வலுவிழக்கும் தொழிற்சங்கங்கள் – துரைசாமி நடராஜா

வலுவிழக்கும் தொழிற்சங்கங்கள்
வலுவிழக்கும் தொழிற்சங்கங்கள் – துரைசாமி நடராஜா

தொழிலாளர்களுக்கு பல்வேறு விடயங்களிலும் வழிகாட்டியாக தொழிற் சங்கங்கள் இருந்து வருகின்றன. இதனால் இம்மக்கள் நன்மைகள் பலவற்றையும் பெற்றுக் கொள்கின்றார்கள். இந்நிலையில் மலையகத் தொழிற்சங்கங்களின் போக்குகள் மற்றும் செயற்பாடுகள் என்பன குறித்து நோக்குகையில், இத்தொழிற்சங்கங்கள் ஒரு அதிருப்தியான போக்கினையே வெளிப்படுத்தி வருகின்றன. தொழிலாளர்கள் தொழிற் சங்கங்களின் மீது நம்பகத் தன்மை இழந்துள்ள நிலையில், இத் தொழிற் சங்கங்களின் எதிர்காலம் தொடர்பில் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகின்றன. தொழிற் சங்கங்களின் வலுவிழக்கும் நிலை குறித்து முக்கியஸ்தர்கள் கருத்துக்கள் பலவற்றையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொழிற் சங்கக் கலாசாரம்

வலுவிழக்கும் தொழிற்சங்கங்கள்தொழிற் சங்கக் கலாசாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் மிக்க ஒரு விடயமாகும். பாமரர்களாகிய தொழிலாளர் சமூகத்தின் கலங்கரை விளக்கமாக தொழிற் சங்கங்கள் இருந்து வருகின்றன. இருளில் இருந்து அவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் பெரும் பொறுப்பு தொழிற் சங்கங்களைச் சார்ந்ததாகும். இந்த வகையில் தொழிற் சங்கங்களின் பணி மகத்தானதாகும். இந்நிலையில் இலங்கையின் மலையகத் தமிழர், மலையக தொழிற்சங்கங்கள் குறித்து நோக்குகின்ற போது, இத்தொழிற் சங்கங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையிலான பிணைப்பு மிகவும் நெருக்கமானதாகும்.

இலங்கை மலையகம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கை வந்த மலையகத் தமிழர் பரம்பரையினர் பல்வேறு நெருக்கீடுகளுக்கும் முகம் கொடுக்க நேர்ந்தது. தமிழகத்தில்  இம்மக்கள் எதிர் கொண்ட வறுமை உள்ளிட்ட காரணிகள் பலவற்றால் தமிழ்த் தொழிலாளர்கள் இங்கு உந்தித் தள்ளப் பட்டார்கள். எனினும் அவர்கள் எதிர்பார்த்த வாழ்க்கை இங்கு கிடைக்கவில்லை. பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டி இருந்த கோவணமும் களவாடப்பட்ட நிலையினையே  இவர்கள் இங்கு எதிர்கொள்ள வேண்டி நேர்ந்தது. சுரண்டல்களால் இம்மக்கள் கூனிக் குறுகிப் போயிருந்தார்கள்.

இம்மக்களை வெளியுலகம் தெரியாத கிணற்றுத் தவளைகளாக வழிநடத்துவதில் தோட்ட நிர்வாகங்கள் வெற்றி கண்டிருந்தன. வைத்திய வசதி, பிரசவ வசதி எனச்சில வசதிகள் தோட்ட நிர்வாகத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட போதிலும் இவை கீழ்மட்ட நிலையிலேயே காணப்பட்டன. தொழிலாளர்களின் உரிமைகள் பலவும் முடக்கப்பட்ட நிலையில் இருந்து வந்ததுடன் தட்டிக் கேட்போர் கடுமையாக தண்டிக்கப்பட வரலாறுகளும் அதிகமாகவே உள்ளன. தண்டனைகளின் உக்கிரம் காரணமாக சிலர் உயிரிழந்த பரிதாப நிகழ்வுகளும் இல்லாமலில்லை. இந்நிலையில் தமக்கெதிரான கொடுமைகளை தட்டிக் கேட்டும் பலன் கிடைக்கப் போவதில்லை என்ற நோக்கிலும் தண்டனைக்குப் பயந்தும் பலர் மௌனமாகிப் போயினர்.

