புலம்பெயர் அமைப்புக்களை பேச்சுக்கு அழைப்பதன் பின்னணி என்ன? | ஆய்வாளர் ஐ.வி.மகாசேனன்

பேச்சுக்கு அழைப்பது

புலம்பெயர்ந்தோரை பேச்சுக்கு அழைப்பது ஏன்?

“அரசுடன் இணைந்து செயற்படக்கூடிய புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சுவார்ததை நடத்துவதற்குத்தான் ஜனாதிபதி தயார் என்றால், அந்த அமைப்புக்கள் ஈழத் தமிழர் நலன்சார்ந்து எந்தளவுக்குச் செயற்படுவார்கள் என்ற கேள்வி இருக்கின்றது. சர்வதேசத்தின் அழுத்தம் – ஐ.எம்.எப். போன்றவற்றின் அழுத்தம் காரணமாக இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை அவர் எடுக்கலாம். ஆனால், அவர் எவ்வாறான அமைப்புக்களுடன் பேசப்போகின்றார் என்ற கேள்விதான் தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது.”

இவ்வாறு கூறுகிறார் யாழ். பல்கலைக்கழக அரசியல்துறை உதவி விரிவுரையாளரும், அரசியல் ஆய்வாளருமான ஐ.வி.மகாசேனன். லண்டன் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக் களம் நிகழ்வில் கலந்துகொண்டு தனது கருத்துக்களை வெளியிட்ட போதே இதனை அவர் தெரிவித்தார். அவரது செவ்வியின் முக்கியமான பகுதிகளை ‘இலக்கு’ வாசகர்களுக்கு இந்த வாரம் தருகின்றோம்

கேள்வி:
அனைத்துக் கட்சிகளின் மாநாடு ஒன்றை ஜனாதிபதி நடத்தியிருக்கின்றார். இன்றைய நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இந்த மாநாட்டின் மூலம் ஏதாவது பலனைப் பெறமுடியுமா?

பதில்:
அரசின் தற்போதைய செயற்பாடுகள் தற்காலிகமாக இதனை ஒத்திவைப்பதை இலக்காகக் கொண்டதாகவே தெரிகின்றது. உருவாகியிருக்கும் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டங்கள் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை. இவ்வாறு திடீரென அனைத்துக் கட்சிகளின் மாநாடு கூட்டப்பட்டிருப்பதும் அதனைத்தான் வெளிப்படுத்துகின்றது. அத்துடன் இவ்வாறு மாநாட்டைக் கூட்டுவதன் மூலமாக பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி திட்டமிடுகிறார் என்பது தெரிகின்றது.

கேள்வி:
இந்த மாநாட்டில் உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அதிகாரப் பகிர்வின்றேல் இந்த நெருக்கடிக்குத் தீர்வைக்காண முடியாது என்ற வகையில் உரையாற்றியிருக்கின்றார். அவரது அந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதா?

பதில்:
அவர் சொன்ன கருத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவர் அதனைச் சொல்லியிருக்கும் சந்தர்ப்பமும் – களமும் பொருத்தமானதாகத் தெரியவில்லை. ஒரு பலமான நிலையில் நின்றுகொண்டு ஒரு கருத்தை முன்வைத்தால்தான் அதற்கு வலு இருக்கும். அதனை நாம் இலகுவாக அடைய முடியும்.

ஜனாதிபதியுடனான கூட்டமைப்பின் சந்திப்பு இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் – சர்வகட்சி மாநாட்டில் சென்றாவது எமது கருத்தை முன்வைப்போம் என வலிந்து போய் அவர் இதனைச் சொல்லியிருக்கின்றார் போலத்தான் தெரிகின்றது. பலவீனமான ஒரு நிலையில் இருந்துகொண்டு இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பது உரிய பலனைக் கொடுக்கப்போவதில்லை.

அத்துடன் அரசியல் ஸ்திரமான நிலை இருக்கும் போதுதான் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்கக்கூடியதாக இருக்கும். அரசியல் ஸ்திரமற்ற நிலையில் நாம் எமது பொருளாதாரத்தை சீரமைக்க முடியாது என்பது உண்மை. ஆனால், இதனை வெளிப்படுத்தியவர்கள் சரியான தளத்தில் – சரியான தருணத்தில் அதனை வெளிப்படுதினார்களா என்பதுதான் கேள்வி.

