‘ஈழமக்களின் 1972 வரையான மீயுயர் இறைமையாளர் மேதகு 2வது எலிசபேத் மகாராணி காலமானமைக்கு இரங்குகிறோம்’

பிரித்தானிய அரசின் மகாராணியாக அதன் அரசவரலாற்றிலேயே மிக நீண்டகாலம் 70 ஆண்டுகள் விளங்கிய மேதகு 2வது எலிசபேத் மகாராணி அவர்கள் தனது 96வது வயதில் காலமான பிரிவுத்துயரில், பிரித்தானியத் தமிழர்கள் சார்பாகவும், ஈழத்தமிழர்கள் சார்பாகவும், ஈழத்தமிழர்களினதும் பிரித்தானியத் தமிழர்களினதும் தேசியத்தின் குரலாக விளங்கும் ‘இலக்கு’ ஊடகமும் பங்கேற்று, இரங்கலை, இன்றைய பிரித்தானிய அரசர் மேதகு 3வது சார்ள்ஸ் அவர்களுக்கும், அரசகுடும்பத்தினருக்கும், பிரித்தானிய மக்களுக்கும், 2வது எலிசபேத் மகாராணியின் மறைவால் கவலையுறும் அவரை அரசத்தலைவியாக இன்று வரை கொண்டுள்ள 11 நாடுகள் உட்பட்ட உலக மக்களுக்கும் தெரிவிக்கின்றது.

இலங்கைத் தீவு தமிழ் சிங்கள அரசுக்களைக் கொண்ட வரலாற்று இயல்புநிலையைக் கொண்டிருந்த காலத்தில் 1505இல் சிங்களர்களின் கோட்டே அரசையும், 1621 இல் 116 ஆண்டுகாலப் போராட்டத்தின் பின்னர் தமிழர்களின் யாழ்ப்பாண அரசையும் கைப்பற்றிய போர்த்துக்கேய காலனித்துவ ஆட்சியாளர்கள் வழியாகச் சிங்கள தமிழ் அரசுக்களின் இறைமைகள் ஐரோப்பிய காலனித்துவ ஆட்சிகளுக்குள் 443 ஆண்டுகள் உட்பட்டிருந்தமை உலகவரலாறு.

இதில் சிங்களவர்கள் 151 ஆண்டுகாலமும் தமிழர்கள் 35 ஆண்டுகாலமும் போர்த்துக்கேய அரசின் இறைமைக்குள்ளும், சிங்களவர்களும் தமிழர்களும் 140 ஆண்டுகள் டச்சு அரசின் இறைமைக்குள்ளும், இருதேச இனங்களும் 152 ஆண்டுகள் பிரித்தானிய அரசின் இறைமைக்குள்ளும் வாழ்ந்தனர்.

பிரித்தானிய அரசின் ஆணையில் 19.11.1944 இல் நியமிக்கப்பட்ட சோல்பரி அரசியலமைப்பு ஆணைக்குழுவின் சிங்களர்களுடன் எல்லாவிதத்திலும் சமஇறைமையார்களான ஈழத்தமிழர்களின் அரசியல் விருப்பைக் கவனத்தில் எடுக்காத தீர்மானங்களின் அடிப்படையில் இந்தியா சுதந்திரம் பெற்ற 15.08.1947 முதல் 20.09. 1947 வரை 36 நாட்கள் நடாத்திய இலங்கைப் பாராளுமன்றத்திற்கான முதலாவது பொதுத்தேர்தலில் 06.09.1946இல் தொடங்கப்பெற்ற ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்றதனால் அதன் தலைவரான டி. எஸ். சேனநாயக்காவை இலங்கையின் பிரதமராக ஏற்று 04.02.1948இல் பிரித்தானியா இலங்கைக்கு சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமையை நடைமுறைப்படுத்திச் சுதந்திரத்தை வழங்கியது.

