Home செய்திகள் சுமந்திரன் தலைமையிலான குழு வோஷிங்டனில் முக்கிய பேச்சு

சுமந்திரன் தலைமையிலான குழு வோஷிங்டனில் முக்கிய பேச்சு

சுமந்திரன் தலைமையிலான குழு வோஷிங்டனில்
அமெரிக்கா சென்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்ட நிபுணர்கள் குழு மற்றும் உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள் குழு ஆகியவை இரண்டும் ஒன்றிணைந்து வொஷிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த மூன்று நாட்களில் பல தரப்பினருடன் பல சுற்றுப் பேச்சுக்களில் ஈடுபட்டன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமந்திரன் தலைமையிலான குழு வோஷிங்டனில் இருந்து இன்று நியூயோர்க் செல்கின்றது. அங்கு ஐ.நா. அதிகாரிகளுடன் இன்றும் நாளையும் பல மட்ட கலந்தாய்வுகளில் அக்குழு ஈடுபடும் எனத் தெரிகின்றது. திங்களன்று பத்துத் தரப்புகளுடனும், செவ்வாயன்று பத்து தரப்புகளுடனும், நேற்று ஐந்து தரப்புகளுடனும் இக்குழு சந்திப்புக்களை நடத்தி கலந்தாய்வுகளை மேற்கொண்டது.

இந்தச் சந்திப்புகள், கலந்தாய்வுகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை வெளியிடும் எனத் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அறிய வருகின்றது. அதனால் தமிழர் தரப்புப் பிரதிநிதிகள் இச்சந்திப்புகள் தொடர்பில் தங்கள் பக்கத்தில் இருந்து அறிவிப்புகள் மற்றும் தகவல் வெளியீடுகளைத் தவிர்த்து வருகின்றனர் எனவும் கூறப்பட்டது.

கடந்த மூன்று நாள்களாக நடந்த சந்திப்புகளில் தமிழர் தரப்பில் மொத்தம் ஒன்பது பிரதிநிதிகள் ஒன்றாகக் கலந்துகொண்டனர். கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, கனகேஸ்வரன் மற்றும் திருமதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே.

உலகத் தமிழர் பேரவையின் சார்பில் கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒவ்வொரு பிரதிநிதியும், அமெரிக்காவில் இருந்து மூவருமாக மொத்தம் ஆறு பேர் பங்கு பற்றுகின்றனர். அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பல்வேறு திணைக்களங்களின் இரண்டாம் நிலை அதிகாரிகள், தமது அரசின் இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பு நிலைப்பாடுகள் சம்பந்தமான தீர்மானங்களை எடுப்பதற்காக தமிழர் தரப்புடன் தொடர் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித் சிங் சந்து நேற்று முன்தினம் இரவு, கூட்டமைப்புப் பேச்சாளர் சுமந்திரனை அழைத்து இரவு விருந்துடன் சந்திப்பு நடத்தினார். அமெரிக்கத் தரப்புடன் தமிழ்ப் பிரதிநிதிகள் தற்போது நடத்தும் கலந்தாய்வுகள் குறித்து சுமந்திரனிடம் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் விவரமாகக் கேட்டறிந்திருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இச்சந்திப்பில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் அமெரிக்க நேரப்படி நேற்றுப் புதன்கிழமை பகல் (இலங்கை நேரப்படி நேற்றிரவு) பல்வேறு பேச்சுக்களை முடித்துக் கொண்டு சுமந்திரன் நியூயோர்க் புறப்பட்டார். அவருடன் வொஷிங்டன் சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரனும், திருமதி நிர்மலா சந்திரஹாசனும் வொஷிங்டனிலேயே தங்கியுள்ளனர்.

நியூயோர்கிற்கு சுமந்திரனுடன் உலகத் தமிழர் பேரவையின் ஓரிரு பிரதிநிதிகளும் சேர்ந்து செல்லக் கூடும் எனத்தெரிவிக்கப்பட்டது. நியூயோர்க்கில் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி, இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி மற்றும் ஐ.நாவின் உயர்மட்ட அலுவலர்களோடு சுமந்திரன் குழுவினர் சந்திப்பில் ஈடுபடுவர் எனத் தெரிகின்றது.

நியூயோர்க் பேச்சுக்களை முடித்துக் கொண்டு சுமந்திரன் குழு ஞாயிறன்று மீண்டும் வொஷிங்டன் திரும்பும். அடுத்த நாள் 22ஆம் திகதி திங்கட்கிழமை தமிழர் தரப்பின் ஒன்பது பிரதிநிதிகளும் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உயர்மட்ட அதிகாரியுடன் பேச்சுக்களை நடத்துவர். அத்தோடு தமிழர் தரப்பின் இந்த அமெரிக்க விஜயம் முடிவுக்கு வரும் எனத் தெரிகின்றது.

அடுத்த நாள் 23ஆம் திகதி கனடாவின் ஒட்டாவா நகரில் கனேடிய வெளி விவகார அமைச்சு அதிகாரிகளுடனும் – அதன் பின் இரண்டு நாள்கள் கழித்து 25ஆம் திகதி லண்டனில் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடனும் – சுமந்திரன் எம்.பி. – சாணக்கியன் எம்.பி. ஆகியோரைக் கொண்ட இரு பிரதிநிதிகள் குழு பேச்சு நடத்தவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version