கேள்வி:
பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்துமே இந்த மாநாட்டை புறக்கணித் திருக்கின்றன. அதற்காக அவர்கள் சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ளக் கூடியதா?

பதில்:
பொது ஜன பெரமுன அரசாங்கத்தின் தவறுகளுக்குள் தாமும் போய் மாட்டடிக் கொள்ளக் கூடாது என்ற எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடும், பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் காணப்படும் அரசாங்கத்தை எதிர்ப்பது என்ற வகையிலும்தான் இதனை அவர்கள் புறக்கணித்திருக்கின்றார்கள். இதனைத் தவிர்தது ஒரு இராஜதந்திர ரீதியில் இந்தப் பிரச்சினையை அவர்கள் கையாண்டுள்ளார்களா என்பது கேள்விக் குறிதான்.

ஜக்கிய மக்கள் சக்தியும், ஜே.வி.பி.யும் எதிர்ப்புப் பேரணிகளைத் தனித்தனியாக நடத்துகின்றன. இதன்மூலம் தமது பலத்தை வெளிப்படுத்துவதற்கு அவர்கள் முற்படுகின்றார்களே தவிர, மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வு எதனையும் அவர்கள் முன்வைக்கவில்லை.

தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைக்கான பொறுப்பை தம்மீதும் அரசு சுமத்திவிடலாம் என்பதில் எதிர்க்கட்சிகள் அவதானமாக இருந்துள்ளன எனக்கூறினாலும் – எதையும் எதிர்க்க வேண்டும் என்ற எதிரணி மனோபாவம்தான் அதிகளவுக்கு அங்கு மேலோங்கியிருந்துள்ளது என்பதைத்தான் நான் பார்க்கிறேன்.

கேள்வி:
அரசாங்கம் உடன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துத் தான் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியும், ஜே.வி.பி.யும் போராட்டங்களை முன்னெடுக்கின்றன. அதற்கான வாய்ப்புக்கள் உள்ளதா?

பதில்:
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பொறுத்தவரையில் அவர் இராணுவ – நிர்வாகத்துக்குள் இருந்து இந்தப் பதவிக்கு வந்திருப்பவர். அவ்வாறான ஒருவர் இந்த ஜனநாயகப் போராட்டங்களுக்கு இணங்கி செயற்படுவாரா என்பது கேள்விக்குறி. இலங்கையைப் பொறுத்தவரையில் அதற்கான வாய்ப்புக்கள் மிகவும் பலவீனமான வையாகவே காணப்படுகின்றன.

கேள்வி:
இலங்கையில் விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் விக்ரோரியா நூலாண்ட், ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுக்களின் போது புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்து முக்கியமாக பிரஸ்தாபிக்கப்பட்டது. புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சு நடத்த தான் தயார் என ஜனாதிபதி இதன்போது மீண்டும் கூறியிருக்கின்றார். இதற்கான சாத்தியக்கூறுகள் எந்தளவுக்கு உள்ளன?

பதில்:
கிளாஸ்கோ மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த போதும் இந்தக் கருத்தை ஜனாதிபதி முன்வைத்திருந்தார். புலம்பெயர் அமைப்புக்களுடன் கலந்துரையாடத் தயார் என அவர் அப்போதும் கூறியிருந்தார். ஆனால், இவர்கள் எத்தகைய புலம்பெயர் அமைப்புக்களுடன் கலந்துரையாடத் தயார் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.

பல புலம்பெயர் அமைப்புக்களையும் தனி நபர்களையும் அரசாங்கம் தடை செய்திருக்கின்றது. ஒரு பக்கம் இவ்வாறான அமைப்புக்களைத் தடை செய்து கொண்டு, மறுபக்கத்தில் புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனக் கூறுகின்றார். அப்படியானால் இவர் எவ்வாறான அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவிருக்கின்றார் என்ற கேள்வி உள்ளது.

அரசுடன் இணைந்து செயற்படக்கூடிய புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்குத் தயார் என்றால், அந்த அமைப்புக்கள் ஈழத் தமிழர் நலன் சார்ந்து எந்தளவுக்குச் செயற்படுவார்கள் என்ற கேள்வி இருக்கின்றது.