ஆயினும் சோல்பரி அரசியலமைப்பின் 29(2) வது பிரிவின் படி இலங்கைப் பாராளுமன்றத்தில் மதங்களுக்கோ இனங்களுக்கோ எதிரான சட்டவாக்கங்கள் முன்னெடுக்கப்பட்டால் பாதிப்படைபவர்கள் பிரித்தானிய மீயுயர் நீதியமைப்பான பிரிவிக்கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யலாம் என்னும் அரசியலமைப்புப் பாதுகாப்பு இலங்கையின் மத இன சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் நூறாண்டுகளுக்கு மேலாக இலங்கையின் பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் உழைப்பாகவும் இலங்கையின் நிதிமுகாமைத்துவத்துத்தின் வர்த்தக விரிவாக்கத்தின் பங்காளர்களாகவும் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவழித் தமிழர்களின் குடியுரிமையைச் சிங்கள பௌத்த பேரினவாத அரசு பறித்த பொழுது முதலில் மேன்முறையீடு செய்யப்பட்டது.

ஆயினும் மலையக மக்களை இலங்கையின் அரசியல் அலகாக ஏற்க இயலாது என்ற சட்டவாதத்தை முன்வைத்த இலங்கை அரசாங்கத்திற்குச் சாதகமாக இலங்கை அரசாங்கம் செய்தது சரியென வழக்குத் தள்ளுபடியானது.

இலங்கைத் தமிழ் மக்கள் தங்கள் இனத்துவச் சகோதரர்களான மலைய மக்களின் மனித உரிமைக்காக இணைந்து போராடாமல் விட்டதன் வழி தங்களின் மனித உரிமைகளுக்கான பாதுகாப்பையும் இழக்கத் தொடங்கினர். ஆயினும் இந்தக்காலகட்டத்தில் திருகோணமலையில் பிரித்தானியக் கடற்படை தொடர்ந்தும் இருப்பதை விரும்பாத இரஸ்யா சோல்பரி அரசியலமைப்பின் 29(2) விதியின்படி இலங்கையின் மீயுயர் இறைமையாளர் மேதகு பிரித்தானிய அரசியே என இலங்கைக்குத் தனியான நாடாக உறுப்புரிமை கொடுக்கக் கூடாது என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தனது இரத்து அதிகாரத்தை இருமுறை பயன்படுத்தி 1948 முதல் 1956 வரை தடுத்து வந்தது. இதனால் 02.04. 1948க்குப் பின்னரும் தொடர்ந்து பிரித்தானிய அரசே இலங்கையின் மீயுயர் இறைமையாளராக இருந்தமை உலகுக்குத் தெளிவாக்கப்பட்டது.

மேலும் 1962இல் சிங்களம் மட்டும் சட்டத்தால் சிங்களம் படிக்காததால் அரசாங்கத்தால் வேலைநீக்கம் செய்யப்பட்டுப் பாதிப்புற்ற கோடிஸ்வரன் என்னும் எழுதுவினைஞர் பிரித்தானியப் பிரிவிக்கவுன்சிலுக்கு 1962இல் செய்த மேன்முறையீடு ஏழுவருடத்தின் பின்னர் 1969இல் பிரிவிக்கவுன்சிலால் அவருக்குச் சாதகமானமுறையில் இலங்கை அரசாங்கம் அவரை வேலைநீக்கம் செய்தது அரசியலமைப்புக்கு எதிரானது எனவும் அவருக்கு வேலைநீக்கக் காலத்துக்கான சம்பளத்தை அளித்து அவரை மறுபடியும் அதே வேலையில் பணிபுரிய அனுமதிக்க வேண்டுமெனவும் தீர்ப்பளித்தது. அத்துடன் இலங்கையின் உயர்நீதிமன்றத்துக்கு அரசியலமைப்புக் குறித்து நீதிவிசாரணை செய்யும் மேலதிகாரம் இல்லையெனவும் சிங்கள மட்டும் சட்டம் சட்டவலுவற்றது ஆகையால் அது உரிய திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் மீளவும் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் பிரிவிக்கவுன்சில் நெறிப்படுத்தியது. இவற்றை அக்காலத்தில் ஆட்சியில் இருந்த ஐக்கியத்தேசியக்கட்சி செயற்படுத்த மறுத்தது.

