தமிழக சட்டசபையில் ஈழத்திற்காக என்ன செய்திருக்கின்றார்கள்?

தமிழக சட்டசபையின் அதிகாரமற்ற தன்மை
தமிழக சட்டசபையில் ஈழத்திற்காக என்ன செய்திருக்கின்றார்கள்?– இராமு. மணிவண்ணன்

தமிழக சட்டசபையில் ஈழத்திற்காக என்ன செய்திருக்கின்றார்கள்?தமிழக சட்டசபையும் ஈழத் தமிழர்களும்  பற்றி சென்னைப் பல்கலைக்கழக ஓய்வு பெற்றஅரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறைத் தலைவர் பேராசிரியர் இராமு. மணிவண்ணன் அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய  செவ்வியின் இறுதிப் பகுதி

இறுதிப் பகுதி

கேள்வி
திராவிட சட்டசபைகள் ஈழத்தமிழர் தாயகத்தைத் தேசியத்தை தன்னாட்சியை  ஏன் அங்கீகரிக்கவில்லை.

பதில்
தந்தை செல்வா காலத்தில் அறப் போராட்டம் நடத்திய போதும், பின்னர் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், அதிகாரப் பகிர்வு களுக்காகவும் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்பட்ட போது, தேசிய இனம் தொடர்பான போராட்டம் நடத்தப்பட்ட போது, தேசிய இனமாக போராட்டம் நடத்தப்பட்ட காலத்தில் தேசிய அடையாளம், தேசிய இறையாண்மை அனைத்துமே 1920 முதல் 1960 வரை தமிழர்களின் வரலாறு தமிழக ஆட்சியாளர்களிடையே மறைக்கப்பட்டது. திராவிடக் கட்சிகள் அப்படி கிடையாது.

1960 களிலிருந்து 1970களில் திராவிடக் கட்சிகள் முழு வீச்சாக ஓங்கிய போதுகூட இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு முழு ஆதரவாக செயற்பட்டது. அது திராவிட முன்னேற்றக் கழகமாக இருக்கட்டும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக இருக்கட்டும், எந்தத் தலைமையானாலும் ஆதரவாகவே செயற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை இரண்டாவது, மூன்றாவது நிலையில் தான் நாங்கள் பார்க்கின்றோம். மத்திய அரசில் ஆட்சியிலிருந்த கட்சிகளின் பார்வை தமிழ்நாட்டைக் குறித்து கிடையாது. இலங்கையை சிங்கள தேசமாகத் தான் பார்த்தார்கள்.  நாம் சிங்கள தேசமாக பார்ப்பது கிடையாது. அந்த நாட்டில் இரண்டு நாடுகளுக்கு மேல் இருக்கின்றது. அங்கு தமிழ்த் தேசியம் மறுக்கப்பட்ட ஒரு தமிழ் தேசிய இனம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதை ஒருபோதும் தமிழகம் மறுத்தது கிடையாது.

கேள்வி
தமிழக சட்டசபையில் ஈழத்திற்காக என்ன செய்திருக்கின்றார்கள்?

பதில்
முக்கியமாக சொல்லப்பட வேண்டியது என்னவென்றால், 1983இல் கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான மிகப் பெரியதொரு இனப்படுகொலையின் போதும், இனக் கலவரம் என்று சொல்வது குறைத்து மதிப்பிடுவதாகும்.  யாழ். நூலகம் எரிக்கப்பட்ட போதும், சட்ட சபையில் உரையாற்றப்பட்டது. கண்டனம் தெரிவிக்கப் பட்டது. அதன் பின்னர் தான் மத்திய அரசில் இந்திரா காந்தி அம்மையாரின் தலைமையிலான கவனத்திற்கு எடுக்கப்பட்டது. இந்திரா காந்தி அம்மையார் தன்னிச்சையாக செயற்படவில்லை.

தமிழக சட்டசபையின் அதிகாரமற்ற தன்மைதொடர்ந்து தமிழக சட்டசபையில் இலங்கைப் பிரச்சினை பேசப்பட்டதும், விவாதிக்கப்பட்ட தற்குமான சரித்திர சான்றுகள் நிறைய இருக்கின்றன. அத்துடன் 1987இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட போது கூட இலங்கையில் தமிழ் மக்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என கோரப் பட்டது. இதில் விடுதலைப் புலிகளை மட்டும் தேசிய இனமாக அங்கீகிக்கப்பட வேண்டும் என்று பேசியதாக நினைக்கக் கூடாது. தமிழகத்தின் தலைமைகள்கூட அதற்கு ஒரு உந்துதலாக இருந்தது. அந்த நேரத்தில்  தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் தலையீடும் இதில் இருந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு தேசிய இனமாக இந்தியாவே அங்கீகரித்த ஒரு காலகட்டத்தில் தமிழகத்தின் தலையீடு இருந்ததால் தான் அது இப்போது ஒரு சரித்திர சான்றாக இருக்கின்றது.  விடுதலைப் புலிகள் பிரத்தியேகமான தலைமை ஏற்றதன் பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அங்கு இந்திய இராணுவம் இலங்கைக்கு சென்று அங்கு தமிழர்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்த பின்னர் மீண்டும் இந்தியாவிற்கு வந்த போது – சென்னைக்கு வந்த போது தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களை வரவேற்க செல்லவில்லை. அது ஒரு சம்பிரதாயம். ஆனால் அவர் அதை செய்யவில்லை.

