Tamil News
Home ஆய்வுகள் பொது மன்னிப்பு என்ற நாடகத்தின் பின்னணியில் நடந்தது என்ன?-அகிலன்

பொது மன்னிப்பு என்ற நாடகத்தின் பின்னணியில் நடந்தது என்ன?-அகிலன்

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று சொல்வாா்கள். தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்திலும் அதுதான் நடந்துகொண்டிருக்கின்றது. சா்வதேச, உள்நாட்டு அழுத்தங்கள் அதிகமாக இருந்தாலும், இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், பேரினவாத மேலாதிக்க நிலைப்பாட்டில்தான் இந்த விவகாரத்தைக் கையாள்கின்றது. “பொது மன்னிப்பு” என்ற போா்வையில் அரசாங்கம் நடத்தும் நாடகங்களும் இந்த விவகாரத்தில் நோ்மையுடன் செயற்படுவதற்கு அரசாங்கம் தயாராகவில்லை என்பதைத்தான் வெளிப்படுத்தியிருக்கின்றது.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் அண்மைக்காலத்தில் மீண்டும் பேசு பொருளாக இருக்கின்றது. அரசியல் கைதிகள் குறித்து கவனம் திரும்பி இருப்பதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது காரணம் தீபாவளி தினத்தை முன்னிட்டு எட்டு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு இருக்கின்றார்கள். ஜனாதிபதியினால் “பொது மன்னிப்பு” வழங்கி இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்பட்டது.

அதே வேளையில் மேலும் சில அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த பின்னணியில் கைதிகளின் நிலைமை குறித்து மக்களுடைய கவனம் திரும்பி இருக்கின்றது. அதேவேளையில், மறைக்கப்படும் சில உண்மைகளையும் நாம் வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

சாதாரண கைதிகளுக்கும் அரசியல் கைதிகளுக்கும் முக்கியமான சில வித்தியாசங்கள் இருக்கின்றன. அரசியல் கைதிகள் எனப்படுபவர் அரசியல் நோக்கத்திற்காக அதாவது மக்களுக்காக ஏதாவது செய்யப் போய் அதற்காக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள். ஏனைய கைதிகளை பொறுத்தவரையில் அவர்கள் தங்களுடைய சொந்த நலன் சார்ந்து செய்த குற்றங்களுக்காக சிறையில் இருப்பவர்கள். அந்த வகையில் பார்க்கும்போது அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்று சிங்கள தலைமைகள் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

தமிழர்களைப் பொறுத்தவரையில் 1978 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பயங்கரமாக தடைச் சட்டமும், இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த அவசர கால சட்டமும் தமிழ் இளைஞா்களின் சிறை வாசத்திற்கு வழி வகுத்தன. தமிழ் இளைஞர் என ஒருவரை அடையாளம் காணும் போது அவரை கைது செய்து சிறையில் அடைப்பதும் அதன் பின்னர்தான் அவர் மீது ஏதாவது குற்றங்கள் உள்ளதா என தேடி பார்ப்பதும் அரசாங்கத்தின் வழமையாக இருக்கின்றது. இதன் காரணமாக குற்றச்சாட்டுகள் எதுவுமே இல்லாமல் தமிழ் இளைஞர்கள் பல வருடக் கணக்காக சிறைவாசம் அனுபவிக்கும் நிலைமை காணப்படுகிறது. இதனால்தான் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கப்படுகின்றது.

தீபாவளி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் எட்டு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட சில தினங்களில் மேலும் மூன்று கைகள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட மூன்று கைதிகளுமே 15 வருடங்களுக்கு மேலாக சிறைவாசத்தை அனுபவித்த பின்னர் “நிரபராதிகள்” எனக் காணப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள். அதாவது எந்தவித காரணங்களும் இல்லாமல் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக தமது இளமை காலத்தில் 15 வருடங்களை அவர்கள் சிறையில் வீணாக்கி இருக்கின்றார்கள்.

அதேவேளையில், “பொதுமன்னிப்பு” என்ற பெயரில் விடுதலையான கைதிகள் குறித்த மற்றொரு அதிா்ச்சிதரும் உண்மையும் இப்போது கசிந்திருக்கின்றது.  தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளா் கலாநிதி ஜெஹான் பெரேரா இந்த அதிா்ச்சியான தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையை ஆதாரம் காட்டி வெளியிட்டிருக்கின்றாா்.

“விடுதலை செய்யப்பட்ட அந்த எட்டு கைதிகளில் நால்வர் நீதி மன்றம் வழங்கிய தண்டனையையும்விட கூடுதல் காலம் சிறை வாசத்தை அனுபவித்திருக்கின்றனர். மூன்று கைதிகளுக்கு முப்பது வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் இருபத்தியிரண்டு வருடகாலம் சிறையில் இருந்து விட்டார்கள். இன்னொரு கைதிக்கு பதினொரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பதின்நான்கு வருடங்கள் சிறை வாசம் அனுபவித்துவிட்டார். பத்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதி பதின்நான்கு வருடங்கள் சிறையில் இருந்தார். ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இரு கைதிகள் பதின்நான்கு வருடங்கள் சிறைக்குள் இருந்துவிட்டாரகள்.”

