ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் மறைவு- தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இரங்கல்

May be an image of 1 personஅண்மைய தசாப்தங்களில் உருவெடுத்த இலங்கை ஊடகத்துறையின் ஆளுமைகளில் ஒருவரான சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகத்தினை நிரந்தரமாக இழந்திருப்பது மீளமுடியாத துயரில் உறையச் செய்துள்ளது என்று தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளது.

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரும், முன்னாள் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான பி.மாணிக்கவாசகத்தின் மறைவு  எம்மை மீளமுடியாத அதிர்ச்சிக்குள்ளும் ஆழ்ந்த கவலைக்குள்ளும் உறையச்செய்துள்ளது.

1998ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டு விடுதலையாகியதன் பின்னர் தமிழ் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை மையப்படுத்தி சங்கமொன்றை உருவாக்க வேண்டுமென்ற சிந்தனைகளைக் கொண்டிருந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தார்.

அத்துடன், குறித்த சிந்தனையை செயல்வடிவப்படுத்துவதில் ஏனைய ஊடகவியலாளர்களுடன் தோளோடு தோள்நின்று உழைத்தார். இதன் பயனாக தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உருவாகியது. அதில் அவர் இரு தடவைகள் தலைமைப்பதவியை ஏற்றுச் செயற்பட்டிருந்தமையும் வரலாறு.

வீரகேசரி, ரொய்ட்டர்ஸ், பி.பி.சி. உள்ளிட்ட பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு தனது அந்திம காலம் வரையில் அறிக்கையிட்டு வந்திருந்த அவர் போர்க்காலம் உள்ளிட்ட விசேட நிலைமைகளில் மிகவும் காத்திரமான ஊடகப்பணியை துணிச்சலாக  ஆற்றியிருந்தார்.

பத்திகள், கட்டுரைகள், விசேட கள அறிக்கைகள் என்று பல்வேறு பேசவல்ல விடயங்களை வெளிக்கொண்டுவந்திருந்த இவர் ஊடகத்துறைக்கு அப்பால் பல்பரிமாணங்களைக் கொண்டவராகவும் திகழ்ந்தார்.

அதுமட்டுமன்றி, பாரம்பரிய ஊடகத்துறையின் ஊடாக ஊடகத்துறைக்குள் பிரவேசித்த அவர், தொடர்ந்த தசாப்தங்களில் நவீன ஊடகங்களிலும் பணியாற்றிய பெருமையையும் ஒருங்கே கொண்டிருக்கின்றார். பல்வேறு சர்வதேச பயிற்சிகளைப் பெற்றுக் கற்றறிந்தவராக விளங்கிய அவர், இலங்கையில் பல பாகங்களிலும் இளம் ஊடகவியலாளர்களின் வளர்ச்சிக்காக பயிற்சிப்பட்டறைகளில் பங்கேற்று கற்பித்தல்களை மேற்கொண்டதோடு, தனிப்பட்ட வகையிலும் வழிகாட்டியாகச் செயற்பட்டுள்ளார்.

அதே போல்,ஊடகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த பெருமகனை இழந்துவிட்டோம். அவருடைய வாழ்க்கை அனுபவங்கள் வழிகாட்டல்கள் எதிர்கால ஊடகத்துறையினருக்கு உத்வேகத்தைக் கொடுக்கட்டும் என கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம்  மறைந்த மூத்த ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் அவர்களின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளது.