Tamil News
Home செய்திகள் ஒருவருட உக்ரைன் போர் சாதித்தது என்ன? வேல்ஸ் இல் இருந்து அருஸ்

ஒருவருட உக்ரைன் போர் சாதித்தது என்ன? வேல்ஸ் இல் இருந்து அருஸ்

உக்ரைன் மீதான ரஸ்யாவின் படை நடவடிக்கை ஆரம்பித்து கடந்த வெள்ளிக்கிழமையுடன் (24) ஒரு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. முதலில் உக்ரைனுக்கும் ரஸ்யாவுக்குமான மோதல் என நம்பப்பட்ட போர் நேட்டோவுக்கும் ரஸ்யாவுக்குமான போர் என உலகம் பின்னர் மெல்ல மெல்ல தெரிந்து கொண்டது.

உக்ரைனில் தமது ஆயுதங்களை குவித்து ரஸ்யாவின் படை பலத்தை அழித்துவிடுவது ஒருபுறம் இருக்க உலக நாடுகளில் ரஸ்யா மீதான தடைகளை கொண்டுவந்து அதன் பொருளாதாரத்தை முடக்குவதனையும் மேற்குலகம் தீவிரமாக செய்தது. தற்போது இந்த பூமிப்பந்தில் உள்ள நாடுகளில் அதிக பொருளாதார தடைகளை கொண்ட நாடாக ரஸ்யா உள்ளது.

 முதலில் சிறு ஆயுதங்களை வழங்குவது என தீர்மானித்த மேற்குலகம் அதன் பின்னர் உக்கிரைனின் நிலை அறிந்து அதனை தக்கவைப்பதற்காக 150 கி.மீ தூரவீச்சுக் கொண்ட ஏவுகணைகள் மற்றும் டாங்கிகளை கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளதுடன், ரஸ்யாவின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

எனவே தான் 2010 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட அணுவாயுதக் குறைப்பு உடன்பாட்டில் இருந்தும் ரஸ்யா வெளியேறியுள்ளது.

களமுனையை பொறுத்தவரையில் ரஸ்யா தனது படை நடவடிக்கையின் நோக்கங்களில் ஒன்றான டொன்பாஸ் பிரதேசத்தை கைப்பற்றி அதனை தன்னுடன் இணைந்துள்ளது. உக்ரைனின் ஆயுதங்களை களைவது என்ற அதன் நோக்கத்திலும் கணிசமான தூரம் முன்நகர்ந்துள்ளதாகவே காணப்படுகின்றது. அதாவது உக்ரைனின் கடற்படை முற்றாக அழிவடைந்துள்ளது.

போர் ஆரம்பிக்கும்போது 297 தாக்குதல் விமானங்களை கொண்ட உலகின் வான்படை பலத்தில் 31 ஆவதாக விளங்கிய உக்ரைனிடம் தற்போது விமானங்கள் இல்லை போலந்து உட்பட பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ரஸ்யா தயாரிப்பான மிக்-29 மற்றும் எஸ்யூ-24 போன்ற விமானங்களை பகுதிகளாக பிரித்து வழங்கியபோதும் அவைக்கு என்ன நடந்தது என்பதும் யாருக்கும் தெரியவில்லை.

மேற்குலக நாடுகளிடம் விமானங்களை தருமாறு மன்றாடுகின்றது. ஆனால் ரஸ்ய தயாரிப்பு விமானங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தமது விமானங்களை வழங்கி அவை போர்க்களத்தில் வீழ்ந்தப்படுமானால் மேற்குலகத்தின் விம்பம் தகர்ந்துவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு.

போர் ஆரம்பித்தபோது 700 இற்கு மேற்பட்ட டாங்கிகள் மற்றும் பல ஆயிரம் கவசவாகனங்களை கொண்ட ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய படையினருக்கு கடந்த ஒரு வருடமாக போலந்தின் ஊடாக அண்டைய மேற்குலக சார்பு நாடுகள் 440 டாங்கிகளையும், 1,510 கவசவாகனங்களையும் வழங்கியபோதும் அவற்றிற்கு என்ன நடந்தது என்பதும் தெரியாது. ஏனெனில் தற்போது லெப்பார்ட் வகை டாங்கிகள் வேண்டும் இல்லை தோல்வியை தழுவிவிடுவோம் என சொல்கின்றது உக்ரைன்.

