Home ஆய்வுகள் தமிழ்க் கட்சிகள் கச்சதீவு விவகாரத்தை கைகளில் எடுப்பதன் பின்னணி என்ன? | அகிலன்

தமிழ்க் கட்சிகள் கச்சதீவு விவகாரத்தை கைகளில் எடுப்பதன் பின்னணி என்ன? | அகிலன்

கச்சதீவு விவகாரம்அகிலன்

கச்சதீவு விவகாரம் கையில் எடுக்கும் தமிழ்க் கட்சிகள்

கச்சதீவு தொடர்பில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துவரும் கருத்துக்களும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் மோடியை மேடையில் வைத்துக் கொண்டு வெளியிட்ட அறிவிப்பும் இலங்கைத் தமிழ் மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

“கச்சதீவை இந்தியா மீளப்பெறுவதற்கான தருணம் இதுதான்” என அவர்கள் கூறுகின்றார்கள். ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள தமது மீன்பிடித்தொழில் மேலும் அச்சுறுத்தலுக்குள்ளாகலாம் என ஈழத் தமிழ் மீனவர்கள் அஞ்சுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

மறுபக்கத்தில் தமிழக அரசியல் கட்சிகள் இந்த அறிவிப்புக்களை ஆரவாரமாக வரவேற்றுள்ளன. கச்சதீவு விவகாரத்தை கையில் எடுப்பதற்குப் ‘பொருத்தமான நேரம்’ இதுதான் என இதனை வரவேற்று வெளியிட்டுள்ள அறிக்கைகளில் தமிழகக் கட்சிகள் பலவும் கூட கூறிவருகின்றன. ‘பொருத்தமான நேரம்’ என எதனை முன்வைத்து அவர்கள் சொல்கின்றார்கள்? இலங்கை பலவீனமான நிலையில் இருப்பதை முன்வைத்தா?

இரு நாட்டு மீனவர்களையும் பொறுத்தவரையில், உணர்வுபூர்வமான இந்த விவகாரம் இப்போது சர்ச்சைக்குரிய ஒன்றாகியிருப்பதற்கான காரணம் என்ன? இவை குறித்து ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

சர்ச்சையை ஆரம்பித்த பா.ஜ.க. அண்ணாமலை

சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு திடீர் விஜயம் ஒன்றை முன்னெடுத்திருந்த பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் அண்ணாமலைதான் இந்தப் பிரச்சினை மீண்டும் பேசப்படுவதற்கான பிள்ளையார்சுழியைப் போட்டுக்கொடுத்தவர். அவரது இலங்கை விஜயம் முக்கியமானதாக நோக்கப்பட்டமைக்கு காரணங்கள் இருந்தன.

பிரதமர் மோடியின் ஒரு பிரதிநிதியாகவே அவர் இலங்கை வந்திருந்தார். வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளுக்கும் சென்ற அவர், பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார். அவருடன் பேசுவதில் தமிழ்ப் பிரதிநிதிகளும் ஆர்வம் காட்டியிருந்தார்கள். இந்தியாவின் பலம்வாய்ந்த ஆளும் கட்சியின் பிரதிநிதியாக அவர் வந்திருப்பதால், இலங்கை குறித்து புதுடில்லி எடுக்கக்கூடிய தீர்மானங்களில் அவரது விஜயமும், நாடு திரும்பிய பின்னர் பிரதமர் மோடிக்கு அவர் கொடுக்கக்கூடிய அறிக்கையும் செல்வாக்கை செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

சென்னை திரும்பிய பின்னர் பிரதமருக்கு அவர் அனுப்பிய அறிக்கையில் என்ன குறிப்பிட்டிருந்தார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட அவர், கச்சதீவை இந்தியா மீளப் பெறுவதற்கான தருணம் இதுதான் எனவும். அதற்கான செயன்முறைகளை இந்தியா ஆரம்பிக்க வேண்டும் என்ற வகையிலும் கருத்து வெளியிட்டிருந்தார்.

தமிழக அரசியலும் கச்சதீவு சர்ச்சையும்

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு அவசியமான உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதற்கான செயன்முறை ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்திருந்த ஒரு பின்னணியில்தான் அண்ணாமலையின் இலங்கை விஜயம் இடம்பெற்றது. இது இலங்கை, தமிழக ஊடகங்களின் கவனத்தையும் அதிகளவுக்குப் பெற்றிருந்தது. அதாவது, ஸ்டாலின் பெற்றுவரும் ஊடகக் கவனத்தை ஓரளவுக்காவது தனது பக்கம் திருப்புவது அவரது நோக்கமாக இருந்தது.

தமிழக அரசியலில் அண்ணாமலையின் வருகையைத் தொடர்ந்து பா.ஜ.க.வின் வளர்ச்சி அதிகளவுக்குள்ளானதாக ஒரு கருத்துள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டமை இந்த வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகின்றது. இந்த நிலையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடும், கச்சதீவு குறித்த அறிவிப்புக்களும் கட்சியின் ஆதரவுத் தளத்தை மேலும் விரிவாக்க உதவும் என்பது அண்ணாமலையின் கருத்து.