தமிழக சட்டசபையின் அதிகாரமற்ற தன்மைபிறகு நடந்த சரித்திரம் அது ராஜீவ் காந்தியின் மரணமாகட்டும், பேச்சுவார்த்தைகள், சமாதான உடன்படிக்கைக்கான அமைதிக் காலம் என்று பேசப்பட்ட போதும், அதற்குப் பின்னர் ஏற்பட்ட மிகக் கொடுமையான போரின் போதும் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்று திரண்டு வந்து ஈழத் தமிழர்களுக்காக இன்றைக்கும் குரல் கொடுத்துக் கொண்டும், ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்றும் நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம். 2009இற்குப் பின்னர் இத்தகைய ஒருமித்த குரல் தமிழகத்தில் நிலவுவதும், அரசியல் கட்சிகளின் பால் இருப்பதும், ஒருமித்த குரலாக இயங்குவதும் தமிழகத்தின் மிகப் பெரியதொரு அடையாளம்.

கேள்வி
அரசியல் கட்சிகளுக்கு இந்த குரல் இருக்கின்றதா?

பதில்
அவர்கள் வெளிப்படுத்துவதில் அவர்களின் பங்குகளும், பாங்குகளும் வேறாக இருக்கலாம். இப்பொழுது திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் தீர்வு, சுயநிர்ணயம் வேண்டும் என்று கோருகின்றார்கள்.

அ.இ.அ.தி.முக. ஜெயலலிதா ஆட்சியிலிருந்த போது, இலங்கையில் நடந்தது இனப் படுகொலை என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை வாழ் தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வேண்டும். அதேபோல் இலங்கை அரசாங்கத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்லாக் கட்சிகளும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தன. காங்கிரஸ் கட்சிகூட இதில் அடங்கும். இதுதான் சமீபகால அரசியலில் மிகப் பெரியதொரு நிகழ்ச்சியாகும்.

கேள்வி
ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பான விடயங்களைச் சட்டசபையின் அதிகார வலுவின்மையின் உதாரணமாக பார்க்கலாமா?

பதில்
மக்கள் வலுவிழந்து விடவில்லை. அரசியல் கட்சிகள் வலுவிழந்து விடவில்லை. ஆனால் சட்டத்தில் உள்ள நெளிவு சுழிவுகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றது. அதேபோல் மத்திய அரசாங்கமும் பயன்படுத்தி வருகின்றது. தமிழக சட்ட சபையிலும் ஏழு தமிழர்கள் விடுதலைக்கு எவ்வளவு தூரம் செல்ல வேண்டுமோ அந்த முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் வலுவிழந்து போகவில்லை.

சட்ட கட்டமைப்பு எவ்வாறு செயற்படும் என்பதைவிட அரசியல் கட்டமைப்பு எவ்வாறு இந்த சட்ட கட்டமைப்பில் தலையிடும் என்பதற்கு இந்த ஏழுபேர் விடுதலை மிகப் பெரியதொரு உதாரணமாகும்.

கேள்வி
உலகத் தமிழர்கள் குறித்த சட்டசபையின்  பொறுப்புகள் என்ன?

பதில்
தமிழர்கள் என்பதில் சிறப்பு அம்சம் என்னவெனில், நாம் இலங்கைத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள், மொறீசியஸ் தமிழர்கள், அமெரிக்கத் தமிழர்கள், கனேடியத் தமிழர்கள்  என்று நாம் பிரித்துப் பார்ப்பதில்லை.  நாம் தமிழர்கள் என்று தான் பார்க்கின்றோம். ஆனால் யார் வேறு வேறு தமிழர்களாகப் பார்க்கின்றார்கள் என்பது அவர்களுடைய பார்வை.

தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து நாடுகளிலும் வாழ்கின்ற தமிழர்களை நாம் தமிழர்கள் என்று தான் பார்க்கின்றோம். அவர்களுடைய உரிமைக்காகவும், அவர்களுடைய நலனுக்காவும், தாய்த் தமிழகமாக தமிழகம் எப்போதுமே செயற்படும்.  நான் சொன்ன எல்லாமே சட்ட சபையின் பொறுப்புக்கள் தான். மொழி, இனம், கலாச்சாரம், உரிமை இவற்றிற்காக தமிழக சட்டசபை இப்பொழுதும், எப்பொழுதும் அவர்களின் உரிமைக்காகப் போராடும் என்பது தான் எங்களுடைய நம்பிக்கை. அவை தான் பொறுப்புகளும்கூட.