‘கண் முன்னால் ஒப்படைக்கப்பட்டவர்கள் இல்லை’ என்ற இராணுவத்தின் பதிலை ஏற்க முடியாது- செல்வம்

கண் முன்னால் ஒப்படைக்கப்பட்டவர்கள் இல்லை என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கான நியாயம் கிடைக்காதவரை போராட்டம் தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,”நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிரோடு இல்லை என அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அவரிடம் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட, கண் முன்னாலே ஒப்படைக்கப்பட்ட அத்தனை பேரும் படுகொலை செய்யப்பட்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்பதனை இந்த அரசாங்கம் ஒத்துக்கொள்கின்றதா? அதனை அமைச்சர் வெளிப்படையாக கூற வேண்டும்.

தனக்கு பிரச்சினை வரக்கூடாது என்ற ரீதியிலே அவர்கள் உயிரோடு இல்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே கண் முன்னால் ஒப்படைக்கப்பட்டவர்கள் எங்கே என்று போராடி கொண்டிருக்கின்ற தாய்மார்களுக்கு இது பதிலாக அமையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.