Tamil News
Home செய்திகள் தமிழர்களின் அரசியல் நலன் சார்ந்து முன்வைத்த கோரிக்கைகள் என்ன? – அருட்தந்தை மா.சத்திவேல்

தமிழர்களின் அரசியல் நலன் சார்ந்து முன்வைத்த கோரிக்கைகள் என்ன? – அருட்தந்தை மா.சத்திவேல்

வாக்களித்த தமிழ் தரப்பினர் தமிழர்களின் அரசியல் நலன் சார்ந்து இவர்களிடம் எதிர்பார்த்து முன்வைத்த கோரிக்கைகள் என்ன? என்பது தொடர்பாக தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (21) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

மக்கள் எழுச்சியால் பதவி விலகிய கோத்தபாயவின் எஞ்சிய பதவிக்காலத்தை நிறைவு செய்ய நாடாளுமன்றில் நடத்தப்பட்ட வாக்களிப்பில் தற்காலிக ஜனாதிபதியாக பணியாற்றிய ரணில் விக்ரமசிங்க  நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பல நபர்களும், பல கொடுக்கல் வாங்கல்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

எது எவ்வாறு இருப்பினும் வடகிழக்கு மற்றும் மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெற்றியின் பங்குதாரர்களாக உள்ளனர். அதேபோன்று டலஷ் அழக பெரும அவர்களுக்கும் வாக்களித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு வாக்களித்த தமிழ் தரப்பினர் தமிழர்களின் அரசியல் நலன் சார்ந்து இவர்களிடம் எதிர்பார்த்து முன்வைத்த கோரிக்கைகள் என்ன? என்பது தொடர்பாக தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதியாவதற்கு போட்டியாளர்களாக முன் நின்ற எவருமே தமிழ் மக்களை பொறுத்தவரையில் நம்பிக்கை அற்றவர்கள். இதில் அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு எந்த ஒரு தமிழ் உறுப்பினர்களும் வாக்களிக்கவில்லை. ஆனால் ஏனைய இருவருக்கும் வாக்களித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நின்று அவர்களுக்கு வாக்களித்த நோக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். அது ஜனநாயகம். இவர்கள் பதவி சுகத்திற்காக வாக்களித்திருக்கமாட்டார்கள் என நினைக்கிறோம்.

பாரிய மக்கள் எழுச்சி காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. எமது தமிழ் உறுப்பினர்களும் வெற்றியாளரிடம் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தி மக்கள் அலையை உருவாக்கினால் மட்டுமே கோரிக்கையை அடைவதற்கான வழியை தமிழர் தாயகத்திலும் புலம் பெயர் சமூகத்திடம் உருவாக்க வேண்டும். இல்லையெனில் இவர்களுக்கு எதிரான தீர்ப்பை மக்கள் ஜனநாயக ரீதியில் வழங்குவர்.

புதிய ஜனாதிபதி மக்கள் எழுச்சிக்கு காரணமானவர்களை சமாளிக்க வேண்டும். அவர்களின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும். அவர்களின் ஆறு அம்ச கோரிக்கைகளில் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் உள்ளடக்கப்படவில்லை. அதனை அவர்களால் உள்ளடக்கவும் முடியாது. அடுத்ததாக பொருளாதார வீழ்ச்சி காரணமாக வீதிக்கு தள்ளப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் மற்றும் சலுகைகள் வழங்க தேவையான நடவடிக்கைகளை அவசரமாக முன்னெடுக்க வேண்டும்.

இதற்கு மத்தியில் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொண்டு ராஜபக்ச தரப்பினரோடு நல்லிணக்க அரசியலையும் முன்னெடுக்க வேண்டும். அத்தோடு தனது கட்சியையும் மீளுருவாக்கம் செய்ய வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் தமக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் எழாதிருக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவற்றிற்கு முன்னால் நமது வெற்றிக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தால் அதனை புதைப்பதற்கும் புதிய ஜனாதிபதி தயங்க மாட்டார்.

ஆதலால் தமிழ் தரப்பினர் ரணிலிடம் முன்வைத்த கோரிக்கைகள் அபிலாசைகள் தொடர்பில் மக்களை தெளிவு படுத்தினால் அதை நிறை வேற்றப்படாத சந்தர்ப்பத்தில் சர்வதேசத்துக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பமாக அமையும் தெற்கின் அரசியல்வாதிகள் எந்த சந்தர்ப்பத்திலும் தமிழர்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள் என உணர்வதற்கு. இதனை செய்யத்தவறின் சலுகைகளுக்கும் பதவி சுகத்திற்கும் பலியானவர்கள் என அடையாளப்படுத்தி மக்கள் தீர்ப்பு வழங்க காலமெடுக்காது” என்றுள்ளது.

Exit mobile version