தொடர்ந்து 22.05. 1972இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான சுதந்திரக்கட்சியின் இடதுசாரிக் கட்சிகளுடான கூட்டரசாங்கம் மேதகு மகாராணி 2வது எலிசபேத் அவர்களை நாட்டின் தலைவியாக நியமித்த சோல்பரி அரசியலமைப்பையே வன்முறைப்படுத்தி இலங்கைப் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே நவரலங்கலாவில் இலங்கைத் தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களில் மிகப்பெரும்பான்மையானவர்கள் பங்குபற்ற மறுத்த அரசியலமைப்பு நிர்ணய சபையின் மூலம் சிங்கள பௌத்த குடியரசாக இலங்கையைப் பிரகடனப்படுத்தி, இலங்கைத் தமிழரை அரசற்ற தேசஇனமாக மாற்றினார். இதனால் மேதகு 2வது எலிசபேத் மகாராணி அவர்களிடம் 1952 முதல் 1972 வரை தொடர்ந்து இருந்து வந்த இலங்கைத் தமிழர்களிள் இறைமை சிங்கள பௌத்த ஸ்ரீலங்கா குடியரசு என்னும் தமிழர்களை ஆளும் அரசியலமைப்பு உரிமையை இழந்த ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களால் அபகரிக்கப்பட்டது.

இதனைக் குறித்து அக்கால இலங்கைத் தமிழ்த் தலைமைகள் பிரித்தானிய மக்களிடம் சனநாயக வழிகளில் இலண்டனில் போராட்டங்கள் நடத்தி தமக்கு உதவுமாறு கோராது விட்டமையால் மகாராணி அவர்களால் தலையீடுகளை மேற்கொள்ள இயலாத அனைத்துலக நிலையும் தோன்றியது.

ஆயினும் இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பாராளுமன்ற முறைமைகளின் அடிப்படையில் 1972ம் ஆண்டு அரசியலமைப்பை நிராகரித்து, காங்கேசன்துறைத் தேர்தலை அடையாளக் குடியொப்பமாக அன்றைய ஈழத்தமிழர்களின் அரசியல் தலைவர் தந்தை சா.ஜே.வே செல்வநாயகம் முன்னிறுத்தி அதில் வெற்றி மிகப்பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்று 1975இல் ஸ்ரீலங்காப் பாராளுமன்றத்தில் தந்தை செல்வநாயகம் அவர்கள் ஈழத்தமிழர்களின் தன்னாட்சிப் பிரகடனத்தைச் செய்து அதனை உலகுக்கு அறிவித்தமையும் இந்தத் தன்னாட்சிப் பிரகடனத்தை 1977 பொதுத்தேர்தலை மக்கள் குnடியாப்பமாக்கி ஈழத்தமிழர்கள் பெரும்பான்மை வாக்குகளால் ஏற்று இதனை ஸ்ரீலங்கா ஏற்காது விட்டால் அதனை வேறெந்த வழிகளிலும் அடைவோம் எனவும் அந்தத் தேர்தல் பிரகடனத்தில் உலகுக்கு அனைத்துலகச் சட்டங்களுக்கு ஏற்ப அறிவித்ததும் இதன் தொடர்ச்சியாக தமிழீழத் தேசத்தவர்கள் எனத் தம்மை உலகுக்கு பிரகடனப்படுத்தி தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தலைமையில் 1978 முதல் 2001 வரை நடைமுறை அரசை நடாத்தி அதற்கான உலகத் தீர்வை நோர்வே அமைதிப்பேச்சின் வழி பெறமுயற்சித்த தேசிய விடுதலைப்போராட்டத்தை ஸ்ரீலங்கா 2009 இல் 21ம் நூற்றாண்டின் உலகின் மிகக் கொரூரமான இனஅழிப்பின் மூலம் ஒடுக்கி மீளவும் தமது படைபல ஆக்கிரமிப்பின் மூலம் ஈழத்தமிழரை ஆளும் இன்றைய நிலையினைத் தோற்றுவித்தது இன்றைய வரலாறு.