சர்வதேசத்தின் அழுத்தம் – ஐ.எம்.எப். போன்றவற்றின் அழுத்தம் காரணமாக இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை அவர் எடுக்கலாம். ஆனால், அவர் எவ்வாறான அமைப்புக்களுடன் பேசப் போகின்றார் என்ற கேள்விதான் தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது.

கேள்வி:
புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுக்களை நடத்தவேண்டும் என்ற அழுத்தம் சர்வதேச ரீதியாகக் காணப்படுவதற்கு காரணம் என்ன?

பதில்:
இன்று ஈழத் தமிழர் பிரச்சினையை சர்வதேச ரீதியாகக் கொண்டு செல்வதில் புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பு பிரதானமாகக் காணப்படுகின்றது. தாயகத்தைப் பொறுத்த வரையில் எமது கருத்துக்களை சரியான தளத்தில் வெளிப்படுத்து கின்றோமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், புலம்பெயர் சமூகத்தில் தமது கோரிக்கைகளை – ஈழத் தமிழர் சமூகம் சார்ந்து வலுவாக முன்வைக்கின்றார்கள்.

2012 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஈழத் தமிழர் விவகாரம் முதன்மைப் படுத்தப்படுவதற்குப் பின்னாலும், அது தொடர்ச்சியாக இன்றுவரை விழிப்புடன் பேணுவதிலும் அதனை வலுப்படுத்துவதிலும் புலம்பெயர் சமூகத்தின் பங்கு பிரதானமாக இருந்துள்ளது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. ஆனால், எவ்வாறான தரப்புக்களுடன் ஜனாதிபதி பேச்சுக்களை நடத்த விரும்புகின்றார் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

கேள்வி:
புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் எந்தளவுக்கு உள்ளது?

பதில்:
அதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. கடந்த காலங்களிலும் இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. ஆனால், எந்த அடிப்படையில் எவ்வாறு இவை முன்னெக்கப்படும் என்ற கேள்வி உள்ளது. கடந்த காலங்களில் தமிழர்களுக்கென சில திட்டங்கள் வரும் போது, அவை பன்முகப்படுத்தப்பட்டு வேறு மாவட்டங்களுக்கு நகர்த்தப்பட்டது. இவ்வாறான ஒரு நிலையில் புலம்பெயர் தமிழர்கள் இங்கு முதலீடுகளை மேற்கொள்வார்களாயின் – அவை சில சமயங்களில் ஏனைய மாகாணங்களுக்கு நகர்த்தப்படும் ஆபத்து உள்ளது.

கேள்வி:
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்காக இந்தியா, சீனா ஆகிய நாடுகளிலிருந்து பெருமளவு கடன்களை இலங்கை பெறுவதை காணமுடிகின்றது. இதன் பின் விளைவுகள் எவ்வாறானதாக அமையும்?

பதில்:
இது தற்காலிகமான தீர்வாகத்தான் அமைய முடியும். நாம் எதிர்கொள்வது கடன் சார்ந்த பிரச்சினை. இது ஏற்மதி வருமானத்தில் பெருமளவுக்குத் தங்கியிருப்பது தேயிலை. அதனைவிட உல்லாசப் பயணத்துறை. இந்த இரண்டு வருமானங்களையும் நம்பித்தான் நாம் பெருமளவு கடனை வாங்கியிருக்கிறோம். இந்த கடன்களை நம்பித்தான் அரசாங்கம் போரையும் நடத்தியது. இவ்வாறு பெற்ற கடன்களுக்கு – முதலைக் கட்டமுடியாமல் வட்டியை மட்டும் கட்டிக் கொண்டிருந்த நிலை இருந்தது. கொரோனா வந்த பின்னர் வட்டியையும் கட்ட முடியாத நிலை இருந்தது.

இந்த அந்நியச் செலாவணி சார்ந்த பிரச்சினையை எதிர்கொள்வதற்காக நாடுகளிடம் கடன்பெறுவது என்பது – சில காலத்துக்கு இந்தப் பிரச்சினையை ஒத்திவைப்பதற்கு உதவுமே தவிர இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவப்போவதில்லை. கடனைப் பெற்று கடனைச் செலுத்தவது என்பது பிரச்சினை சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கும்.

Tamil News