நிதி உதவிகளை பொறுத்தவரையில் ஆயுத உதவியாக அமெரிக்கா 32 பில்லியன் டொலர்களை இதுவரையில் வழங்கியுள்ளது. ஏனைய நாடுகள் வழங்கிய உதவிகளையும் பார்த்தால் 115 பில்லியன் டொலர்கள். இலங்கையின் ஒருவருட வரவுசெலவுத்திட்ட தொகையை விட  அதிகம்.

உக்ரைனிடம் இருந்த பல நூறு ஆட்டிலறி பிரங்கிகள் மற்றும் வான் எதிர்ப்பு ஏவுகணைகளை விட மேற்குலகம் 1,170 வான் எதிர்ப்பு ஏவுகணைகளையும்இ 655 ஆட்டிலறி பிரங்கிகளையும் வழங்கியுள்ளதுடன் 2 மில்லியன் எறிகணைகளையும் வழங்கியுள்ளன. ஆனாலும் அவர்களின் எறிகணைகள் இன்னும் சில மாதங்களுக்கே போதுமானது என்கிறது உக்ரைன். மேற்குலகத்திடம் மேலும் வழங்குவதற்கு ஆயுதங்கள் இல்லை. அவர்களின் உற்பத்தி வேகத்தை விட உக்ரைன் படையினர் பயன்படுத்தும் வேகம் அதிகமாம்.

எறிகணைகளை குறிபார்த்து வீசுமாறு கூறுகின்றது பிரித்தானியா, இஸ்ரேலின் கையிருப்பில் இருக்கும் 250,000 எறிகணைகளை வாங்க முற்பட்டுள்ளது அமெரிக்கா. அதாவது நேட்டோ படையினர் தமது ஆயுதங்களை இழந்து வருகின்றதாகவே புலப்படுகின்றது. எனவே தான் இந்த சமரை ரஸ்யா விரைவில் முடிக்க விரும்பவில்லை. உக்ரைனுக்கு செல்லும் மேற்குலக தலைவர்களையும் அது அனுமதிக்கின்றது. செலன்ஸ்கிக்கும் உயிர் உத்தரவாதம் வழங்கியுள்ளதாக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை பொறுத்தவரையில் மேற்குலகம் மேற்கொண்ட தடைகள் ரஸ்யாவை பாதித்தாலும் அது இவர்கள் எதிர்பார்த்தது போல பெரிதான பாதிப்புக்களை ஏற்படுத்தவில்லை.

ரஸ்யாவின் பொருளாதாரம் 2022 ஆம் ஆண்டு 6 விகிதம் வீழ்ச்சி காணும் என அனைத்துலக நாணய நிதியம் கடந்த ஜூலை மாதம் தெரிவித்தபோதும் அது 2.1 விகிதமே சுருங்கியுள்ளது. மேலும் இந்த வருடம் அது வளர்ச்சி காணும் எனவும், 2024 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை விட ரஸ்யாவின் வளர்ச்சி அதிகமாகும் எனவும் நாயணநிதியம் தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.

மாறாக ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்கள் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். இந்த போரினால் ஜேர்மனிக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு 200 பில்லியன் டொலர்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளை இங்கு கூறத்தேவையில்லை. பிரித்தானியாவின் பொருளாதாரம் பூச்சியத்திற்கு கீழ் சென்றுள்ளது.

