகின்றது. ஆயினும் பௌத்த மதத்திற்கே முதலிடம் என்ற அரசியலமைப்பு நிலைப்பாடும் அந்த வகையில் பௌத்த மதம் பேணிப் பாதுகாக்ககப்படும் என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

வழமையான உறுதிமொழிகளில் இருந்து வேறுபடுமா….?

சூழ்ந்துள்ள நெருக்கடிகளில் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் நாட்டை மீட்டெடுத்து முன்னேற்றுவதற்கான பலவேறு வேலைத்திட்டங்கள் பற்றியும் அவரது உரையில் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது. இது அவரது நெடுங்கால அரசியல் கனவாகிய ஜனாதிபதி பதவிக் கனவு நிறைவேறியுள்ள என்ற மனத்திருப்தியில் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதற்கான அரசியல் தந்திரோபாயம் என்ற பார்வையும் இருக்கத்தான் செய்கின்றது.

எனினும் பலரையும் தன்பக்கம் கவர்ந்து இழுத்து, தனது கருத்துக்களைக் கூர்ந்து செவிமடுக்கச் செய்திருப்பதுடன், சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான அழைப்பை நியாயமானது. துட்டிக்கழிக்க முடியாதது என்ற நிலைப்பாட்டை வலிமை பெறச் செய்வதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார் என்றே கூற வேண்டும்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்துவதற்கு முன்பே, சர்வகட்சி அரசாங்கத்தில் அனைத்துக் கட்சிகளும் அனைத்து அரசியல் தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என்ற அவரது அழைப்பை ஒருசில கட்சிகளே நிராகரித்திருந்தன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உட்பட சிறுபான்மை கட்சிகள் பலவும் அதற்கு ஆதரவளித்திருந்தன. அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான ஆதரவை அவரது கொள்கைப் பிரகடன உரை மேலும் வலிமைப்படுத்தி இருப்பதைக் காண முடிகின்றது.

புதிய ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் அரசியல்வாதிகள் பல்வேறு உறுதிமொழிகளை வழங்குவதும் அந்த உறுதிமொழிகளை அவர்கள் பின்னர் மறந்துவிடுவதே வழமை. தேர்தல்கால உறுதிமொழிகளும், அந்த உறுதிமொழிகளின் மூலம் பெறுகின்ற மக்கள் ஆணைகளுக்கும் இதே கதிதான்.

ஆனால் மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படாமல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்களிப்பின் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களுக்கு நேரடியாகக் கடமைப்பட்டவரல்ல. ஏனெனில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்யிட்ட தேர்தல் தொகுதியிலேயே அவர் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டிருந்தார். அவருடைய தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி போட்டியிட்ட எந்தவொரு தேர்தல் தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை. அந்தக் கட்சியை நாட்டு மக்கள் ஒரேயடியாகப் புறந்தள்ளியிருந்தனர்.

அது மட்டுமல்லாமல் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டதனாலோ அல்லது ஓர் ‘அரசியல்; விபத்தின் மூலாகவோ’ என்னவோ ஜனாதிபதியாகியுள்ள அவரை அரச தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக போராட்டக்காரர்கள் அவரையும் பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகாத ஒரு நிலையிலேயே தனது கொள்கைப் பிரகடன உரையை அவர் ஆற்றியிருக்கின்றார்.

தேவையும் நிலைமையும்

இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த நாட்டின் பாரம்பரிய கட்சியாகிய  தனது கட்சியைக் கட்டி எழுப்புவதற்கான முயற்சிகளுக்குத் தனக்குக் கிடைத்துள்ள சர்வ வல்லமை கொண்ட ஜனாதிபதி பதவியைப் பயன்படுத்திக் கொள்வார் என்பத்pல் எந்த சந்தேகமும் இல்லை. ஓர் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராகியுள்ள அவர், ஏற்கனவே சூனிய நிலைக்குச் சென்றுள்ள தனது அரசியல் வாழ்வையும், ஐக்கிய தேசிய கட்சியையும் கட்டி எழுப்ப வேண்டிய தேவையைக் கொண்டிருக்கின்றார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்போ அல்லது அதற்கு முன்னதாகவே நாடு பொதுத் தேர்தல் ஒன்றைச் சந்திக்க நேரிடலாம். அத்தகைய நிச்சயமற்ற அரசியல் சூழலே நாட்டில் நிலவுகின்றது. இந்ப் பின்னணியில் பல்வேறு தரப்பினரையும் அனைத்துக் கட்சி அரசாங்கத்தில் அனைவரையும் பங்கேற்கச் செய்து தனது அரசியல் தலைமைத்துவத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்கான தந்திரோபாயம் அவரது உரையில் இழையோடி இருப்பதைக் காண முடிகின்றது.

