அரசியல் யாப்பில் உள்ள அதிகாரங்களை 21 இன் மூலம் நிரந்தரமாக்கவும் நடைமுறைப் படுத்தவும் நாம் முயல வேண்டும் – ரெலோ

‘தெற்கின் அரசியல் நகர்வுகளில் கருத்து தெரிவிப்பதில் நேரத்தை வீணடிப்பதை தவிர்ப்பதே சிறந்தது’ என ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, “நிறைவேற்று அதிகார  ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான இருபத்தியோராம் திருத்த சட்ட மூல பரிந்துரைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன.

ஒருவரிடத்தில் அனைத்து அதிகாரங்களும் குவிந்து இருப்பதை எதிர்த்து தமிழ்த் தேசியத் தரப்புகள் ஒருமித்த அறிக்கை ஒன்றையும் அண்மையில் வெளியிட்டிருந்தோம். ஜனாதிபதியின் எதேச்சாதிகாரப் போக்கை  இல்லாதொழிக்க இது உதவும். நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்குவது ஜனநாயகத்தை உறுதி செய்யும்.

ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அல்லது பாராளுமன்றம் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வினை கடந்த காலங்களில் வழங்கத் தவறியுள்ளன.  இந்த திருத்தங்கள் ஊடாகத் தமிழ் மக்களுக்கு உறுதியாகப் பெற்றுத் தரக்கூடிய அதிகார விடயங்களை தமிழ் அரசியல் தரப்பினர் கையாள முன்வர வேண்டும்.

சமர்ப்பிக்கப்பட இருக்கும் இருபத்தியோராம் சட்டத் திருத்தம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதோடு ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கக்கூடிய அதிகாரப் பகிர்வினை நிரந்தரமாகவும்  மீீளப் பெறப்பட்ட அதிகாரங்களை மீண்டும் வழங்குவதற்கும் வழி செய்ய    வேண்டும். ஏற்கனவே அரசியல் யாப்பில் கூறப்பட்ட அதிகாரங்களை வலுப்படுத்தி,  மீள் நிறுத்தி  முற்றாகப் பகிர்வதற்கு  முன்மொழியப்பட இருக்கும் 21 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ்த் தரப்புக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

புதிய அரசியல் யாப்பின் மூலமே இதைச் செய்யமுடியும், மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற பல சாக்கு போக்கினை ஆளும் தரப்பினர் சொல்ல முற்படுவார்கள்.  ஆனால் ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள விடயங்களை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்துவதற்கு புதிய அரசியல் யாப்பு அல்லது மக்கள் வாக்கெடுப்பு அவசியமில்லை.  திருத்தங்களின் மூலமே அவற்றை செய்து கொள்ள முடியும்.

அரசியல் யாப்பில் இல்லாத நிறைவேற்று அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு 20 ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய போது மக்கள் வாக்கெடுப்பு  தேவைப்படவில்லை.  ஆனால் தமிழ் மக்களுக்கு ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள விடயங்களை நடைமுறைப் படுத்துவதற்கு அல்லது அதிகாரங்களை வலுப் படுத்துவதற்கு மக்கள் வாக்கெடுப்பு தேவை எனக் கூறி தப்பித்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்?

புதிய அரசியல் யாப்பு, பொதுஜன வாக்கெடுப்பு என்பன நாம் கோருகின்ற நிரந்தரமான சமஸ்டி முறையான அரசியல் தீர்வை வழங்குவதற்கே அவசியம் என்பதை தமிழர் தரப்பு வலியுறுத்த வேண்டும்.

தெற்கிலே ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலைகளில்  ஆர்வத்தோடு தினமும் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்து வருவது தமிழ் மக்களுக்கு  நலன் பயக்காது.  அங்கு ஆக்ரோஷத்தோடு எதிர்ப்பு கருத்து தெரிவிப்பதும் பிரேரணைகளை முன்வைப்பதும் அவர்களோடு கலந்துரையாடல்களில் ஈடுபடுவதும் ஒருபுறம் இருக்க கொண்டு வரப்பட இருக்கும் 21ம் திருத்தத்தில்  ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள அதிகாரங்களை முற்றாக பகிர வலியுறுத்த நாம் முயல்வது ஆக்கபூர்வமானதாக அமையும்.

ஏற்கனவே அரசியல் யாப்பில் அதிகாரங்கள் பல வழங்கப் பட்டு உள்ளன.  அவை நிரந்தரமாக்கப் படவும் இல்லை. பகிரப் படவும் இல்லை. முற்றாக நடைமுறைப் படுத்தப் படவும் இல்லை.  இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால் அரசியல் யாப்பில் உள்ள விடயங்கள் நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளியை காண்கிறோம்.  ஜனாதிபதி முறைமையில் அரசியல் யாப்பில் சொல்லப்பட்ட  விடயங்களை அரசாங்கம் முற்றுமுழுதாக நடைமுறைப் படுத்துகிறது. ஆனால் அதிகாரப் பகிர்வு என்று வருகின்ற பொழுது இருப்பதையே நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் பின் நிற்கின்றது.

ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ளவற்றுக்கும்  நடைமுறைப் படுத்துவதற்குமான  இடைவெளியை சீராக்கி முற்றாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதை கையாள்வது எமது கடமை. ஏனெனில் எதிர்காலத்தில் சமக்ஷ்டி முறையான தீர்வு  அரசியல் யாப்பில் கொண்டு வரப் பட்டாலும் அது நடைமுறைப் படுத்துதில் பாரிய சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ள நேரிடும்.

இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில், சிறப்பாக ஒருமித்து நின்று கையாள்வதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளையும்  பாராளுமன்ற உறுப்பினர்களையும் தயவுடன் அழைக்கின்றோம்” என்றுள்ளது.

Tamil News