Home செய்திகள் அழிவடையும் உயிரினங்களை நாம் காப்பாற்ற வேண்டும் இல்லையேல் எம்மை காக்க யாரும் வரமாட்டார்கள் – ஆர்திகன்

அழிவடையும் உயிரினங்களை நாம் காப்பாற்ற வேண்டும் இல்லையேல் எம்மை காக்க யாரும் வரமாட்டார்கள் – ஆர்திகன்

அமேசன் மழைக்காடுகள் (The Lungs Of The Earth) – Geographic Analysis

இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் பூமியில் உள்ள உயிரினங்களின் அழிவை தடுத்து நிறுத்தி அதனை மீண்டும் வழமையான நிலைக்கு கொண்டுவரப்போவதாக இந்த வாரத்துடன் நிறைவடைந்த கோப்-15 எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் உயிரினங்களின் பரம்பல் தொடர்பான மாநாட்டில் ஏறத்தான 200 நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

கடந்த 7 ஆம் நாள் முதல் 19 ஆம் நாள் வரையிலும் கனடாவில் உள்ள மொன்றியல் நகரில் இந்த மாநாடு அதன் தலைவர் குவாங் ரொன்கூ தலைமையில் இடம்பெற்றது. முன்னர் சீனாவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டபோதும் அது சீனாவில் உருவாகியுள்ள கோவிட் நெருக்கடி காரணமாக பின்னர் கனடாவுக்கு மாற்றப்பட்டிருந்தது.

 அபிவிருத்தியடைந்த நாடுகள் கடுமையான விதிகளை பின்பற்ற முனைந்தபோதும், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் தமது நடவடிக்கைகளுக்கான வளம் பகிரப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டதனால் கடந்த இரண்டு வாரமும் மிகவும் கடுமையான வாதங்கள் இடம்பெற்றிருந்தன.

இறுதியில் 2030 ஆம் ஆண்டுக்கு முன்னர் 30 விகிதமான நிலவளமும், 30 விகிதமான கடல் வளமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உடன்பாடு எட்டப்பட்டது. இந்த இலக்கை எட்டுவதற்கு அபிவிருத்தியடைந்த நாடுகள் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு 30 பில்லியன் டொலர்களை உதவியாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயிரினங்களின் பரம்பல் என்பது உலகில் வாழும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணங்கிகள் என அனைத்து உயிரினங்களின் பரம்பலும் வாழ்தகவுமாகும். இந்த உயிரினங்களின் இருப்பு என்பது மனிதர்களின் வாழ்வுக்கும், அவர்களின் பொருளாதாரத்திற்கும், மருத்துவ தேவைகளுக்கும் இன்றியமையாதது.

ஒரு உயிரினத்தின் முற்றான அழிவு என்பது பல உயிரினங்களின் இருப்பை பாதிப்பதுடன், மரபணுத் தொகுதியையும் நாம் இழந்து விடுகின்றோம். எனவே தான் பூமியில் உள்ள உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் அவர்களின் வாழ்க்கைத்தர மேம்பாடு என்பன பெருமளவான இயற்கை வளங்களை பயன்பாட்டுக்கு உள்வாங்குவதால் உலகில் ஏனைய விலங்குகளுக்கும், தாவரங்களுக்குமான இருப்பிடம் குறைந்து செல்வதும், சூழல் மாசடைவதும் மிகப்பெரும் சவலாக மாற்றம் பெற்று வருகின்றது.

1970 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரையிலும் உலகில் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கை 69 விகிதத்தால் குறைவடைந்துள்ளதாக உலகின் உயிரினங்கள் தொடர்பான ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை வீழ்ச்சி ஏற்கனவே மனிதர்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. உயிரினங்களின் இருப்பு என்பது காலநிலை மாற்றத்தினை கட்டுப்படுத்தவும் அவசியம், ஆனால் அதன் வீழ்ச்சி காலநிலை மாற்றத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த உடன்பாடு சூழலுக்கும், மக்களுக்கும் மிகவும் நன்மையானது எனவே அதனை நடைமுறைப்படுத்த நாடுகளும், அமைப்புக்களும், நிறுவனங்களும் முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளார் றோயல் அமைப்பை சேர்ந்த பறவைகள் பாதுகாப்பு பிரிவின் அனைத்துலக கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரான ஜேர்ஜினா சன்டலர். எனவே சூழலை பாதுகாப்பதன் மூலம் உலகில் வாழும் உயிரினங்களை பாதுகாப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என்பதுடன், உயிரினங்கள் வாழும் வாழ்விடங்களின் அழிவையும் தடுக்க வேண்டும்.