குறிப்பாக வடக்கு கிழக்குத் தமிழ் மக்களினதும் மலையக மக்களினதும் மனங்களை வெற்றி கொள்வதற்கு அந்தந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் ஊடாக அவர் தனது இராஜதந்திர வலையை வீசியிருக்கின்றார். இதனை அனைத்துத் தமிழ்த் தலைவர்களும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் கவனத்திற் கொள்ள வேண்டியது அவசியம்.

ஏனெனில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக – நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட அரசியல் தலைவராக இருக்கலாம். ஆனால் நாடாளுமன்றத்தில் தனக்கென ஒரேயொரு உறுப்பினரை மாத்திரமே கொண்டுள்ள அவர் அங்கு பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் அனுசரணையிலேயே செயலாற்ற வேண்டிய நிலையில் இருக்கின்றார்.

பொதுஜன பெரமுன கட்சியினருக்கும், அந்தக் கட்சியின் செயல் விசையைக் கொண்டுள்ள ராஜபக்ஷக்களுக்கும் ஒவ்வாத – அவர்களின் கொள்கை நிலைப்பாட்டுக்கு எதிர்மாறான விடயங்களே அவரது கொள்கைப் பிரகடன உரையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைச் செயற்படுத்துவதற்கு பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவு கிடைக்குமா என்பது கேள்விக்குரியது. இந்த நிலையில் தனது நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்கு சிறுபான்மை இனக் கட்சிகளினதும், தமிழ் முஸ்லிம் மக்களினதும் ஆதரவலேயே தங்கியிருக்க வேண்டி இருக்கும். அதனை இலக்காகக் கொண்டே வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். தீர்வு காணப்படும் என்ற அறிவித்தலை தனது கொள்கைப் பிரகடன உரையில் வெளியிட்டிருக்கின்றார்.

நாடு படுகுழியில் வீழ்ந்திருக்கின்றது. பொருளாதாரப் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிக்கின்ற அதேவேளை பிராந்திய வலலரசுப் போட்டி நிலையிலும் நாடு சிக்கல்களை எதிர்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் அனைத்துக்கட்சி அரசாங்கம் ஒன்றின் மூலம் நாட்டின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து ஐக்கியத்துடன் செயற்பட வேண்டிய தேவை இன்றியமையாதது.

அவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டிருக்கின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ்க்கட்சிகள் பலவும் அதற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இணைந்து ஒத்துழைப்பதற்கான இணக்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றன.

ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவையை தமிழ்த்தேசியக் கொள்கையை வரித்துக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் புறந்தள்ளிச் செயற்பட முடியாது. இதே நிலைதான் மலையக அரசியல்வாதிகளுக்கும். ஆனால் அரசுக்கு ஒத்துழைத்துச் செயற்படுகின்ற வாய்ப்பை சமயோசிதமாகவும் தந்திரோபாய ரீதியிலும் பயன்படுத்தி, அதன் மூலம் தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

இது விடயத்தில் வடக்கு கிழக்கு ரீதியிலும், மலையக அளவிலும் அரசியல் கட்சிகள் தமக்குள் ஒன்றிணைந்து எவ்வாற அனைத்துக் கட்சி அரசாங்கத்தைக் கையாள்வது அல்லது தமிழ் மக்களின் நலன்களை வென்றெடுக்கத் தக்க வகையில் அதில் எவ்வாறு பங்களிப்புச் செய்வது என்பது குறித்த தங்களுக்குள் ஒரு திட்டத்தை வகுத்துச் செயற்பட வேண்டியது அவசியம்.