வலுவிழக்கும் தொழிற்சங்கங்கள்தொழிலாளர்களை அடக்கியொடுக்கி இலாப மீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்த நிர்வாகத்தினர் தோட்டத்திற்குள் தொழிற்சங்கக் கலாசாரம் நுழைந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தனர். தொழிற் சங்கங்கள் தோட்டங்களில் உள்நுழைந்தால் அவர்கள் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பார்கள். இதனால் தொழிலாளர்கள் உரிமைகளுக்காக போராடும் நிலைமை உருவாகும். இது நிர்வாகத்துக்கு பல்வேறு இடையூறுகளையும் ஏற்படுத்தும் என்று நிர்வாகங்கள் அச்சம் கொண்டிருந்தன.இதனால் நகர்ப்புறங்களுக்குக் கூட தொழிலாளர்களைச் செல்ல விடாது தடுத்த கசப்பான வரலாறுகளும் காணப்படுவதாக பேராசிரியர் சோ.சந்திரசேகரன் கவலைப்பட்டுக் கொள்கின்றார்.

எனவே மிகுந்த சிரமங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியிலேயே தொழிற்சங்கக் கலாசாரம் தோட்டத்தில் உள்நுழைந்தது. இப்பணியில் கோ.நடேசையர் முன்னின்று உழைத்த நிலையில் தொழிற்சங்க வரலாற்றில் இவர் அழியாத இடம் பிடித்துள்ளமையும் குறிப்பிடத் தக்கதாகும். இவரது பணி பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதேயாகும்.

மலையகத் தொழிற்சங்கங்கள் போக்குகள்

தோட்டத்திற்குள் தொழிற் சங்கங்கள் உள்நுழைந்த நிலையில் அது தொழிலாளர்களுக்கு ஒரு ஆறுதல் தரும் விடயமாக இருந்தது. தொழிலாளர்களின் இன்ப துன்பங்களில் தொழிற் சங்கங்கள் முக்கிய இடம்பிடித்தன. தொழிலாளர்களின் காவலராக, காதலராக தொழிற்சங்கங்கள் விளங்கின. பொதுக்கல்வி, தொழிற்சங்கக் கல்வி, சுகாதாரம், தொழில்வாய்ப்பு, இளைஞர் அபிவிருத்தி, விளையாட்டு, பொருளாதார அபிவிருத்தி என்று தொழிலாளர்களின் நன்மைக்காக பல்துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தொழிற் சங்கங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டன. இவற்றுடன் முக்கியமாக தொழிலாளர்களுக்கு தொழில் ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது அவற்றை தீர்த்து வைப்பதில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டு உழைத்தன.

இத்தகைய தொழில் ரீதியான பிரச்சனைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு தோட்ட நிர்வாகத்துடன் சுமுகமான பேச்சுவார்த்தை, வேலை நிறுத்தம், மெதுவாக பணிபுரிதல், சத்தியாக்கிரகப் போராட்டம் போன்ற வழிகள் பலவற்றையும் தொழிற்சங்கங்கள் கையாண்டன. இதனால் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்த பல தொழிலாளர்கள் மீளவும் பணிக்கு திரும்பும் நிலைமை ஏற்பட்டது.

அத்தோடு இத்தகைய தொழிலாளர்கள் பணி நீக்கம் இடம்பெற்ற காலத்திற்குரிய நட்ட ஈட்டுப் பணத்தினையும் பெற்றுக் கொண்டனர். இதுவெல்லாம் தொழிற் சங்கங்களின் மிக முக்கிய சாதனைகளாக அமைந்தன. தோட்டத் தொழிலாளர் சமூகம் வறுமை மிக்க சமூகம் என்பதால் நீண்ட கால போராட்டங்களில் அவர்களை ஈடுபடுத்துவது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்று கருதிய தொழிற் சங்கத் தலைவர்கள் அகிம்சை வழியில் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முயற்சித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தொழிலாளர்கள் தொழிற் சங்கங்களுக்கு மாதாந்தம் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தினை வழங்குகின்றனர். இதனைச் சந்தாப்பணம் என்று அழைக்கும் நிலையில் அது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு பேருதவியளித்து வருகின்றது. சமகாலத்திலும் இந்நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் அதிகமிருப்பினும் இன்று தொழிற் சங்கங்கள் எந்தளவுக்கு தொழிலாளர்கள் சார்ந்த நடவடிக்கைகளை மேற் கொள்கின்றன என்பது கேள்விக் குறியாக உள்ளது.

தொழிலாளர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் அதிகமுள்ளன. உழைப்புக் கேற்ற ஊதியத்தினைப் பெற்றுக் கொள்வதில் பல இழுபறிகள் உள்ளன.ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப் பட்டுள்ளதாக தொழிற் சங்கங்கள் மார்தட்டிக் கொள்கின்ற போதும் தோட்டங்களில் வேலை நாட்களின் குறைவானது பாதக விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றது.