அ.தி.மு.க. செயற்றிறனற்ற இரட்டைத் தலைமையாலும் சசிகலாவின் அதிரடி அறிவிப்புக்களாலும் குழம்பிப்போயிருக்கும் நிலையில், பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் ஆதரவை வலுப்படுத்துவதன் மூலம் மோடியின் இதயத்தில் இடம்பிடிப்பது அண்ணாமலையின் திட்டம். பா.ஜ.க.வைப் பொறுத்தவரையில், தென்னிந்தியாவில் தான் அது வலுவான நிலையில் இல்லை என்பது மோடியின் கருத்து. அதனை மாற்றியமைப்பதற்கான நிகழ்ச்சிநிரலை வகுத்துச் செயற்படும் அண்ணாமலை ஈழத் தமிழர் விவகாரத்தை கைகளில் எடுத்துள்ளார் என்பது இப்போது வெளிப் படையாகவே தெரிகின்றது.

அண்ணாமலை சொன்ன ‘காலப்பெட்டக’ கதை!

அண்ணாமலையின் அதிரடியான இலங்கை விஜயம், அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட கச்சதீவு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் என்பவற்றைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சென்னையில் நடைபெற்ற போது  அவர் நிகழ்த்திய உரையும் ஈழத் தமிழர் பிரச்சினையை மையப்படுத்தி தமிழக அரசியலில் அவர் காய்நகர்த்துகின்றார் என்பதை வெளிப்படுத்தியது.

பெரும் சர்ச்சைகளின் மத்தியில் சென்னையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அண்ணாமலை சொன்ன காலப்பெட்டகக் கதையை யாருமே சீரியஸாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. அது நகைச்சுவையான ஒன்றாகத்தான் நோக்கப்பட்டது. காலப்  பெட்டகத்தில் திரும்பிச் சென்று 2009 க்கு போனால், அப்போது பா.ஜ.க. ஆட்சியில் இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை தடுத்து நிறுத்தியிருப்போம் என அண்ணாலை தெரிவித்தார்.

ஈழத் தமிழர் விவகாரத்தை தமிழக அரசியலுக்கு எந்தளவுக்குப் பயன்படுத்த அவர் முற்படுகின்றார் என்பதற்கு இதனைவிட வேறு உதாரணம் தேடத் தேவையில்லை. உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்காக சாத்தியமற்ற ஒன்றை அவர் பேசுகின்றார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மக்கள் இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஐ.நா. சபை வரையில் இது எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க மோடி அரசு செயற்படும் என அவர் அறிவித்திருந்தால், அது உண்மையில் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்.

ஜெனீவாவில் ஈழத் தமிழர் பிரச்சினையை நீர்த்துப்போகச் செய்வதில் மோடி அரசு எந்தளவுக்கு சம்பந்தப்பட்டது என்பது தெரியாத ஒன்றல்ல. இனிமேலும் அதனைத்தான் மோடி அரசு  செய்யும் என்பதும் எதிர்பார்க்கக்கூடியதுதான். இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை முன்வைத்துக்கூட தமிழகத்தில் அரசியல் செய்ய அண்ணாமலை முற்படுகின்றார் என்பது வெளிப்படை.

ஸ்டாலின் அறிவிப்பின் பின்னணிதான் என்ன?

ஈழப் பிரச்சினையை வைத்து அண்ணாமலை ‘ஸ்கோர்’ பண்ணிக்கொண்டு போகின்றார் என்பது ஸ்டாலினுக்கும் புரிந்தது. அதற்குப் பதிலடி ஒன்றைக் கொடுப்பதற்கு அவரும் காத்திருந்தார். கடந்த வாரம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக மோடி சென்னை வந்த போது, அவரை மேடையில் வைத்துக் கொண்டே அந்த அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார்.

“தமிழக மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் கச்சதீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம்” என்பதுதான் மோடியிடம் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கை. ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்த கூட்டத்தில் ஸ்டாலின் இதனை அறிவித்த போது மக்களின் கரகோசம் விண்ணைப் பிளந்தது. ஆக, அண்ணாமலையின் நகர்வுக்கு மோடி முன்பாகவே ஸ்டாலின் பதிலடியைக் கொடுத்து விட்டார். ‘இதுவே உகந்த தருணம்’ என எதனை ஸ்டாலின் குறிப்பிடுகின்றார்.

இலங்கை பொருளாதார நிலையில் அதளபாதாளத்தில் விழுந்திருக்கும் நிலையில், அதனை தூக்கி நிமிர்த்துவதற்கு இந்தியா உதவிக்கொண்டுள்ளது. இதனைத்தான் ‘உகந்த தருணம்’ என ஸ்டாலின் கருதுகின்றாரா? இந்த நிலையில்தான் கச்சதீவை 33 வருட குத்தகையில் பெற்றுக்கொள்ள இந்தியா திட்டம் என்ற செய்தி ஒன்றும் கசிய விடப்பட்டது.

ஈழத் தமிழர் நலன்களில் தமது அக்கறையை வெளிப்படுத்தி தமிழகத்தில் அரசியல் செய்யும் கட்சிகள், கச்சதீவு விவகாரத்தில் ஈழத் தமிழர்களின் நிலைப்பாடு என்ன? அதனால் அவர்கள் எந்தளவுக்குப் பாதிக்கப்படுவார்கள் போன்ற விடயங்களையிட்டு எந்தவகையிலும் அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை.

Exit mobile version