இதுதான் ஜெஹான் பெரேரா வெளியிட்ட அதிா்ச்சித் தகவல்.  அதாவது, இந்தக் கைதிகள் எப்போதோ விடுவிக்கப்பட்டிருக்க வேண்டியவா்கள். இப்போது, ”பொது மன்னிப்பு” என்ற பெயரிலான நாடகத்துக்கு இவா்களை இலங்கை அரசாங்கம் பயன்படுத்தியிருக்கின்றது. அதாவது தமிழ் அரசியல் கைதிகள் சாா்ந்து தாம் நல்லெண்ணத்துடன் செயற்படுவதாக சா்வதேசத்துக்குக் காட்டிக்கொள்வதற்கு இதனை அரசாங்கம் பயன்படுத்தியிருக்கின்றது.

2009 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த உடனடியாகவே நல்லிணக்கத்தின் அடிப்படையில் அரசியல் கைதிகளை அனைவரும் விடுதலை செய்யப்பட்டு இருக்க வேண்டும். எந்த ஒரு நாட்டிலும் இவ்வாறு ஒரு போர் முடிவுக்கு வரும்போது நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்கான முதலாவது கட்ட நகர்வாக அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழமை. இலங்கை அரசாங்கம் சிங்கள பௌத்த மேலாதிக்க நிலைப்பாட்டில் இருந்ததும் தமிழ் மக்களை அடக்கி ஆழ முனைந்தமையும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமைக்கு காரணமாக இருந்திருக்கலாம்.

தமது விடுதலைக்கான கோரிக்கையை முன்வைத்து தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டங்கள் உட்பட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்திருக்கின்றார்கள். தமிழ் அரசியல் கட்சிகளும் மனித உரிமைகள் அமைப்புகளும் கூட அரசியல் கைதிகளில் விடுதலைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்திருக்கின்றன.

இதுவரையில், இது தொடர்பில் அக்கறை செலுத்தாத அரசாங்கம் இப்போது எட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக நாடகமாடுவதற்கு சர்வதேச ரீதியாக உருவாகியிருக்கும் அழுத்தங்களும் காரணமாக இருக்கின்றது. பாரிய பொருளாதார நெருக்கடிகள் சிக்கி உள்ள அரசாங்கம், அதிலிருந்து மீள்வதற்கு சர்வதேச உதவிகளை தான் பெரும் அளவுக்கு எதிர்பார்த்து இருக்கின்றது. சர்வதேச உதவிகளை எதிர்பார்க்கும் நிலைமையில் உள்நாட்டில் அமைதியான ஒரு நிலை இருக்கிறது என்பதையும், ஸ்திரமான அரசாங்கம் ஒன்று ஆட்சியில் உள்ளது என்பதையும் வெளிப்படுத்த வேண்டிய தேவை ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கின்றது. இந்தப் பின்னணியில் தான் அரசியல் கைதிகளை ”பொது மன்னிப்பு” என்ற பெயரில் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை அரசாங்கம் எடுத்தது.

இதனை ஒரு அரசியல் தீர்மானமாக எடுத்து சிறையில் உள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் அரசாங்க விடுதலை செய்திருக்க முடியும். தற்போதைய நிலைமையில் இன்னும் 35 அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதிகளில் சிலரை பொங்கல் தினத்தில் விடுதலை செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்திருக்கின்றார். ஆனால் இதன் போது கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்பது உறுதியானது அல்ல. ஒரே தடவையில் அவா்களை விடுதலை செய்யாமல் கட்டம் கட்டமாக விடுதலை செய்வதுதான் அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக பேசும் எந்த ஒரு கட்சியும் இந்த அரசியல் கைதிகளில் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான செயல்பாடுகளின் முன்னெடுக்கவில்லை. போர் முடிவடைந்த பின்னரும் அவர்கள் தொடர்ந்தும் சிறைகளில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தமைக்கு அதுவும் ஒரு காரணம்.

தற்போதைய நிலையில் அரசாங்கம் அரசியல் தீர்மானம் ஒன்றை எடுத்து அனைத்து அரசியல் கைதிகளையும் ஒரே அடியாக விடுதலை செய்வதற்கான அழுத்தத்தை தமிழ் கட்சிகள் கொடுக்க முடியும். இருந்த போதிலும் தலைமைத்துவ போட்டிகளாலும் உள்கட்சி அரசியலிலும் மூழ்கி போயிருக்கும் தமிழ் கட்சிகள் இந்த விடயம் தொடர்பில் போதிய அக்கறை செலுத்தவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது.

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாக ஜெனிவாவில் வாக்குறுதி அளித்த அரசாங்கம் அது தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதனையும் இதுவரை முன்வைக்கவில்லை. அது வெற்று வாக்குறுதியாக மட்டுமே இருக்கின்றது. இது தொடர்பில் தமிழ் தேசியக் கட்சிகளும் போதிய அவதானம் செலுத்தாமல் இருப்பது தமிழ் மக்களை விசனம் கொள்ள வைக்கின்றது. தற்போது, அரசாங்கம் எதிா்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சாதகமாகப் பயன்படுத்தி அனைத்து அரசியல் கைதிகளையும் ஒரே தடவையில் விடுதலை செய்வதற்கான அழுத்தத்தை தமிழ்க் கட்சிகளால் கொடுக்க முடியும். அதனை அவா்கள் செய்வாா்களா?

Exit mobile version