மலையக கல்வியின் வளர்ச்சிப் போக்கு

வலுவிழக்கும் தொழிற்சங்கங்கள்மலையக கல்வியின் வளர்ச்சிப் போக்கு, மலையக சிறார்களின் கல்வி, மலையக சமூகமும் ஆரம்பக் கல்வியின் நிலையும், சுகாதாரம், மருத்துவம் என்று பல்வேறு துறைகளிலும் உரிய அபிவிருத்தி இலக்குகளை எட்டாத நிலையில் பின்னடைவான வெளிப்பாடுகளே இருந்து வருகின்றன. இவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க உரிய அழுத்தங்களை தொழிற் சங்கங்கள் வழங்க வேண்டியுள்ளது. எனினும் தொழிற்சங்கங்கள் இவ்விடயத்தில் எந்தளவுக்கு அக்கறை செலுத்துகின்றன என்பது கேள்விக் குறியாக உள்ளது. மலையக கல்வி மறுமலர்ச்சிக்கு

தொழிற்சங்கங்களை ஏணியாக வைத்துக் கொண்டு தொழிற் சங்கவாதிகள் அரசியல் பிரவேசத்தினை மேற்கொள்கின்றனர். அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதில் இவர்கள் அதீத அக்கறை காட்டுவதாகவும், இதற்கென இவர்கள் எதனையும் செய்யத் துணிவதாகவும், அப்பாவித் தொழிலாளர்களை பிரித்தாளும் நடவடிக்கைகள் இதனால் இடம்பெறுவதாகவும் ஒரு விமர்சனம் இருந்து வருகின்றது. இந்த விமர்சனத்தில் நம்பகத்தன்மை உள்ளதாகவே அறிந்து கொள்ள முடிகின்றது.

தொழிற் சங்கவாதிகள் அரசியல் வாதிகளாக மாற்றம் பெறும் நிலையில் தனது வாரிசுகளை அரசியலில் உள்நுழைப்பதிலேயே சிலர் அதிக அக்கறை செலுத்துகின்றனர். சுயநலம் மிக்க இத்தகைய செயற்பாடுகள் காரணமாக மக்களின் நலன்கள் பின் தள்ளப்பட்டு வருகின்றன. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களுக்கு அற்ப சலுகைகளை வழங்கி அவர்களை திருப்திப் படுத்துவதில் குறியாக உள்ளன.ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை தொழிற் சங்கங்களுக்கு புதிய அங்கத்தினர்களை சேர்த்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் தொழிலாளர்களுக்கு அற்ப சலுகைகளை வழங்கி அவர்களை தம்பக்கமாக இணைத்துக் கொள்ள தொழிற் சங்கங்கள் முற்படுகின்றனவே தவிர இதய சுத்தியுடன் சேவையாற்றுவதாக இல்லை.

தொழிலாளர்கள் தினமாகிய மே தின நாட்களிலும் இதுவே இடம் பெறுகின்றது. இத்தினத்தில்   தொழிலாளர்களை மயக்க நிலையில் வைத்திருக்க முனையும் தொழிற் சங்கங்கள் மேடையில் பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்குகின்றன. எனினும் இவ்வாக்குறுதிகள் செயல்வடிவம் பெறுவதாக இல்லை. மேதினத்தில் வழங்கப்படும் வாக்குறுதிகள் அடுத்த மேதினத்திலேயே தூசு தட்டிப் பார்க்கப் படுகின்றன.

இது எவ்வித சாதக விளைவுகளையும் ஏற்படுத்த மாட்டாது. தொழிலாளர்களின் உரிமைகளுக்கு இதய சுத்தியுடனும், அர்ப்பணிப்புடனும் தொழிற் சங்கங்கள் பணியாற்ற முன்வர வேண்டும். இந்நிலையானது தொழிற் சங்கங்களின் இருப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள உந்துசக்தியாக அமைவதோடு, தொழிற் சங்கங்கள் மீதான தொழிலாளர்களின் நம்பகத் தன்மையையும் அதிகரிக்கச் செய்வதாக அமையும். இல்லையேல் எதிர்காலத்தில் தொழிற் சங்கங்கள் கலாசாரம் வலுவிழப்பது தவிர்க்க முடியாததாகிவிடும் என்பதனை மறுப்பதற்கில்லை. தொழிற் சங்கவாதிகள் இதனைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

ilakku-weekly-epaper-141-august-01-2021