பணவீக்கம், உணவுத்தட்டுப்பாடு என உலகில் 25 இற்கு மேற்பட்ட நாடுகள் முற்றான பொருளாதார வீழ்ச்சியையும் ஏனைய நாடுகள் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் நிலையை இந்த போர் கடந்த 12 மாதங்களில் ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ரஸ்யாவின் மலிவான எரிபொருளும், சீனாவின் உற்பத்தி பொருட்களும் இன்றி ஐரோப்பிய நாடுகள் தப்பி பிழைப்பது கடினமானது என்பதை அந்த மக்கள் மெல்ல மெல்ல உணரத் தலைப்பட்டுள்ளனர். எனவே தான் பல ஐரோப்பிய நாடுகளில் மக்கள் போராட்டங்கள் முனைப்பு பெறுகின்றன. பாடசாலைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் முடக்கப்படுகின்றன. உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

படைத்துறை இழப்புக்களை பொறுத்தவரையில் ரஸ்யா ஏறத்தாள 18,000 படையினரையும் உக்ரைன் 250000 தொடக்கம் 300000 படையினரையும் இழந்துள்ளனர். ரஸ்யாவின் ஆயுத இழப்புக்கள் கணிசமான போதும் அவர்கள் அதனை இலகுவாக மாற்றீடு செய்துவிடுவதும் போரில் உக்கிரைனினால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாதுள்ளது.

மேலும் நவீன ஆளில்லாத தாக்குதல் விமானங்களின் பயன்பாடும் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்ட களமுனையாக உக்ரைன் களமுனையுள்ளது. ரஸ்யா தனது மொஸ்கோவா என்ற தாக்குதல் கப்பலையும் இந்த சமரில் இழந்துள்ளதுடன், இதுவரையில் எஸ்-400 போன்ற அதி நவீன ஏவுகணைகளையும், கைப்பர் சொனிக் ஏவுகணைகளையும் ஒரு தடவை தான் பரீட்சிர்த்து பார்த்துள்ளது.

அதாவது அவர்கள் மிகப்பெரும் எதிரிக்காக பல ஆயுதங்களை சேமித்து வைத்துள்ளனர் என்பதற்கு அப்பால் அதி நவீன ஆயுதங்களையும், அணுக்குண்டுகளையும் அதிகம் தயாரிக்கப் போகின்றனர் என்பதையே ஆணுவாயுதக் குறைப்பு உடன்பாட்டில் இருந்து வெளியேறிய சம்பவம் காண்பிக்கின்றது.

அதாவது ஒரு வருடம் நிறைவடைந்தபோதும் இந்த போர் இன்னமும் ஒரு திருப்புமுனையை அடையவில்லை என்பது தான் உண்மை. அதனை அடையும்போது உலகம் ஒரு மூன்றாவது உலகப்போரினுள் தான்னை அறியாமலே சென்றிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

எனவே தான் ஒரு வருட நிறைவில் போரை நிறைவுக்கு கொண்டுவர சீனா ஒரு முயற்சியை எடுத்துள்ளது. ஆனால் எதிர்பார்த்தது போல சீனாவை நம்ப முடியாது என நேட்டோ அதனை நிராகரித்துள்ளது.

அதேசமயம் 500 தாய்வான் படையினருக்கு நவீன போர் பயிற்சிகளை வழங்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. பிளட்டூன் மற்றும் கொம்பனி அளவுடைய படையினருக்கு இதுவரையில் பயிற்சிகளை வழங்கிய அமெரிக்கா தற்போது பற்றலியன் அளவுள்ள படையினருக்கு பயிற்சிகளை வழங்குவது என்பது உக்ரைன் போர் உலகில் விஸ்தரிக்கப்போகின்றது என்பதற்கான அறிகுறியே.

மேலும் ஈரானின் அணுவாயுத திட்டம் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போரின் ஒரு வருட நிறைவுக்கு அண்மையாக அமெரிக்க அதிபரும், ரஸ்ய அதிபரும் கடுமையான எச்சரிக்கைகளை ஒருவருக்கு ஒருவர் விடுத்துள்ளதும் இந்த போர் விரைவில் முடியும் என்ற நம்பிக்கைகளை சிதறடித்தள்ளது. ஆனால் அதனால் தற்போது உலகில் எற்பட்டுள்ள வறுமை, பசி, பட்டினி மற்றும் பொருளாதார வீழ்ச்சிகள் என்பன மேலும் அதிகமாகும் என்பதுடன் பல நூறு மில்லியன் மக்கள் மிகப்பெரும் துன்பத்தையும் அனுபவிக்கப்போகின்றனர் என்பது தான் யதார்த்தம்.

Exit mobile version