காடுகள் மற்றும் மலைகள் பெருமளவில் அழிக்கப்படுவதுடன், கடல் வளமும் அதிக மாசுபடுதலை சந்தித்துள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மனிதர்களின் அண்மைக்கால நடவடிக்கைகளால் உலகம் அதன் இறுதி எல்லைப்புள்ளிக்கு சென்றுவிட்டதாகவும் இதனால் காட்டு விலங்குகள் மனிதர்களின் பகுதிக்குள் ஊடுருவுவதால் கொரோனோ, சார்ஸ் எபோலா மற்றும் எச்.ஜ.வி போன்ற வைரஸ்சுகள் பரவுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

உயிரினங்களை பாதிக்காதவாறு அவற்றின் மரபணு மூலக்கூறுகளை கணணிகளில் சேமிப்பதன் மூலம் மருந்து மற்றும் உணவுத் தேவைகளுக்கு அவற்றை செயற்கையாக பயன்படுத்த முடியும் என்ற கருத்து அண்மைய கூட்டத்தொடரில் வலுப்பெற்றிருந்தது. அதேசமயம், உயிரினங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு ஆண்டுதோறும் தமக்கு 100 பில்லியன் டொலர்கள் தரப்பட வேண்டும் என பிரேசில் உட்பட 23 நாடுகள் தெரிவித்துள்ளன. மேற்குலக நாடுகள் போருக்காக செலவிடும் நிதியுடன் ஒப்பிடும்போது இது குறைவானதே.

கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டத்தில் 196 நாடுகளை சேர்ந்த 10,000 இற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் 100 இற்கு மேற்பட்ட அமைச்சர்கள் சமூகமளித்திருந்தனர். பழங்குடியின மக்கள், பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக அமைப்புக்கள் என்பனவும் பார்வையாளர்களாக பங்கேற்றிருந்தனர். பங்கொலியன், சிறுத்தை புலி மற்றும் பவழப்பாறைகள் போன்ற விரைவாக அழிந்துவரும் உயிரினங்களை பாதுகாப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

எகிப்தில் அண்மையில் இடம்பெற்ற காலநிலை மாநாடான கோப்-27 என்ற மாநாடும் தற்போதைய மாநாடும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ளவை. அதாவது காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதன் மூலமும் உயிரினங்களை அழிவில் இருந்து பாதுகாக்க முடியும்.

இந்த மாநாட்டின் மிகவும் முக்கியமான 3 நோக்கம் என்பது. உயிரினங்களை அழிவில் இருந்து காப்பாற்றுவது. வளங்களை எதிர்கால சந்ததிகளை பாதிக்காதவாறு பயன்படுத்துவது. உயிரினங்களின் மரபணுக்களை நேர்மையாகவும், சமமாகவும் பகிர்ந்து பயன்படுத்துவது என்பதாகும்.

இவை தவிர மாசுக்களை கட்டுப்படுத்துதல், ஆபத்தான இரசாயணப் பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்துதல், விவசாயத்தில் கவனம் செலுத்துதல் போன்ற விடையங்களும் அங்கு ஆராயப்பட்டன.

தற்போது உலக மக்களுக்கு உணவு கிடைப்பதே மிகவும் பிரச்சனையாக மாற்றி வருகின்றது. 828 மில்லியன் மக்கள் பட்டினியை நோக்கி உள்ளனர். 2.3 பில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளை எதிர்நோக்குகின்றனர் என 2022 ஆம் ஆண்டு அறிக்கையில் ஐ.நா தெரிவித்துள்ளது. உலக உணவு உற்பத்தியில் 17 விகிதம் வீணடிக்கப்படுகின்றது. அது மட்டுமல்லாது  தற்போதைய உணவு உற்பத்தி முறை, அதனை விநியோகித்தல் என்பன உயிரினங்களின் அழிவில் பெரும் பங்கை வகிக்கின்றன.

இந்த உணவு உற்பத்தி முறை 80 விகித காடழிப்பு, 29 விகித உலகை வெப்பமாக்கும் வாயுக்களை உற்பத்தி செய்வதுடன், 70 விகிதமான தரைவாழ் உயிரினங்கள் மற்றும் 50 விகிதமான கடல் வாழ் உயிரினங்களின் அழிவுக்கும் காரணமாகின்றது. எனவே இந்த முறையும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என ஆராயப்பட்டது.

அதாவது மனிதர்கள் தமது தேவைகளை குறைத்து, எதிர்கால சந்ததியினருக்கு ஒரு வளமான வாழ்வை இந்த பூமியில் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் இல்லையேல் இந்த பூமி எல்லாவற்றையும் அழித்து மீண்டும் தன்னை ஆரம்பத்தில் இருந்து உருவகித்துக் கொள்ளும் என்பதே நியதி.

Exit mobile version