12.09. 2022 இல் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா இந்த வரலாற்று உண்மைகளைத் தமக்குச் சாதகமாக உள்ள நாடுகளின் உதவியுடன் மூடிமறைத்து தேசிய அரசாங்கம், தேசிய சபை, புலம் பெயர் தமிழர்களுடன் பேச்சு எனப் பல இந்திரசாலத் தந்திரங்களாவ் அனைத்துலகச் சட்டங்களின் நடைமுறைப்படுத்தலில் இருந்து தப்பிக்க முயலும் இந்நேரத்தில் மேதகு 2வது எலிசபேத் மகாராணி அவர்களின் இழப்பின் பின்னணியில் அவர் 20 ஆண்டுகாலம் ஈழத்தமிழர்களின் இறுதிப் பிரித்தானிய இறைமையாளராக இருந்தார் என்ற உண்மையின் அடிப்படையில் 1972 முதல் இன்று வரை ஈழத்தமிழர்களின் இறைமை அரசற்ற தேச மக்களாக உள்ள ஈழத்தமிழர்களிடமே உள்ளது என்பதை உலகு உணரப் புலம்பெயர் தமிழர்கள் உழைக்க வேண்டும்.

ஈழத்’தமிழர்கள் தங்களின் மக்கள் இறைமையின் அடிப்படையில் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே முன்னெடுக்கும் தன்னாட்சி உரிமையின் வெளியகத் தன்னாட்சி உரிமையினை உலக நாடுகள் ஏற்பது ஒன்றே அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான மனித உரிமைகள் வன்முறைகள், யுத்தக்குற்றச் செயல்கள், மனிதயாத்திற்கு எதிரான குற்றங்ககள், பொருளாதாரக் குற்றங்கள் நடைபெறாது உரிய முறையில் அனைத்தலக நீதிமன்றத்தால் நெறிப்படுத்தப்பட உதவும் என்பதை உலகினர் மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு ஈழத்தமிழர்கள் சார்பாக குரல் கொடுக்கும் அனைத்து ஈழத்தமிழ் அமைப்புக்களும் உணர வேண்டிய நேரமிது.

ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை சிறுபான்மையினப் பிரச்சினையல்ல. அவர்களின் இறைமைப்பிரச்சினை. பிரிவினைப் பிரச்சினையல்ல. தீர்க்கப்படாத காலனித்துவ கால பிரச்சினையாக பிரித்தானிய அரசால் விடப்பட்டு இன்று வரை ஐக்கிய நாடுகள் சபையால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாக உள்ளது.

இந்த வரலாற்று உண்மைகளை இன்றைய பிரித்தானிய அரசர் மேதகு 3வது சார்ள்ஸ் அவர்களுக்கு மீள்நினைவுறுத்தி அவரது தாயார் மேதகு 2வது எலிசபேத் அவர்களின் 1972ம் ஆண்டுவரையான 20 ஆண்டுகால ஆட்சி உட்பட மொத்தம் 176 ஆண்டுகாலம் பிரித்தானிய இறைமையில் இருந்த ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பான அமைதி வாழ்வை அவர்களின் பிரிக்கப்பட இயலாத தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அவர்கள் சனநாயக வழிகளில் மீளவும் பெற அவரின் மீயுயர் இறைமையின் கீழுள்ள பிரித்தானிய அரசு உதவ அவர் நெறிப்படுத்த வேண்டுமென இலக்கு ஆசிரிய குழு வேண்டுகிறது.

இலக்கு ஊடக ஆசிரிய குழு