இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் விசாரணைசெய்யப்படவேண்டும்: நோர்வே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி தெரிவிப்பு.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள்

நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இன்றைய தினம் (26-9-21) இணையவழியில் நடத்தப்பட்ட முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளியக விசாரணை நடைபெற வேண்டும். உண்மைகள் கண்டறியப்படுவது அவசியமானது என்று யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கம்சாயினி அழுத்தந் திருத்தமாகத் தெரிவித்தார்.

ஒன்றரை மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நோர்வே தமிழ் மக்கள் அரசியலில் ஏற்கனவே அறியப்பட்டவரான பாலசிங்கம் யோகராஜா (பாஸ்கரன்) நெறிப்படுத்தினார்.

ஊடகச் சந்திப்பின் ஆரம்பத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் தன்னை கம்சாயினி அறிமுகச் செய்திருந்தார். 1991ம் ஆண்டு தனக்கு  3 வயதாக இருந்த போது தனது பெற்றோருடன் நோர்வேயில் ஹமபெஸ்ற் என்ற நகருக்குக் குடிபெயர்ந்தாகவும், பின்னர் தமிழ்மொழியை முறையாகக் கற்கும் நோக்குடன் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவுக்கு இடம் மாறியதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது குடும்பம் எந்தவிதமான அரசியல் பின்னணியையும் கொண்டிருக்கவில்லை என்றும் ஒஸ்லோவிலுள்ள சமூகங்களுக்கிடையில் தான் சந்தித்த ஏற்றத்தாழ்வுகளும் அரசியலுக்குள் தான் வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.

பெண்கள் வலுவூட்டல் தொடர்பாக ஈராக், மொஸாம்பிக், பாலஸ்தீனா, சிறீலங்கா போன்ற பல நாடுகளுக்குச் சென்று அங்கே பெண்கள் வலுவூட்டல் நிகழ்வுகளில் கலந்துகொண்டதாகவும் அவர் மேற்குறிப்பிட்ட சந்திப்பில் குறிப்பிட்டார்.

2011ம் ஆண்டு ஜூலை மாதம் நோர்வேயில் தொழிற்கட்சியின் இளையோர் பங்குபற்றிய ஒரு நிகழ்வில் அண்டேஸ் பிரைவிக்கினால் 69 இளையோர்கள் கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்த கம்சி அவ்வேளையில் இளையோரின் நிறைவேற்றுக் குழுவில் தான் அங்கம் வகித்ததாகவும் தனது நண்பர்கள் பலரை அந்த நிகழ்வில் இழந்ததாகவும் உணர்வுபூர்வமாகத் தெரிவித்தார்.

இலங்கையுடனான பொருண்மிய உறவை நோர்வே அரசு தொடர்ந்து பேண வேண்டும் என்றும் பொருண்மிய உதவிகளைச் செய்யும் போது அனைத்து மக்களுக்கும் அந்தத் திட்டங்கள் சென்று சேர்வதை உறுதிப்படுத்தும் வாய்ப்பு அப்போது தமக்கும் கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனது முதன்மைப்பணி தன்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய நோர்வே மக்களுக்குப் பணிபுரிவது என்பதை வலியுறுத்திய கம்சாயினி, தனது கட்சியான தொழிற்கட்சியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான பணிகளை முன்னெடுக்கத் தனக்கு இருக்கும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தத் தவறவில்லை. அவ்விடயத்தில் யாராயிருந்தாலும் அவர்களுடன் பேசுவதற்குத் தான் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021